கறுப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி
கறுப்பு உளுந்தை உணவில் சேர்த்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். ஏனென்றால், அது நார்ச்சத்து அதிகமான, புரதம் நிறைந்த மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ள தானியமாகும். இந்தக் கஞ்சியில் கறுப்பு உளுந்தோடு கருப்பட்டி சேர்த்துள்ளதால் விரைவில் ஜீரணிக்க உதவுகிறது. இந்த கஞ்சி உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
தேவையானவை:
கறுப்பு உளுந்து (உடைத்தது) - ஒரு கப்
கருப்பட்டி - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
காய்ச்சிய பால் - 2 கப்
செய்முறை
கருப்பு உளுந்தை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவிக் கொள்ளவும். சிறிய குக்கரில் கழுவிய பருப்பு சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் 10 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
கருப்பட்டியை நன்கு பொடித்து சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
குக்கரைத் திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவும். அதில் தேங்காய்த் துருவல் மற்றும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டி கரைசலைச் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவும். கஞ்சி சிறிது ஆறியதும் காய்ச்சி ஆறவைத்த பாலைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இந்தக் கஞ்சியில் பால் சேர்ப்பதற்குப் பதிலாகத் தேங்காய்ப்பால் சேர்த்தும் அருந்தலாம். அதேபோல கருப்பட்டிக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
சேனைக்கிழங்கு தோசை
சேனைக்கிழங்கு உங்கள் இதய, நரம்பு மற்றும் செரிமான அமைப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எடையைக் குறைக்கவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். சருமத்துக்குச் சிறந்தது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சேனைக்கிழங்கோடு அரிசி, பருப்பு சேர்த்து அரைத்துச் செய்யும் இந்த தோசை மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையானவை:
இட்லி அரிசி - ஒரு கப் (200 கிராம்)
துவரம்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
சேனைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்புகளைச் சேர்த்து நன்கு கழுவிவிட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சேனைக்கிழங்கை நன்கு கழுவி, தோல் சீவி, பொடியாக நறுக்கவும் அல்லது துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேனைக்கிழங்கு, ஊறவைத்த அரிசி, பருப்புகள், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர்விட்டு கலந்துகொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி மெலிதாக இடவும். தோசையைச் சுற்றி எண்ணெய்விட்டு நன்கு முறுகலாகும் வரை வேகவைத்து, திருப்பிப் போட்டு சில நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். இதை தேங்காய்ச் சட்னி வைத்துப் பரிமாறலாம்.
நெல்லிக்காய் சாதம்
குழந்தைகள் நெல்லிக்காயைப் பச்சையாக சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு நெல்லிக்காய் சாதத்தை செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக விரும்பிச் சாப்பிடுவார்கள். மேலும், நெல்லிக்காய் அவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுத்து, உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
தேவையானவை:
வேகவைத்த சாதம் - 3 கப்
நெல்லிக்காய் - 4
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை நன்கு கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும். கொட்டைகளை நீக்கவும். பின்னர் சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த சாதத்தை அகலமான தட்டில் ஆறவைத்து சாதத்தின் மேலே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துவிடவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி வேர்க்கடலை சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் சாதத்தில் சேர்த்துக் கலந்துவிடவும். பின்னர் மீதமுள்ள நல்லெண்ணெயை அதே வாணலியில் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். பச்சை மிளகாய் நிறம் மாறியதும் அரைத்த நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வேகவைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில்வைத்து, நன்றாகக் கலந்துவிடவும். சாதம், நெல்லிக்காய் கலவையோடு நன்கு சேர்ந்த பின் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பசலைக்கீரை -சேனை பொரியல்
வைட்டமின் ஏ, சி, கே மற்றும் மெக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாதுகள் நிறைந்த கீரை, பசலைக்கீரை. இந்தப் பொரியலில் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு கவர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதற்காகப் பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான சைடிஷ்.
தேவையானவை:
பசலைக்கீரை இலைகள் - 4 கப்
சேனைக்கிழங்கு - 100 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டுப் பற்கள் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
செய்முறை:
பசலைக்கீரை இலைகளை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சேனைக்கிழங்கை நன்கு கழுவி, தோல் சீவி, மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள், சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை ஒன்று சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கைச் சேர்த்து கைவிடாமல் சிறிது நேரம் வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி ஒரு கை தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும். சேனைக்கிழங்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய பசலைக்கீரை இலைகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பசலைக்கீரை எளிதாக வெந்துவிடும். அதனால் தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும்.
கீரை நன்கு சுருண்டு வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
மேலும் படிக்க சேனைக்கிழங்கு தோசை, நெல்லிக்காய் சாதம்... வெரைட்டியாக ருசிக்க! | வீக் எண்டு ரெசிப்பீஸ்