யூரோ டூரின் ஐம்பதாவது அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம். இந்த ஐம்பது வாரக் கால பயணத்தைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால், ஐரோப்பா என்னும் ஒரு கண்டம் எப்படி உருவானது என்பதில் ஆரம்பித்து, தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா, உலகை மாற்றிய ஐரோப்பியக் கண்டுபிடிப்புகள், ஐரோப்பியப் புரட்சிகள் கடந்து, முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், பனிப்போர்கள் பார்த்து, நவீன ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம், நேட்டோவின் விரிவாக்கம் தாண்டி, ஐரோப்பாவை ஆண்ட ஆளுமைகளை ஒரு அலசு அலசியது. அதைத்தொடர்ந்து செல்வத்தில் புரளும் மேற்கு ஐரோப்பாவின் வனப்பில் மூழ்கடித்து, வாய் பிளக்க வைக்க, யூரோ டூர் அப்படியே டேக் டைவேர்ஷன் எடுத்து கிழக்கு ஐரோப்பாவின் இருள் சூழ்ந்த மறைவான பக்கங்களை நோக்கிச் சென்றது. இருளுக்குள் மறைந்திருக்கும் ஐரோப்பாவின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய யூரோ டூர் அப்படியே நேராக நிகழ்கால ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. சமகால ஐரோப்பாவின் சிக்கல்கள், சவால்கள், அரசியல், அறிவியல், பொருளியல் என இன்றைய நவீன ஐரோப்பாவின் நிலையைத் திரை நீக்கிக் காட்டி, இன்று இந்த ஐம்பதாவது வாரம் உங்களை எதிர்கால ஐரோப்பாவுக்குள் கொஞ்சம் சுற்றிக்காட்டப் போகிறது.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பு உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து ஐரோப்பா ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒரு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. கடன் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, பிரெக்ஸிட் நெருக்கடி, காலநிலை நெருக்கடி, அகதிகள் நெருக்கடி, ரஷ்யா - உக்ரைன் மோதலும் அதைத்தொடர்ந்த மக்கள் இடப்பெயர்வும், எரிபொருள் நெருக்கடி எனத் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சவால் ஐரோப்பாவைச் சுற்றி அடித்துக்கொண்டேதான் இருக்கிறது.
உலக பொருளாதாரத்தில், உலக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஐரோப்பிய எதிர்காலம் குறித்த அக்கறையும் கவலையும் ஒன்று சேர்ந்து எதிர்கால ஐரோப்பா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை அறியும் ஆர்வம் ஐரோப்பியருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உள்ளது. அடுத்த பத்து, இருபது, முப்பது, ஐம்பது, நூறு ஆண்டுகளில் ஐரோப்பாவில் என்ன நடக்கலாம் என்பதுவரை கணித்து, அவற்றின் தாக்கங்களுக்கு முன்கூட்டியே தம்மை தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர் ஐரோப்பியர்.
ஐரோப்பாவை அதிரடிக்கும் காலநிலை மாற்றம்
முன்பெல்லாம் கோடைக் காலங்களில் மிகவும் மந்தமான ஆனால் ரம்மியமான வெயிலில் ஐரோப்பியர் தமது விடுமுறைகளை பீச், பார்க் என்று கழித்த காலம் போய், இப்போதெல்லாம் சம்மர் வந்தாலே குளிரூட்டிகளை கட்டிப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கிப் போகிறார்கள். அந்தளவுக்குச் சுட்டெரிக்கும் வெயில் ஐரோப்பாவை வறுத்து எடுக்கத் தொடங்கியுள்ளது. மறுபக்கம் குளிர் காலங்களில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்குப் பனிப்பொழிவு ஐரோப்பியரின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்து விடுகிறது.
உலக வெப்பமயமாதலின் வீரியத்தை ஐரோப்பா தீவிரமாக உணரத்தொடங்கியுள்ளது. “வரவிருக்கும் ஆண்டுகளில் காலநிலை மாற்றம் ஐரோப்பா முழுவதும் வெள்ளத்தின் அதிர்வெண்ணை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை காரணமாகக் கடுமையான மழைப்பொழிவும் பனிப்பொழிவும் மிகவும் தீவிரமாகவும் இருக்கும். ஐரோப்பா முழுவதும் ஃபிளாஷ் வெள்ளம் அடிக்கடி ஏற்படும்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்லுயிர் இழப்பு, காட்டுத் தீ, பயிர் விளைச்சல் குறைதல், அதிக வெப்பநிலை மட்டுமல்ல ஐரோப்பிய மக்களின் ஆரோக்கியத்தையும் இந்தக் காலநிலை நெருக்கடி பாதிக்கத் தொடங்கியுள்ளது.

