``எங்க வீட்ல உள்ள பெரியவங்க கூட அவங்களுடைய இயலாமையைக் கடவுள்கிட்ட தான் காட்டுவாங்க. ஆனா, நான் என்னைக்குமே கடவுள் மீது பழி சொல்ல மாட்டேன். நான் போகிற வழியில் என் காலில் முள் குத்தினால்கூட இந்த வழியில் ஏதோ பிரச்னை எனக்கு வரப்போகுது... அதைக் கடவுள் மறைமுகமாகச் சொல்றார். எச்சரிக்கையாக இந்தப் பாதையைக் கடக்கணும்னு தான் நான் நினைப்பேன். அப்படித்தான் அவர் இன்னைக்கு வரைக்கும் எனக்கு வழிநடத்திட்டு இருக்கிறார்!" என்றவாறு பேசத் தொடங்கினார் திவ்யா கிருஷ்ணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். விஐபி பூஜையறை பகுதிக்காக அவரை சந்தித்து பேசினோம்.

"என்னோட குலதெய்வம் பச்சையம்மன். இஷ்ட தெய்வம் என்றால் சிவன் பிடிக்கும். ஆனா, கடந்த இரண்டு வருஷமா சாயிபாபாவின் தீவிர பக்தை ஆகிட்டேன். கருமாரி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வருவேன். எனக்குக் கோயிலில் கொடுக்கக்கூடிய வெண் பொங்கல் பிரசாதம் ரொம்பப் பிடிக்கும்.
சிறு வயதிலிருந்தே கோயில்களுக்குப் போறது, சாமிப் பாடல்கள் பாடுறதுன்னு இருப்பேன். அது இப்ப வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. சிலர், கோயிலுக்குப்போய் சாமியை வழிபடுவாங்க.. சிலர், வீட்டு பூஜையறையில் வழிபடுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுள் தூணிலும் இருப்பார்... துரும்பிலும் இருப்பார். தினமும் நைட்டு 12 மணிக்கு என் படுக்கையில் உட்கார்ந்து சாமி கும்பிடாமல் எனக்கு தூக்கமே வராது. என் பூஜையறையில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்கிறேன். அதைத்தான் நான் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்" என்றவரிடம் உங்கள் வாழ்வில் நடந்த அற்புதம் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள் எனக் கேட்டோம்.

"என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை நான் அற்புதமாகத்தான் பார்க்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் போயிருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அங்கே நேரடியாக சிவனைப் பார்த்தேன். அவருடைய மொத்த உருவத்தையும் பார்த்துட்டு ஒரு வாரம் காய்ச்சலில் இருந்தேன். அதை நான் என் வாழ்வில் நிகழ்ந்த இணையற்ற அற்புதமாகத்தான் பார்க்கிறேன். மனுஷங்க வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. இன்றைக்கு நாம் உயிரோட இருக்கிறோம் என்பதைக்கூட கடவுள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதமாகத்தான் பார்க்கிறேன்" என்றவரிடம் சாயிபாபா மீது ஈடுபாடு வந்தது எப்படி என்பது குறித்துக் கேட்டோம்.
"ஆரம்பத்தில் சாயிபாபா எனக்குப் பிடிக்கவே இல்லை. ஷூட்டிங் போகும்போது அவருடைய கோயிலைத் தாண்டிப்போகும் போதெல்லாம் இவரையெல்லாம் சாமியா நினைச்சுக் கை எடுத்துக் கும்பிடணுமான்னுலாம் நினைச்சிருக்கேன். நான் ஏன் அப்படி நினைச்சேன்னு கூட எனக்குத் தெரியல. அப்படி நினைச்ச எனக்குள்ள என்ன மாற்றம் நிகழ்ந்ததுன்னும் தெரியல. என் வாழ்க்கையில் சாயி, சாயினு சொல்ற அளவுக்கு என்னை மாத்திட்டார். எப்படி அவரை வழிபட ஆரம்பிச்சேன்... எப்படி அவர் பெயரை சொல்லிட்டே இருக்கேன்... எதுவுமே எனக்கு தெரியல. இப்படி அவர் என்னை மாத்தியிருக்கார்னு நினைக்கும்போதே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. இந்த அளவுக்கு நான் உறுதியான மன பலத்துடன் இருக்கேன்னா அதுக்கு நிச்சயம் சாயிதான் காரணம். சாயி அருளால் என் வாழ்க்கையில் நல்லது மட்டும் தான் இதுவரை நடந்திருக்கு.. இனியும் நடக்கும்!' என்றார்.

அவருடைய பூஜை அறை குறித்துப் பல விஷயங்களை திவ்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
மேலும் படிக்க ``சாயிபாபாவை, சாமியா நினைச்சு கும்பிடணுமான்னு நினைச்சேன்" - ஆன்மிக அனுபவம் பகிரும் திவ்யா கிருஷ்ணன்!