நம்ம ஊர்ல எல்லாம் புதுசா திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, பொதுவாகவே பெரியவர்களெல்லாம் `16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துறது வழக்கமான ஒன்றுதான். அதற்கான உண்மையான அர்த்தம் வேறு என்றாலும் கூட, சும்மா விளையாட்டுக்காக 16 குழந்தைகளை பெற்றுக்கொள் என விளையாட்டாக சொல்வதும் உண்டு. ஆனா இங்க ஒரு தம்பதி 16 குழந்தைகளைப் பெற்றெடுத்து, 17-வது குழந்தையைப் பெற்றெடுக்கவே தயாராகிட்டாங்க. இதை படிக்கும்போது உங்களுக்கே ஆச்சர்யமா இருக்கில்ல. வாங்க அப்படி யார் தான் அவங்கனு பார்ப்போம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் தன் கணவருடன் வசித்துவருபவர் தான் பேட்டி ஹெர்னாண்டஸ்(Patty Hernandez). 40 வயதாகும் இவர், இந்தாண்டு மே மாதத்தில் தான் தன்னுடைய 16-வது குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த நிலையில் தற்போது 17-வது குழந்தையைப் பெற்றெடுக்க கர்ப்பமாகியிருக்கிறார்.
இதுகுறித்து ஊடகத்திடம் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த பாட்டி ஹெர்னாண்டஸ், ``14 ஆண்டுகளாக நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தைப் பிறந்து 13 வாரங்கள் ஆகின்றன.

இப்போது, 17-வது குழந்தையைப் பெற்றெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதில், நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நாங்கள் எப்போதுமே ஒரு பெரிய குடும்பத்தைத் தான் விரும்புகிறோம். ஆனால் கடவுள் எங்களை இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. மேலும் அது தான் கடவுளின் விருப்பம் என்றால், அவரிடம் 18-வது குழந்தையையும் கேட்போம். அதோடு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தால் கார்ட்டர்(Carter) என்றும், பெண்ணாக இருந்தால் க்ளேர்(Clair) என்றும் பெயர் வைக்கலாம் என்று யோசித்து வருகிறோம்" எனக் கூறினார்.
மேலும் படிக்க `கடவுள் இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று நினைக்கவேயில்லை’ - 16 குழந்தைகளைப் பெற்ற தாய் மீண்டும் கர்ப்பம்