என் வயது 35. குழந்தைபெற்று 6 மாதங்களாகின்றன. இப்போதும் என் வயிறு 5 மாத கர்ப்பிணி போலவே இருக்கிறது. பேருந்தில் பயணம் செய்யும்போது நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து மற்றவர்கள் எழுந்து இடம்கொடுப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாதா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு 'போஸ்ட் பார்ட்டம் பெல்லி ஃபேட்' என்று பெயர். பழைய உடல்வாகுக்குத் திரும்பவே முடியாதா என்ற கேள்வி பல பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம்.
அழகான ஓர் உயிரை இந்த உலகத்துக்குக் கொடுத்ததற்கு முதலில் உங்களுக்கு நீங்களே வாழ்த்து சொல்லிக் கொள்ளுங்கள். சரியான உடற்பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் ஆறே மாதங்களில் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப முடியும். ஆனால் அதற்கு முன் உங்கள் உடல் பழைய நிலைக்குத் திரும்ப அதற்குத் தேவையான அவகாசத்தைக் கொடுங்கள். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.

குழந்தை வளர, வளர அதற்கு இடம் அளிக்கும்வகையில் கர்ப்பப்பையானது பெரிதாக விரிய ஆரம்பிக்கும். அப்படி விரியும் கர்ப்பப்பைக்கு இடமளிப்பதற்காக வயிற்றுத்தசைகள் சற்று விலகும். குழந்தை வெளியே வந்தபிறகு, விரிவடைந்த அத்தனை தசைகளும் சுருங்கி, பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களாவது தேவைப்படும்.
முந்தைய காலத்தில் எல்லாம் பிரசவித்த பெண்களுக்கு வயிற்றைக் கட்டுவது என்பது ஒரு சடங்காகவே செய்யப்படும். இப்போதும் அது 'அப்டாமினல் பைண்டர்' என்ற பெயரில் மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிற விஷயம்தான். அதாவது பிரசவமான பிறகு, சுத்தமான, காற்றோட்டமான பருத்தித் துணியால் வயிற்றுப் பகுதியைக் கட்டலாம். இறுக்கமாகக் கட்டக்கூடாது. குறிப்பாக, சிசேரியன் பிரசவம் என்றால் அந்தத் தழும்பின்மேல் அழுத்தும்படி இறுக்கிக் கட்டக்கூடாது.
தளர்வாகவே கட்ட வேண்டும். சிலவகை துணிகளால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம் என்பதால் துணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இப்படிக் கட்டுவதாலேயே பெருத்த வயிறு சுருங்கிவிடுமா என்றால் சுருங்காது. இப்படிக் கட்டுவதன் மூலம் தசைகளுக்கு ஒரு சப்போர்ட் கிடைக்கும். முதுகுவலியைக் குறைக்கும்.
பிரசவமாகி, மருத்துவமனையில் இருக்கும்போதே உங்கள் மகப்பேறு மருத்துவரை ஆலோசித்து, அப்டாமினல் பைண்டர் உபயோகிப்பது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பெல்ட் உபயோகிக்கலாமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதன் மெட்டீரியல் சருமத்தை உறுத்தக்கூடாது. பிரசவமாகி 6 வாரங்களுக்குப் பிறகே மருத்துவரின் ஆலோசனையோடு பெல்ட் பயன்படுத்த வேண்டும். சிசேரியன் செய்த தழும்பை அது அழுத்தக்கூடாது. தொடர்ச்சியாகப் பல மணி நேரத்துக்கு பெல்ட்டை அணிந்துகொண்டிருக்காமல், அடிக்கடி எடுத்துவிடுவது சிறந்தது. கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்கும்படியும் பெல்ட்டை அணியக்கூடாது.
அப்டாமினல் பைண்டரோ, பெல்ட்டோ, எது உபயோகித்தாலும் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் தவிர உங்கள் தளர்ந்த, பெருத்த வயிற்றுப் பகுதி சுருங்கப் போவதில்லை.
டயாஸ்டசிஸ் ரெக்டை (Diastasis recti) என்ற நிலை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல கர்ப்பப்பை விரிவடைவதற்காக, வயிற்றுத்தசைகள் விலகி இடம் கொடுக்கும். பிரசவத்துக்குப் பிறகு இந்தத் தசைகள் மறுபடியும் சேர வேண்டும். அப்படி ஆகாமல் சிலருக்கு 6 வாரங்களுக்குப் பிறகோ, 6 மாதங்கள் வரையிலுமோகூட அந்தத் தசைகளுக்கு இடையில் இடைவெளி குறையாமல் இருக்கும் நிலையைத் தான் 'டயாஸ்டசிஸ் ரெக்டை' என்கிறோம். இவர்களுக்கு நிரந்தரமாக வயிற்றுப் பகுதியில் ஒரு வீக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
தசைகள் பலவீனமாக இருக்கும். முதுகுவலி இருக்கும். நிபுணர்களின் ஆலோசனையோடு அந்தத் தசைகளை டைட்டாக்க பயிற்சிகள், யோகா போன்றவற்றைச் செய்ய வேண்டும். இந்த இடைவெளியானது மிகவும் பெரிதாக இருக்கிறது, வெளியில் தெரிகிறது என்றால் சில நேரங்களில் அறுவை சிகிச்சைகூட பரிந்துரைக்கப்படலாம்.

ஒவ்வொரு பெண்ணின் உடலும் ஒவ்வொரு மாதிரியானது. உங்கள் உடல் அதன் இயல்பு நிலைக்குத் திரும்ப அதற்குத் தேவையான நேரத்தை அனுமதியுங்கள். மற்றவர்களின் கமென்ட்டுகளை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். உங்களாலும் பழைய உடல்வாகுக்குத் திரும்ப முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகும் கர்ப்பம் போல காட்சியளிக்கும் பெருத்த வயிறு.... தீர்வு உண்டா?