நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணை கடந்த 7 - ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்ததும், இருவரும் ஒருநாள் வரை கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இந்நிலையில், திருமணம் முடிந்த 2 - வது நாள் அதிகாலையில், தனபால் அசந்து தூங்கிய நேரம், கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா எஸ்கேப்பானார். விடிந்ததும் சந்தியாவை காணாது தேடிய தனபால், அதன்பிறகு சந்தியா நடத்திய திருமண மோசடியில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அதிர்ச்சியானார். இதனால், தனபால் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், சந்தியா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனபாலுக்கு தெரிந்த ஒருவரை சந்தியா ஏழாவதாக திருமணம் செய்ய இருந்த நிலையில், திருசெங்கோடு வந்த சந்தியா உள்ளிட்ட நான்கு பேர்களை பிடித்த தனபால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில், 4 பேரை கைது செய்து சேலம் மற்றும் பரமத்தி சிறைகளில் போலீஸார் அடைத்தனர். இந்நிலையில், இந்த மோசடி திருமணங்கள் நடத்திய புரோக்கர் பாலமுருகனுக்கு துணையாக இருந்த அய்யப்பன் என்பவர், தனபால் தரப்பு தாக்கியதால் காயமடைந்ததாக, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது தப்பி ஓடி, தலைமறைவானார்.
இதற்கிடையில், பாண்டமங்கலம் பகுதிதைச் சேர்ந்த வாத்து வியாபாரியான அய்யப்பன் என்பவர், 'சந்தியாவுக்கும், எனக்கும் திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது' என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தியா எட்டாவது திருமணத்துக்கும் முயன்றது இதன்மூலம் தெரியவந்தது. இந்நிலையில், தப்பியோடிய அய்யப்பன் பேசுவதாக ஒரு பரபர வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், 'இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடி திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் நெட்ஒர்க் தலைவனாக இருந்து கொண்டு அவன் சொல்கின்ற வேலைகளை நாங்கள் செய்தோம். திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார்.

பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப் பெண்ணை கொண்டு வந்து விடுவார். புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்த திருமண மோசடிகளுக்கு கார் டிரைவர் ஆக ஜெயவேல் இருந்துள்ளார். மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை வாங்கி விற்று கார் டிரைவருக்கு கொடுப்பார். இந்த திருமண மோசடி தொழிலை கடந்த 4 வருடங்களாக தமிழக முழுவதும் செய்து வந்தார். நான் இனிமேல் அவர்களோடு சேரமாட்டேன்' என்று பேசியிருந்ததாக சொல்லப்பட்டது.
இன்னொருபக்கம், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், 'என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பாலமுருகன் இப்படி பலரை ஏமாற்றி திருமணம் செய்ய வைத்தார். 30 வயது கடந்தும் திருமணமாகாமல் இருந்த ஆண்களை குறிவைத்துதான் இந்த திடத்தை அரங்கேற்றினோம். மாப்பிளை வீடுகளில் இருந்து திருமணம் முடிந்த இரண்டொரு நாட்களில் எஸ்கேப்பாகிவிடுவேன். நான் கொண்டுவரும் பணம், நகையில் எனக்கு கொஞ்சமாக கொடுத்துவிட்டு, மீதியை அவர்கள் வைத்துக்கொள்வார்கள்.

என் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி, என்னை இப்படி பலரை ஏமாற்றி திருமணம் செய்ய வலியுறுத்தினர்' என்று சந்தியா கண்ணீருடன் சொன்னதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய அய்யப்பன் மற்றும் போலி பெண் புரோக்கர் நெட்வொர்க் தலைவன் பாலமுருகன், அவனது கூட்டாளிகள் ரோஷினி ,மாரிமுத்து ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், ரோஷினி, மாரியப்பன் ஆகிய மூன்று பேரையும் பிடிக்க மதுரை விரைந்த தனிப்படைக்கு, அவர்கள் மூன்று பேர்களும் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், பரமத்தி வேலூரிலிருந்து தப்பி ஓடிய அய்யப்பனும், தலைமறைவாய் உள்ளார். போலீஸாரின் விசாரணையில், தலைமுறைவாக உள்ள 4 பேரும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி வேறு மாநிலத்திற்கு சென்று தலைமறைவாக இருக்கலாம் என தெரியவந்திருக்கிறது.

எனவே, தனிப்படை போலீஸார் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு, அவர்களது செல்போன் நெட்வொர்க்கை வைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையில், சிறையில் உள்ள சந்தியாவை போலீஸ் காவலில் எடுத்து மேலும் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். அப்போது, சந்தியா ஆறு பேரை மட்டும்தான் திருமணம் செய்தாரா, அந்த வீடியோவில் அய்யப்பன் சொல்வதுபோல் 12 பேர்களை ஏமாற்றி போலி திருமணங்கள் நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்க இருக்கின்றனர். அதோடு, சந்தியா திருடி வந்த பணம், நகையை எங்கே வைத்திருக்கிறார் என்றும் விசாரணை நடத்த இருக்கிறார்களாம்.
மேலும் படிக்க `12 திருமணங்களா, அதற்கும் அதிகமா?' - 'கல்யாண ராணி' சந்தியாவை விசாரிக்க கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்