தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படையைச் சேர்ந்த திருமணமாகாத பெண் காவலர் ஒருவர், நிலுவையில் உள்ள ஊதிய பிரச்னைகளை பெற்றுத்தர வேண்டி. ஹரிகரனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதில், இருந்து அந்த பெண் போலீஸாருக்கு ஹரிகரன் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் சென்றதும், அதனை உயர் அதிகாரிகளிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் அந்த பெண் போலீஸ். அதனைத்தெரிந்துக்கொண்ட ஹரிகரன், `என்னைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாயா?’ என்று கடுமையான வார்த்தைகளால் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ் பெரம்பலூர் எஸ்.பி மணியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
அப்போதைய திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா விசாரணை நடத்தி, ஹரிகரனை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், அவர் புதுக்கோட்டைச் செல்ல மறுத்ததோடு மீண்டும் அதே இடத்திற்கு வருவேன் என்றும், அந்த பெண் போலீஸாரை விடமாட்டேன் என்று சக போலீஸாரிடம் எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கிறார்.
இதனால் ஹரிகரன் துறை ரீதியிலான நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் புகார் குறித்து விசாக குழு நடத்திய விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஹரிகரனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெரம்பலூர் காவல்துறை வரலாற்றில் அலுவலக கண்காணிப்பாளர் நிலையில் பதவியிலுள்ள ஒருவருக்கு பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அதற்காகக் கட்டாய ஓய்வு தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
யார் இந்த ஹரிகரன் என்று பெரம்பலூர் போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஹரிகரன் பெண்கள் விவகாரத்தில் வீக். இவர், ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்த பெண் உதவியாளருக்கு பாலியல் ரீதியிலான டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரை விசாரித்த விசாகா குழு இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வினை ஒத்திவைத்தது. மீண்டும் மற்றொரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்தாக சிக்கிய வழக்கில் தான் டி.ஐ.ஜி சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களிடமும்,பெண் போலீஸாரிடம் தவறாக நடந்துகொண்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற நிலை வந்தால் மட்டுமே இது போன்ற தவறு குறையும்” என்கின்றனர் ஆவேசமாக .
மேலும் படிக்க பெரம்பலூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி!