அமெரிக்கா - இந்தியா பிசினஸ் கவுன்சில் (USIBC) அமைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய சில விஷயங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.
கடந்த ஜூலையில் நமது சில்லறைப் பணவீக்கம் (CPI) 6.7% என்கிற நிலைக்கு இறங்கியது. இதைப் பார்த்த நம் நிதியமைச்சர், ‘‘சில்லறைப் பணவீக்கத்தை நிர்வகிக்கும் அளவுக்குக் கட்டுக்குள் வந்துவிட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார். சில்லறைப் பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 7.8% என்கிற அளவில் இருந்தது, கொஞ்சம் இறங்கி இருப்பது நல்ல வளர்ச்சி என்றாலும், சில்லறைப் பணவீக்க விகிதம் ஆர்.பி.ஐ நிர்ணயித்துள்ள 6% என்கிற அளவுக்கு மேலேதான் இருக்கிறது. நம் நாட்டில் இப்போது பண்டிகைக் காலம் ஆரம்பமாகி இருக்கிறது. இனிவரும் 3, 4 மாதங்களுக்கு மக்கள் நிறையவே செலவு செய் வார்கள். அப்போது இந்தப் பணவீக்கம் இன்னும் உயரவே செய்யும். எனவே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக நாம் இப்போதே பெருமைபட்டுக்கொள்வது சரியல்ல.
பணவீக்கம் ‘கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட’தால், இரு புதிய இலக்குகளை நிறைவேற்றப் போவதாகச் சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முதல் இலக்கு. ஐந்து ஆண்டுகளுக்குமுன் 5 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 7% - 8% என்கிற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 46% பேர் வேலை பார்த்தனர். தற்போது அது 40 சதவிகித மாகக் குறைந்திருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் 9 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில், மத்திய அரசாங்கம் அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
நிதியமைச்சர் சொன்ன இரண்டாவது இலக்கு, அனைத்து மக்களும் சரி சமமான செல்வத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகளை எடுப்பது. 2021-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நம் நாட்டின் மொத்த சொத்துகளில் 57% சொத்துகள், 10% பேரிடம் இருக்கின்றன. 21.7% சொத்துகள் 1% பேரிடம் இருக்கின்றன. ஆகக்கூடி 78.7% சொத்துகள் வெறும் 11% பேரிடமே இருக்கின்றன. மீதி 21.3% சொத்துகளைத்தான், மீதமுள்ள 89% மக்கள் வைத்திருக்கிறார்கள். அந்த 11% பேர்தான் உலகப் பணக்காரர்கள் வரை முன்னேறி இருக்கிறார்கள். இந்த நிலையில், அனைத்து மக்களுக்கும் சரிசமமாக செல்வத்தைப் பகிர்ந்தளிக்க நிதியமைச்சர் என்ன செய்வாரோ தெரியவில்லை.
நிதியமைச்சர் பேசிய இந்தப் பேச்சு, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முறையான எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இது பற்றிப் பேசி, யாருக்கு என்ன பயன்? சொல்லப்போனால், இதன்மூலம் மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி ஏமாற்றும் செயலாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. சரியான திட்டமிடல் இல்லாமல் எந்த சாதனையையும் செய்திட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் மறக்கவே கூடாது!
- ஆசிரியர்
மேலும் படிக்க நிதியமைச்சரின் புதிய இலக்குகள் நிறைவேறுமா?