சுயாதீன கண்காணிப்பு நிறுவனத்தால் (Independent Monitoring Agency) வெளியிடப்பட்ட காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டின் (CCPI) படி, ஐரோப்பாவின் காலநிலை பாதுகாப்பில் முன்னணியில் உள்ள முதல் மூன்று நாடுகள் என டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வேயைக் குறிப்பிடுகிறது. கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல், ஆற்றலைத் திறமையான மற்றும் பொறுப்பான முறையில் பயன்படுத்துதல் மற்றும் காலநிலைக்கு ஏற்ற கொள்கைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் எடுக்கும் முயற்சிகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்களால் இயன்றவரையில் எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பெரிய அழிவுக்கு இப்போதே மாற்று யோசனைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம் (The European Green Deal) 2050-க்குள் பூஜ்ஜிய நிகர உமிழ்வை (zero net emissions) அடைதலை தமது இலக்காகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மின் நிலையங்கள் மற்றும் தொழில்துறையிலிருந்து உமிழ்வைக் குறைக்க, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) முதலாவது பெரிய கார்பன் சந்தையை அமைத்துள்ளது. எமிஷன்ஸ் டிரேடிங் சிஸ்டம் (ETS) மூலம், நிறுவனங்கள் CO2-ஐ வெளியிடுவதற்கான அனுமதிகளை அதிகளவான தொகையைச் செலுத்தி வாங்க வேண்டும், அதனால் அவை எவ்வளவு குறைவாகச் சூழலை மாசுபடுத்துகின்றனவோ, அவ்வளவு குறைவாகப் பணத்தைச் செலுத்தும், போன்ற திட்டங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன.
2035-ம் ஆண்டளவில் புதிய கார்கள் மற்றும் வேன்களில் இருந்து பூஜ்ஜிய உமிழ்வை அடையும் திட்டத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2035 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு வாக்களிக்கத் தொடங்கியுள்ளது. 2050-ம் ஆண்டில் ஐரோப்பா உலகிலேயே முதல் கார்பன் - நடுநிலை கண்டமாக மாறும் திட்டத்தையும் நிறுவத் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியும் குளிரில் உறையத் தொடங்கும் ஐரோப்பாவும்
ஐரோப்பா முழுவதும் எரிவாயு பற்றாக்குறை வரவிருக்கும் பல குளிர்காலங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா 40% இயற்கை எரிவாயுவை வழங்கியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, 2021-ல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது. இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து எனக் கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே தமது எரிவாயு தேவைகளுக்கு ரஷ்யாவைச் சார்ந்து இருக்கின்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் மோதலைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல தடைகளை விதித்தது. 'அடுத்த வருடம் முதல் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு கொள்முதல் செய்யமாட்டோம்' எனக் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, இந்த ஆண்டு இதுவரை தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ரஷ்யா, தன் எரிவாயு ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளது.
இதற்கு மாற்றீடாக, மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்கிறது ஐரோப்பா. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்து அதிக விலைக்கு ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. தொடரும் இந்தப் பிரச்னைக்கான தீர்வு எதிர்வரும் ஆண்டுகளில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது, ஐரோப்பா ரஷ்யாவோடு இருக்கும் உறவை எந்தளவு சாதகமாகப் பேணுகிறது என்பதில் தங்கியுள்ளது.
