விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி (67). இவர் தனது மனைவி மங்கையர்க்கரசி (64) மற்றும் தனது பேத்திகளாக பூஜா (20), ரஞ்சனா (20) மற்றும் பேரன் பிரதுன் (7) ஆகியோருடன், திருச்சி நவல்பட்டில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு நேற்று மாலை காரில் வந்துள்ளார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி செவந்தாம்பட்டி அருகே வந்தபோது, காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனைத் தாண்டி எதிரே உள்ள சாலையில் பாய்ந்திருக்கிறது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதியது மட்டுமல்லாமல், அதன் பின்னால் வந்த காரும் என 3 காரும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் எதிர் திசையில் வந்த காரிலிருந்த பத்மா (60) ஆகிய 4 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து மீட்புப் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் முதல்நிலை வீரராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் (45) தீவிரமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு திரும்பிய கிருஷ்ணகுமார், நேற்றிரவு சாப்பிடுவதற்காக தன்னுடைய பைக்கில் வெளியே சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு கிருஷ்ணகுமார் திரும்பாமல் இருக்க, சக ஊழியர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற பகுதியில் கிருஷ்ணகுமார் அவருடைய பைக்குடன் கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார். அடையாளம் தெரியாத வாகனம், கிருஷ்ணகுமாரின் பைக்கின் மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீஸார், கிருஷ்ணகுமார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு உதவியர், அன்றைய தினம் இரவே சாலை விபத்தில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க 4 பேரை பலி வாங்கிய விபத்து... மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் இரவில் விபத்தில் பலியான சோகம்