விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கண்டமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணவாளன். இவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம், சித்தேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய பெயரிலும், தன்னுடைய பெரிய மகளின் பெயரிலும் தலா 5 லட்சம் ரூபாய்க்கான சீட்டை கட்டி வந்துள்ளனர். மணவாளன் உள்ளிட்ட 7 பேரிடம் 01.01.2020 முதல் இருவரின் சீட்டுக்கும் சேர்த்து சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வந்தாராம். அதன் பின்னர் மணவாளன் ஏலச்சீட்டை நடத்தாமல் போகவே, பணத்தை திருப்பி கேட்டுள்ளார் ஆறுமுகம். ஆனால், பணத்தை திருப்பித்தராமல் மணவாளன் இழுத்தடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், இதுகுறித்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். தன்னைப்போலவே சுமார் 35 பேரிடம் ஏலச்சீட்டு பணம் மற்றும் கடனாக பத்திரம் எழுதிக்கொடுத்து, 1,37,60,900 ரூபாய் மற்றும் 10 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, மணவாளன், ஏழுமலை, வரதராஜன் உள்ளிட்ட 7 பேர் ஏமாற்றியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்... 406, 420, 109, 120(B), 506(2) ஆகிய ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மணவாளன், ஏழுமலை, வரதராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார்... செஞ்சி-குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மூன்று பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க விழுப்புரம்: மாதாந்திர ஏலச்சீட்டு; சுமார் 37 பேரிடம் ரூ.1.37 கோடி மோசடி; 3 பேர் கைது!