குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில், நேற்று மாலை, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான சாத் பூஜைக்காக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பூஜை செய்து பொருட்களை ஆற்றில் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திடீரென அந்த கேபிள் பாலத்தின் மத்திய பகுதி இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினரும், உள்ளூர் மக்களும், போலீஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் அதிகாலை வரையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த போது 100க்கும் அதிகாமானோர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இடிந்து விழுந்த பாலம், நேற்று முன்தினத்தில் இருந்தே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. அப்படி இருந்தும் மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேர் அதன் மீது நின்று பூஜை செய்ததால் பாலம் இடிந்துவிட்டது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்த 26-ம் தேதி குஜராத் புத்தாண்டு தினத்தன்று தான் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்டது. 7 மாதத்திற்கு முன்புதான் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டது. பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் கரைக்கு வர போராடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர். அதிகமானோர் இடிந்து விழுந்த பாலத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். பாலம் இடிந்து விழுந்ததற்கு மாநில அரசு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் கூறுகையில், ``பாலம் கடந்த வாரம்தான் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது இடிந்து விழுந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி முதல்வரிடம் பேசியிருக்கிறார். அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார். கட்ச் மற்றும் ராஜ்கோட்டில் இருந்து மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர் தேசிய பேரிடர் மேலாண்மை படை, ராணுவம், கடற்படை, விமானபடையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நடந்த சம்பவத்தற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு இழப்பீடும் அறிவித்துள்ளார். அதோடு தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு விபத்து நடந்த இடத்திற்கு முதல்வர் விரைந்துள்ளார். ராஜ்கோட் எம்.பி. மோகன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``இது வரை 60க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறது(நேற்றிரவு நிலவரப்படி). 79 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றார்.

``இடிந்து விழுந்த பாலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பழுதுபார்த்து 15 ஆண்டுகளுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மோர்பி மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்திருந்தது. அந்த நிறுவனம் பாலத்தை பழுதுபார்த்து எங்களுக்கு சொல்லாமலேயா திறந்துவிட்டனர். பாலம் பாதுகாப்பு தனிக்கை கூட செய்யப்படவில்லை” என்று மாநகராட்சி அதிகாரி சந்தீப்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி