நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நெட்டையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி எட்டம்மாள்(63). இத்தம்பதியின் மகன் தியாகராஜன் (35). இவர், ஈரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். பழனியப்பன் மறைந்துவிட, அவரின் மனைவி எட்டம்மாள் மகன் தியாகராஜனோடு வசித்து வருகிறார். இந்த நிலையில், எட்டம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டிருக்கிறார். எட்டம்மாளும் அந்த பெண்ணுக்கு பரிதாபப்பட்டு, தண்ணீர் கொடுத்துள்ளார்.
தண்ணீரை வாங்கி குடித்து அந்த அடையாளம் தெரியாத பெண், சடாரென எட்டம்மாளின் காலில் விழந்து தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு, தனக்கு மயக்கம் போல் வந்ததாகவும், என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து எட்டம்மாள் நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவரின் புகாரின் அடிப்படையின், பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், மூதாட்டி எட்டம்மாளிடம் நூதன முறையில் நகையை திருடிச் சென்ற மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் எட்டம்மாளின் காலில் அந்த மர்ம பெண் விழுந்தபோது, எட்டம்மாளுக்கு மயக்கம் வரும்படி எதையோ தூவி, அவர் மயங்கி நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த எட்டு பவுன் நகையை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மூதாட்டியின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான பெண்ணை எட்டம்மாள் அடையாளம் காட்ட, போலீஸார், அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க `தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி' - மூதாட்டியின் காலில் விழுந்து நூதனமாக 8 பவுன் நகையை திருடிய பெண்!