ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்றுமுந்தினம் மாலை 3 சிறுவர்களும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செங்காட்டுகுட்டையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டு காத்திருந்த சிவனேஷ், குவாரி குட்டைக்குள் தவறி விழுந்தான். அவனைக் காப்பாற்ற சென்ற மற்ற 2 சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். பல ஆண்டுகளாக உள்ள அந்த கல் குவாரி குட்டையின் அடியில் சேறு இருந்ததுடன், அதிக ஆழமாக இருந்ததால் மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

அப்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த மூவரும் மூழ்கினர். மாலை 6 மணி ஆகியும் சிறுவர்கள் வரவில்லையே எனக்கருதிய அவர்களது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். செங்காட்டுக்குட்டை பகுதியில் இருந்த கல்குவாரி குட்டைக்கு அருகே மூன்று சிறுவர்களும் வந்த சைக்கிள் நின்றிருந்ததை பார்த்து அங்கு தேடிய போதுதான் ராகவனின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் தான் மூன்று சிறுவர்களும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அரை மணி நேரம் அவர்களது உடலைத் தேடியதில் 3 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்களின் சடலங்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ராகவன் மற்றும் நந்தகிஷோர் ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவர். நந்து கிஷோரின் தாயார் கடந்த ஆண்டு கொரோனாவால் பலியானார் என்பதும், தந்தை அரவணைப்பில் வளர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 சிறுவர்களும் மூழ்கி உயிரிழந்த கல்குவாரி குட்டை அதிமுகவைச் சேர்ந்த பிரமுகருக்கு சொந்தமானது என்றும், அந்த குவாரியை மூடாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!