மேக் இன் இந்தியா (Make In India) என்பது இந்தியாவின் முதலீட்டை எளிதாக்குவதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய திட்டம் என்று அனைவரும் அறிந்த ஒன்று. இதன் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து, பொதுமக்களுக்குத் தேவையான பல்வகை வசதிகளைக் கொண்டு ஐ.சி.எஃப்-ல் வடிவமைக்கப்பட்டதுதான் வந்தே பாரத் விரைவு ரயில் (Vande Bharat Express) என அழைக்கப்படும் ரயில் 18 (Train-18).
இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன, பயணக் கட்டணம் எவ்வளவு என அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory) ஐ.சி.எஃப் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால், கடந்த 1955-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் தொடங்கப்பட்டது. ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலை சென்னை, பெரம்பூரில் அமைந்திருக்கிறது. இங்குதான் வந்தே பாரத் விரைவு ரயில் உருவாகப்படுகிறது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் 2018-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது. இதனால்தான் ட்ரைன்-18 என்னும் மறுபெயர் இந்த ரயிலுக்குக் கிடைத்தது. இந்த ரயில் டெல்லியில் தொடங்கி வாரணாசி வரையிலும் செல்லும்.... இடையில் கான்பூரிலும் அலகாபாத்திலும் மட்டுமே நிற்கும்.
ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை வந்திருந்தபோது, அடுத்த தலைமுறைக்கான வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது தெற்கு ரயில்வே. மேலும், முன்னதாக இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் ஓட்டுநர் பெட்டி உள்ளிட்ட பெட்டிகளின் உட்புறங்களையும் ஆய்வு செய்தார். பின்னர், ஐ.சி.எஃப் அதிகாரிகளுடன் வந்தே பாரத் விரைவு வண்டியில் ஒரு குறுகிய ஆய்வுக்கும் சென்றார் அமைச்சர். ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``அடுத்த தலைமுறைக்கான ரயில் பெட்டியை வெளியே கொண்டு வந்ததற்காக ஐ.சி.எஃப் குழுவை வாழ்த்தினேன். மேலும் வந்தே பாரத் ரயில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி உருவாக்கப்பட்டிருக்கிறது.
Trial run of the Next-Gen Vande Bharat Express successfully conducted from ICF, Chennai to Padi and back. pic.twitter.com/8nsEV7ZrWZ
— Ministry of Railways (@RailMinIndia) August 12, 2022
இந்த ஆண்டு, சுதந்திரத்தின் 75-வது ஆண்டு என்பதால், 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். அவை நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும். இந்த ரயில் சுமார் 15,000 கிலோமீட்டர் சோதனைக்கு அனுப்பப்படும். நிலையான, டைனமிக் போன்ற அனைத்து சோதனைகளும், மேற்கொள்ளப்படும்'' என்றார். இதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை ஐ.சி.எஃப்-ல் இருந்து பாடி வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது" என்று தெரிவித்திருந்தது.
வந்தே பாரத் விரைவு ரயிலின் சிறப்பம்சங்கள்:
மொத்தமாகப் பார்த்தால் ஒரு சர்வதேச விமானம் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு வசதிகளைக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பு: இந்த ரயில் முழுவதும் இந்தியாவில்... அதுவும் 18 மாதங்களிலேயே தயாரிக்கப்பட்டது. இது இந்திய ரயில்வே துறையின் ஒரு மைல் கல்.
பொறி இயந்திரம் (இஞ்ஜின்): இந்தியாவின் முதல் இஞ்ஜின் இல்லா ரயில். இது ஒரு சுய உந்துதல் ரயில் (Self propelled).
வேகம்: ஒரு மணி நேரத்துக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். அதாவது, டெல்லியிலிருந்து 752 கி.மீ தூரத்தில் உள்ள வாரணாசியை 8 மணி நேரத்தில் கடந்து விடும். இந்தியாவில் அனைத்து ரயில்களையும்விட அதி வேகத்தில் செல்லக்கூடிய ரயில் இதுவே.
