மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் நிறைவேறவில்லை. என்றாலும், பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 33% இட ஒதுக்கீட்டை, ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 20 மாநிலங்கள் 50% ஆக உயர்த்தியுள்ளது பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமான தொடக்கம்.
இன்னொரு பக்கம், வார்டு கவுன்சிலர்கள் முதல் மக்களவை உறுப்பினர்கள் வரை, அரசியல் அதிகாரங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது நம் தேசத்தில் இன்னும் சம்பிரதாயமாகவே இருப்பதும், அப்படி தேர்ந்தெடுக்கப் படும் பல பெண்களும் அவர்கள் வீட்டு ஆண்களால் கைப்பாவையாகவே பயன்படுத்தப்பட்டு, அவர்களின் அப்பா, சகோதரர், கணவர், மகன் என அவர்கள் வீட்டு ஆண்களே அவர்களை இயக்கும் அவலமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில்தான், அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது ஒரு சம்பவம். மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பதில், அவர்களின் கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் தார், தாமோ, சாகர், பன்னா மற்றும் ரெவா பகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் தங்களது பதவியேற்பு விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள், அப்பா, சகோதரர்கள் என வீட்டு ஆண்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் வெற்றிபெற்ற சில பெண்கள் விழாவுக்குக்கூட வரவில்லை; அவர்கள் வீட்டு ஆண்களே பதவியேற்றுக்கொண்டார்கள் என்பது அடுத்த அவலம்.
எல்லாவற்றுக்கும் மேல், பஞ்சாயத்து அலுவலகங்களில் நடந்த இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சிகளில், பதவிப் பிரமாணம் செய்து வைத்த அரசு அதிகாரிகளும், வெற்றிபெற்ற பெண்களுக்குப் பதில் அவர்கள் வீட்டு ஆண்கள் பதவிப்பிரமாணம் எடுத்ததை அனுமதித்துள்ளனர்; சொல்லப்போனால் முன்னின்று நடத்தி வைத்துள்ளனர். அரசு இயந்திரத்தின் மிகப்பெரிய அவச்செயல், தோல்வி இது. வெளியான வீடியோ சர்ச்சையாக, இது தொடர்பாகச் சிலர் புகார் செய்ய, `சட்டத்துக்கு எதிரான இந்தப் பதவியேற்பை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு, ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலர் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும், இதுபோன்று இன்னொரு முறை நடக்காமல் இருப்பதற்கான அறிவுறுத்தல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏதோ மத்தியப்பிரதேசத்தில் மட்டும் நடந்த அவலமல்ல. சமீபத்தில் நம் மாநிலத்தில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்பட்டபோதிலும், பெண் வேட்பாளர்களின் பெயர், கட்சி சின்னத்துடன் அவர்கள் வீட்டு ஆணின் புகைப்படம் கொண்டு அச்சடிக்கப்பட்டு வாக்கு கேட்ட போஸ்டர்கள், பேனர்களைப் பார்த்து அதிர்ந்தோம்.
ஆணாதிக்க எண்ணங்கள் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற நாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு 50% பகிர்வு என்ற பெரும் பயணம், இதுபோன்ற தடைக்கற்களை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அதேசமயம், அரசியலில் பெண்களுக்கு பகிர்வு அளிக்கும் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும், கேலிக்குரியதாக்கும் இந்தப் போக்குகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதுதானே தோழிகளே. ஆனால், இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கத்தினரும் இந்த விஷயத்தை ‘தவறு நடந்துவிட்டது’ என்று சொல்லி சர்வ சாதாரணமாகக் கடப்பதுதான் வேதனையைக் கூட்டுகிறது.
என்று தணியும் இந்த ஆணாதிக்க வெறி?!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்.
மேலும் படிக்க நமக்குள்ளே...