ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் இருக்கும் பதனாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பதி முண்டா. இவரது கணவர் பாஞ்சா முண்டா. இத்தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் இருவரும் யாரது துணையும் இல்லாமல் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஞ்சாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. பதி தனது கணவரை அருகில் இருக்கும் நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சையளித்தும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை பலனலிக்காமல் பாஞ்சா இறந்துபோனார். இறந்துபோன கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரக்கூட பதியிடம் பணம் இல்லை. இதனால் 1,500 ரூபாய் கடன் வாங்கி அதன் மூலம் உடலை தனது கிராமத்திற்கு கொண்டு வந்தார் பதி.

உடலை புதைக்க உதவும் படி கிராம மக்களிடம் பதி கேட்டுக்கொண்டார். ஆனால் கிராமத்தினர் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. பல மணி நேரம் ஆன பிறகும் யாரும் உதவ முன்வராததால் தானே தனது கணவரின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றார். அங்கு குழி தோண்டவும் ஆள் இல்லை. எனவே தானே தனது கணவருக்காக குழிதோண்டினார். அக்குழியில் பாஞ்சாவின் உடலை புதைத்துவிட்டு வந்தார். இது குறித்து பதி கூறுகையில், "நானும், எனது கணவரும்தான் வசித்து வந்தோம். எங்களுக்கு குழந்தை கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் சம்புவா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றேன். பின்னர் அங்கிருந்து கியோஞ்சர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். அவரை கிராமத்திற்கு எடுத்து வர ரூ.1,500 கடன் வாங்கி வேன் ஏற்பாடு செய்து எடுத்து வந்தேன்" என்று தெரிவித்தார். ஒடிசா அரசு இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறது. ஆனால் ஆதிவாசி மக்கள் போதிய படிப்பறிவு இல்லாமல் இருப்பதால் அவர்கள் இந்த உதவியை பெறுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க உதவிக்கு வர மறுத்த கிராம மக்கள்: ஒடிசாவில் கணவன் உடலை தானே எடுத்துச்சென்று குழிதோண்டி புதைத்த பெண்