கதவு மற்றும் படிக்கட்டுக்கள்: இந்த ரயில் தானியங்கி கதவுகளால் ஆனது. அதாவது ரயில் நிலையத்துக்கு வந்ததும் கதவுகள் தானாகத் திறக்கப்பட்டு, புறப்படும்போது மூடிக்கொள்ளும் வசதிகளைக் கொண்டது. இதில் உள்ள படிக்கட்டுகளும் உள்ளிழுக்கும் வசதியைக் கொண்டது, இதுவும் ரயில் நிலையம் வந்ததும் வெளி வரும் ...செல்லும்போது மூடிக்கொள்ளும். இந்த படிக்கட்டுக்கள் மாற்றுத்திறனாளிகளும் சுலபமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ரயிலுக்குள் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்ல தானியங்கி கதவுகள் இருக்கும்.
பெட்டி மற்றும் இருக்கைகள்: மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 2 பெட்டிகள் நிர்வாகிகள் பெட்டிகளாகவும் (Executive Coach) மீதிமிருக்கும் 14 பெட்டிகள் அனைவரும் செல்லும் பெட்டிகளாகவும் (Economic Coach) இருக்கும். இருக்கைகள் அதிக தரத்துடன் குஷன் சீட்டுகளைப் போல இருக்கும். மேலும், நிர்வாகிகள் பெட்டிகளில் உள்ள இருக்கைகள் 360 டிகிரி திருப்பிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்கும்.
கண்காணிப்பு: அனைவரும் பொது போக்குவரத்தில் எதிர்பார்க்கும் வசதிகளுள் ஒன்றான கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும்.
மைக்: ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஒரு மைக் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியே ஏதாவது இடையூறு என்றால் நம்மால் நேரடியாக ரயில் ஒட்டுநரைத் தொடர்புகொள்ள முடியும்.
கழிவறை: பொதுமக்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிட வசதி உள்ளது.
இதர வசதிகள்: ரயில் மொத்தமும் குளிர் சாதன வசதி (AC), வை-ஃபை(WI-FI), ஜி.பி.எஸ்.(G.P.S), போன்ற நவீன வசதிகளும், அனைத்து பெட்டிகளின் இருபுறங்களும் எல்.சி.டி திரைகளில் ரயில் வழித்தடம், இருக்கும் இடம் முதலிய அனைத்து விவரங்களும் காட்சிப்படுத்தப்படும். அனைத்து பெட்டிகளின் மையத்தில் விளக்குகள் இருக்கும் அது மட்டுமின்றி விமானங்களில் இருக்கும் பிரத்யேக வசதிகளுள் ஒன்றான தனி நபர் விளக்குகளும் இருக்கும். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாமல் நம் வேலைகளைச் செய்து கொள்ளமுடியும்.
மதிப்பு: இத்தனை வசதிகளைக் கொண்ட இந்த ரயிலின் பயண தொகை சாதாரண இருக்கை (Economic Coach)-ரூ. 1,755 மற்றும் நிர்வாகிகள் இருக்கைக்கு (Executive Coach)-ரூ. 3,300. இங்குக் குழந்தைகள், மூத்த குடிமக்கள், நிபுணர்கள் என யாருக்கும் பயண தொகையில் சலுகைகள் இல்லை.
பயண தொகையைப் பார்த்து இது நமக்கு ஏற்றது அல்ல எனத் தோன்றலாம். ஆனால் குறைந்த விலையில் ஒரு சர்வதேச விமான பயணத்தின் வசதிகளையும், அனுபவத்தையும் பெற விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பயணித்துப் பார்க்கலாம்...
கட்டுரை: A. JENIFER - மாணவப் பத்திரிகையாளர்
மேலும் படிக்க `சென்னையின் தரை விமானம்' - `வந்தே பாரத் விரைவு ரயில்'-ன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!