புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கும்மாங்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சீதாலட்சுமி (27). இவர் சமீபத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். உடனே, அவரின் வாட்ஸ்-அப்பில் எண்ணுக்கு அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த லிங்கை கிளிக் செய்த சீதாட்சுமி அதில், கேட்டிருந்த வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளார். மூன்று மடங்கு வரையிலும் பணம் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர். முதலில் ரூ.100 முதலீடு செய்திருக்கிறார். ரூ.160 வரையும் கிடைத்திருக்கிறது.

அதன்பின் ரூ.500 செலுத்தியதில் ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை நம்பி தொடர்ந்து பணத்தை முதலீடு செய்திருக்கிறார். ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.8,47,000 வரையிலும் பணம் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், அவர் கட்டிய தொகையே அவருக்குக் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட, வாட்ஸ்-அப் எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த எண் கேரள மாநில முகவரியை காட்டியிருக்கிறது. அதனை வைத்து தற்போது, போலீஸார் விசாரணையை வேகப்படுத்தி இருக்கின்றனர். தீபாவளி நேரத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிகம் அரங்கேறக்கூடும். வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீட்டிலிருந்தே வேலை, இரட்டிப்பு பணம் என்பது போன்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம். மேலும், வங்கிக்கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.
மேலும் படிக்க ``குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் பார்க்கலாம்..!” - விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்!