பிளவுபடும் ஐரோப்பாவும் பிரியத்துடிக்கும் நாடுகளும்
Brexit பிரிவைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்குள் மேலும் நெருக்கடிகள் தொடரத் தொடங்கியுள்ளன. ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து தம்மை இங்கிலாந்திலிருந்து விடுவித்து, சுதந்திர தேசமாகிக்கொள்ளத் துடிக்கின்றன. இங்கிலாந்தின் செல்வம் என்று பார்த்தால் அது ஸ்காட்லாந்துதான். எனவே ஸ்காட்லாந்து இங்கிலாந்தை விட்டுப் பிரிவதை இங்கிலாந்து அரசு ஒருபோதும் விரும்பாது. ஆனாலும் இங்கிலாந்து பட்டத்து ராணியின் காலம் இருக்கும் வரைதான் ஸ்காட்லாந்தையும் வட அயர்லாந்தையும் இழுத்துப் பிடித்து வைக்க முடியும். ராணியின் மறைவோடு யுனைடெட் கிங்டம் மூன்று துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்திலிருந்து பிரியும் அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடல் மீன்பிடி எல்லைகள் குறித்த பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகப்போவதாக போலந்து வாக்கெடுப்பை நடத்திக்கொண்டு உள்ளது. ஒட்டோமான் பேரரசு 15-ம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் பெரும்பகுதியை படிப்படியாகக் கைப்பற்றியது; அன்று முதல் இன்று வரை கிரீஸுக்கும் துருக்கிக்கும் தொடரும் பதற்றம், எதிர்காலத்தில் ஒரு பெரிய போராக வெடிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் பிரான்ஸ், அல்ஜீரியா, கிரீன்லாந்து, Saint Pierre and Miquelon, மற்றும் Saint Barthélemy ஆகிய நான்கு பிரதேசங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, தற்போது 'Overseas Countries and Territories of the European Union'-ஆக மாறியுள்ளன. இத்தாலி, போலந்து, செக் குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. நார்டிக் நாடுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தமக்குள் ஒரு கூட்டணியை அமைத்துக்கொள்ளலாம். சில பல நாடுகள் ஒன்று சேர்ந்து 'European Federalisation' என்று ஒரு நாடு கூட உருவாகலாம் என்றும் கூட ஒரு கணிப்பு கூறுகிறது.
எது எப்படி இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பா பல மடங்கு முன்னேறி இருக்கும். தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம், கலை, சினிமா, ஃபேஷன் என மனிதன் இதுவரை நினைத்துப்பார்க்காத உயரத்தை ஐரோப்பா எட்டியிருக்கும். சிந்தனையிலும், செயலிலும், கலாச்சாரத்திலும் மனித இனத்தின் அடுத்த கட்டத்தை ஐரோப்பா அடைந்திருக்கும்.
இன்னும் பல உறுதியான தலைவர்கள் உருவாகுவார்கள். அது சாதகமாகவும் பாதகமாகவும் ஐரோப்பா அரசியலில் செல்வாக்கு செலுத்தும். பல ஐரோப்பியக் கண்டுபிடிப்புகள் உலகை மாற்றி அமைத்திருக்கும். மருத்துவத்துறையில் பல மகத்தான சாதனைகள் ஐரோப்பியரால் நிகழ்த்தப்பட்டிருக்கும்.
இருந்தாலும் கூட, இன்னும் பல நெருக்கடிகளும் ஐரோப்பாவை நெருக்கும். அதனால் தற்காலிகமாக வேண்டுமானால் ஐரோப்பா தடுமாறலாம், ஆனால் மீண்டு வரும். முன்பைவிட மேலும் சக்தி வாய்ந்ததாக மீண்டு வரும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஆனால் இவை அனைத்துக்கும் மேல் ஐரோப்பாவின் தலைவிதியை ஒன்று மட்டுமே தீர்மானிக்கும். அதுதான் ரஷ்யா. அமெரிக்கா, மத்திய கிழக்கு, சீனா போன்ற நாடுகளுடன் ஐரோப்பா எந்த விதமான உறவைப் பேணுகிறது என்பது முக்கியமில்லை. ரஷ்யாவுடன் ஐரோப்பா எந்த விதமான உறவைப் பேணுகிறது, எவ்விதமான உறவைத் தொடர்கிறது என்பதில்தான் ஐரோப்பாவின் எதிர்காலமே அடங்கியுள்ளது.
ஐரோப்பாவில் அமைதி என்பது ரஷ்யாவைத் தவிர்த்து சாத்தியமே இல்லாத ஒன்று.
யூரோ டூர் நிறைவடைந்தது!
------------------------------------------------
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்.
யூரோ டூர் - நிழலும் நிஜமும்! - அத்தியாயங்கள் 1 - 50
இந்த ஐம்பது வாரங்களும் யூரோ டூரைத் தவறாமல் படித்து, உங்கள் ஆதரவை வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தத் தொடரில் பல விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். ஒரு ஐம்பது வாரக் கட்டுரைத்தொடரில், ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும், அரசியலையும் 360 டிகிரியில் அலசுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனாலும் முடிந்தவரை ஐரோப்பாவைச் சுற்றி ஒரு டூர் அடித்துவிட்ட திருப்தி உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். யூரோ டூர் தொடர் குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
இன்னுமொரு சுவாரஸ்யமான தொடருடன் மிக விரைவில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன். அதுவரை...
பயணங்கள் தொடரும்...
மேலும் படிக்க யூரோ டூர் 50: காலநிலை மாற்றம், எரிபொருள் நெருக்கடி, ரஷ்ய உறவு - ஐரோப்பா எதிர்காலம் எப்படியிருக்கும்?