கைக்குத்தல் அவல் லட்டு
ஒரு பிடி அவலுக்கு குசேலனுக்கு செல்வ வளங்களையெல்லாம் அள்ளித்தந்த அந்த மாதவனை எண்ணி புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தக் கைக்குத்தல் அவல் லட்டுவை செய்து சமர்ப்பிப்பது சிறப்பானது. கைக்குத்தல் அவல் உடல் உறுதிக்கு நலம் சேர்ப்பதும்கூட.
தேவையானவை:
கைக்குத்தல் அவல் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய தேங்காய் - கைப்பிடி அளவு
பேரீச்சைத் துண்டுகள் - கைப்பிடி அளவு
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - 100 கிராம்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
செய்முறை:
நறுக்கிய தேங்காயை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மீதி நெய் சேர்த்து சூடானதும் அவலை நன்கு வறுக்கவும். வறுத்த அவலுடன் வறுத்த தேங்காய், ஏலக்காய்த்தூள், பேரீச்சைத் துண்டுகள், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லம், தேவையான அளவு நீர் சேர்த்து லேசான சூட்டில் தேன் பதத்துக்குக் காய்ச்சவும். இதில் அவல் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து பெருமாளுக்குப் படைக்கவும். மேலும் சுவையாகச் செய்ய விரும்பினால் வறுத்த வேர்க்கடலை அல்லது முந்திரியை உடைத்துச் சேர்க்கலாம்.
சோளச் சுண்டல்
நவராத்திரி மாலை வேளைகளில் முப்பெரும் தேவியருக்கும் விதவிதமான நைவேத்தியங்கள் செய்து படைப்பது வழக்கம். அதிலும் ஒன்பது நாள்களும் ஒன்பது விதமான சுண்டல்கள் செய்து படைத்து எல்லோருக்கும் விநியோகிப்பது அவசியம். ஏராளமான சத்துகள் கொண்ட சோளத்தில் சுண்டல் செய்து உண்பது என்பது வித்தியாசமானதும் சுவையானதும்கூட.
தேவையானவை:
அதிகம் முற்றாத சோளம் - ஒன்று
மிளகு - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
சோளத்தை உரித்து முத்துகளை எடுத்து அலசி உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய்விட்டு சோள முத்துகளைப் போட்டு வதக்கி, பொடித்த மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து அம்பிகைக்குப் படைக்கலாம். மாங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவினால் இன்னும் சுவை கூடும்.
கல்கண்டு சாதம்
நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
பால் - ஒரு கப்
டைமண்டு கல்கண்டு - ஒரு கப்
கிராம்பு - 5
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 10
நெய் - 50 கிராம்
செய்முறை:
கழுவிக் களைந்த அரிசியைக் கொதிக்கும் பாலில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். சாதம் இறுக ஆரம்பிக்கும்போது கல்கண்டுகளைக் கொட்டிக் கிளறவும். இப்போது சாதம் இளகும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு சேர்த்துக் கிளறவும். மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கொஞ்சம் கல்கண்டுகளை மேலாகத் தூவிப் படைக்கலாம். தேங்காய்த் துருவல், குங்குமப்பூ தூவி அலங்கரித்தும் படைக்கலாம்.
ரவை பாயசம்
விதவிதமான பாயசங்களுக்குப் புகழ்பெற்றது நவராத்திரி. பால், பருப்புப் பாயசங்களுக்கு நிகரான சுவை கொண்டது இந்த ரவை - தேங்காய்ப்பால் பாயசம். பாயசப் பிரியையான திருமகளுக்கு இதைப் படைத்து அவளின் திருவருளைப் பெறலாம். திருமகள் அருளிருந்தால் செல்வ வளத்தோடு செழிப்பான வாழ்க்கையையும் பெறலாம்.
தேவையானவை:
ரவை - 200 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப்
பாதாம் - 20
திராட்சை - 20
முந்திரி - 20
நெய் - 50 கிராம்
செய்முறை:
தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு வடிகட்டி கெட்டியான முதல் பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதே தேங்காய் திப்பியில் மீண்டும் நீர்விட்டு இரண்டாவதாகப் பிழிந்த பாலையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, மெல்லிய சூட்டில் ரவையைப் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையை அடிகனமான பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். ரவை வெந்து கொதிக்கும்போது அதில் சர்க்கரையைப் போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். சர்க்கரை கரைந்து இளகிவரும்போது முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதன் மீது வறுத்த முந்திரி, பாதாம், திராட்சையை அப்படியே நெய்யோடு கொட்டிக் கிளறவும். கமகம வாசனையோடு தயாரான இந்தப் பாயசத்தில் பொடித்த பேரீச்சை போன்ற உலர் பழங்களையும் சேர்க்கலாம். சுவை கூடும்.
மேலும் படிக்க அவல் லட்டு, சோளச் சுண்டல், கல்கண்டு சாதம், ரவை பாயசம் | புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்