தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத்தை பொறுத்தவரையில் மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், விசைத்தறிக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளிவீசியது திமுக. இந்த போலி வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள்மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது.
மின்கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட போதே, அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு இன்று முதல் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும், 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதனை விட்டுக் கொடுத்து விடலாம் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு துறை ஆணையம் தெரிவித்திருப்பது தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர 2026-ம் ஆண்டுவரை ஆண்டுக்கு தலா ஆறு விழுக்காடு மின் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

திமுக-வின் தேர்தல் அறிக்கையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த நிலையிலும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இந்தக் கட்டண உயர்வின் மூலம், 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

விலைவாசி உயர்வினால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த சமயத்தில் சொத்து வரி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, எரிவாயு உயர்வு, பால் பொருள்கள் விலை உயர்வு என பலவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்ற மக்கள் விரோத செயல். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற ரீதியில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க மின்கட்டண உயர்வு: ``சொல்வது ஒன்று, செய்வது ஒன்று; இதுதான் திராவிட மாடல் போல!" - ஓபிஎஸ் கண்டனம்