திருச்சி மாவட்டம், குணசீலத்தில் புகழ்பெற்ற வைணவ திருத்தலமான ‘ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்’ இருக்கிறது. இந்தக் கோயிலில் திருப்பணி வேலைகள் செய்ய, கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் கூடி முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக இந்து அறநிலையத்துறையினரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர். பொதுவாகவே, திருக்கோயில் புனரமைப்பு மற்றும் திருப்பணி வேலைகளைச் செய்ய, அதற்கென அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த நிபுணர் குழுவில் ஆகம வல்லுநர் குழு, பொறியாளர்கள், தொல்லியல் துறை வல்லுநர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என பலரும் இருப்பார்கள்.

கோயில் அறங்காவலர் குழு விண்ணப்பத்தின் அதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நிபுணர் குழுவினர் குணசீலம் கோயிலுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர். அதன்பிறகு மாதக்கணக்காகியும் நிபுணர் கமிட்டியின் அறிக்கை கிடைக்காமல் இருந்திருக்கிறது. இந்நிலையில், நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவராகிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி மூர்த்தீஸ்வரி, கடந்த வாரம் மறுபடியும் குணசீலம் கோயிலுக்கு வந்திருக்கிறார்.
கோயில் அறங்காவலர் குழுவிலுள்ள பிச்சுமணி ஐயங்காரை நேரில் சந்தித்தவர், `நிபுணர் குழுவோட அறிக்கை வேணும்னா 10 லட்ச ரூபாய் பணம் வேணும்’ என்றிருக்கிறார். இதனைக் கேட்டு ஷாக்காகிப் போன பிச்சுமணி ஐயங்கார், `நாங்களே உபயதாரர்கள்கிட்ட வசூல் பண்ணி, திருப்பணி வேலைகளைச் செய்யலாம்னு இருக்கோம். இவ்வளவு பெரிய தொகைக்கு நாங்க எங்கங்க போவோம்’ என்றிருக்கிறார். உடனே இறங்கிவந்த பெண் அதிகாரி மூர்த்தீஸ்வரி, `சரிங்க, கடைசியா 5 லட்சம் கொடுத்துடுங்க. உடனே அறிக்கையை கிடைக்கிற மாதிரி செஞ்சிடுறேன்’ என்றிருக்கிறார்.
இதற்கு உடன்படாத பிச்சுமணி ஐயங்கார், உடனே நடந்த விஷயங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு தட்டி விட்டிருக்கிறார். உடனே பிச்சுமணி ஐயங்காரை லஞ்சம் கொடுக்க வைத்து, பெண் அதிகாரி மூர்த்தீஸ்வரி பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் தங்கியிருந்த அதிகாரி மூர்த்தீஸ்வரியைச் சந்தித்த பிச்சுமணி ஐயங்கார், ’முதல்கட்டமாக இந்த ஒரு லட்ச ரூபாயை வெச்சுக்குங்க. மிச்ச காசை எப்படியாவது கொடுத்துடுறோம்’ என ரசாயணம் தடவிய நோட்டுகளைக் கையில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். உடனே தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாகப் பிடித்து அவர்மீது வழக்கு பதிவிட்டு கைது செய்தனர்.

விசாரணையில், மூர்த்தீஸ்வரி தொல்லியல்துறை வல்லுநராக இருப்பதும், இந்து அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றதும் தெரியவந்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் இப்படி பல கோயில்களில் லஞ்சமாக பணம் பெற்றதும், லஞ்சம் கொடுக்காத கோயில்களில் அறிக்கை சமர்ப்பிக்காமல் இக்குழுவினர் இழுத்தடித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. மூர்த்தீஸ்வரி கைதானதைத் தொடர்ந்து, இதில் மற்ற அதிகாரிகளுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஆய்வு செய்து 4 மாதங்காளாகியும் எதனடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்காமல் நிபுணர் குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க ``ரூ.5 லட்சம் கொடுங்க... வேலை நடக்கும்” - கோயில் புனரமைப்புக்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது