ராம ஸ்ரீனிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். நாட்டில் போதைப்பொருள் அதிகரிக்க மத்திய அரசுதான் காரணம் என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்க வேண்டுமே... ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தானே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் நடக்கிறது... தி.மு.க அரசின் கையாலாகாத்தனத்துக்கு மத்திய அரசைக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு ஆட்சி நடத்தத் திராணி இல்லையென்றால், ஒரே ஒரு நாள் உங்கள் பதவியை அண்ணாமலையிடம் கொடுத்துப் பாருங்கள் மிஸ்டர் ஸ்டாலின்! தமிழ்நாட்டில் போதைப்பொருள் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று செய்துகாட்டுவார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் குறைந்து காணப்பட்ட போதைப்பொருள் தற்போது மட்டும் அதிகரித்தது எப்படி... தமிழ்நாட்டில் முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை, புலனாய்வுத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன... ஒரு மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முடியாதது அந்த மாநில அரசின் தோல்விதான். உங்கள் தவறுகளை மறைக்க மற்றவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு உண்மையில் போதைப்பொருள்களைத் தடுக்கப் பாருங்கள்.”

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பாளர், தி.மு.க.
“மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்ததற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்று சொல்வதற்குப் பல முகாந்திரங்கள் இருக்கின்றன. உதாரணமாக, பா.ஜ.க அரசு பல துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது ஒரு முக்கியக் காரணம். பல வெளிநாடுகளில் கிடைக்கும் போதைப்பொருள்கள் இந்தத் தனியார் துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் தடையின்றி நுழைகின்றன. அதானிக்குச் சொந்தமான முத்ரா துறைமுகத்தில் மட்டுமே 8,000 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி நடத்தும் சிக்கிமில்தான் நாட்டிலேயே அதிக கஞ்சா விற்பனை நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீதிபதி புகழேந்தி, `தமிழ்நாடு கஞ்சாவின் காடாக இருக்கிறது’ என்று சொன்னதையும், சமீபத்தில் உயர் நீதிமன்றம், ‘கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்று சொன்னதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன். `தமிழ்நாடு, கஞ்சா விற்பனையின் தலைநகராக மாறியிருக்கிறது’ என்று சொல்கிறார் அண்ணாமலை. கஞ்சாவின் மொத்த விற்பனைக்கூடம் கமலாலயம்தான் என்பது அவருக்குத் தெரிந்ததால்தான் அப்படிச் சொல்கிறார்போல. கஞ்சா வியாபாரிகளையும், அவர்களின் மனைவிகளையும் கட்சியில் இணைத்தவர்கள் எங்களைக் குறை சொல்வது நகைப்புக்குரியது!”
மேலும் படிக்க ஒன் பை டூ