விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எஸ்.எஸ்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி பாஞ்சாலி. இவர், தனது மகன் விஜயகுமார் என்பவருடன் வசித்து வந்திருக்கிறார். அவ்வப்போது கூலி வேலைக்கு செல்லும் விஜயகுமார், அதீத மது பழக்கத்திற்கு அடிமையாகியதாக தெரிகிறது. சில சமயம் மது அருந்துவதற்கு பணம் இல்லையெனில், தனது தாய் பாஞ்சாலியிடம் வாக்குவாதம் செய்து பணத்தை பிடுங்கிச் சென்று மது அருந்துவாரம்.

அதே போல நேற்றைய தினமும் (08.09.2022) தனது தாயார் பாஞ்சாலியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு சண்டையிட்டாராம் விஜயகுமார். மூதாட்டி பாஞ்சாலியோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது தாயை பலமாக தாக்கிதோடு அருகிலிருந்த அம்மி குழவி கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மூதாட்டி இறந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விஜயகுமாரை கைது செய்தனர்.

மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால், தாயின் மீது ஆத்திரமடைந்த மகன், தாயின் தலையிலேயே அம்மி குழவியை போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க விழுப்புரம்: மது அருந்த பணம் கேட்டு தகராறு; பணம் தராத தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்!