ஜென்டில்மேன்: ஷங்கரின் பிரமாண்டங்களுக்கான விதை; மாஸும் கிளாஸும் கலந்த சினிமா - ஆனால் அந்த அரசியல்?

0
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'ஜென்டில்மேன்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

‘கமர்ஷியல் டைரக்டர்’ என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் ஒரு மசாலா திரைப்படத்தை எடுப்பதென்பது அத்தனை எளிதான வேலையில்லை. சற்று யோசித்துப் பாருங்கள். அதே அடுப்பு. அதே ரவை. அதே ஃபார்முலா. இதே விஷயத்தை வைத்துக் கொண்டு எப்படி உப்புமாவை மசாலா சேர்மானங்களுடன் கச்சிதமாக இணைத்து சுவையாகக் கிண்டி இறக்குகிறோம் என்பதுதான் விஷயம். இதில் தனித்தன்மை இருந்தால்தான் ‘ஹிட்’ அடிக்க முடியும். சூடும் சுவையுமாக உப்புமாவை ருசிக்க வைக்க முடியும்.

இந்த கமர்ஷியல் இயக்குநர்களில் பொதுவாக இரண்டு வகையினர் இருக்கிறார்கள். முதல் பிரிவினருக்கு பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள்தான் மெயின் டார்கெட். லாஜிக்கையெல்லாம் தூக்கி மூலையில் வைத்துவிட்டுக் கதறக் கதறக் கதையை மசாலாவில் புரட்டித் தருவார்கள். எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம். இரண்டாம் பிரிவினரின் அடையாளம் என்ன? அதே வெகுசன திரைப்பட வடிவம்தான். என்றாலும் அழகியல் உணர்வோடும் யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் தங்களின் படைப்புகளைத் தர முயற்சி செய்வார்கள். இவை பொதுவாக ஏ சென்டர் ரசிகர்களுக்கானது. மணிரத்னம், மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம் போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

ஷங்கர்
ஆனால் இந்த இரண்டு வகையினரின் கலவை என்றொரு தனி ஜானர் இருக்கிறது. இதில் குறைவான இயக்குநர்களே இருக்கிறார்கள். இந்த வரிசையின் உச்சத்தில் இருப்பவர் என்று இயக்குநர் ஷங்கரைச் சொல்லலாம். அதாவது ‘மாஸ்’, ‘கிளாஸ்’, ஆகிய இரண்டின் கச்சிதமான கலவையை இவரது படங்களில் தொடர்ந்து பார்க்க முடியும். ஏ, பி, சி என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்க்கத் தூண்டுமளவிற்கு இவரது திரைக்கதையும் மேக்கிங்கும் இருக்கும். "நான் திரைக்கதை எழுத உட்காரும் போதெல்லாம் முதல் இருக்கை பார்வையாளனை மனதில் வைத்துக் கொள்வேன்" என்கிறார் ஷங்கர். உண்மைதான்.

அது சிக்கலான சயின்ஸ் பிக்ஷன் ரோபோ கதையாக இருந்தாலும் சரி, நம் வீட்டின் பக்கத்துச் சந்தில் இருக்கும் அங்காளம்மன் கோயிலும் அதன் மனிதர்களும் உள்ளே வந்து விடுவார்கள். ஒரு பக்கம் ஹைடெக்காக நகரும் காட்சிகளின் நடுவே சராசரி நபர்களும் இயல்பாகப் புகுந்து வருவார்கள். சுருக்கமாகச் சொன்னால், அது எத்தனை பிரமாண்டமான திரைப்படமாக இருந்தாலும், அதன் கால் தரையிலேயேதான் இருக்கும். வானத்திலேயே பறந்து கொண்டிருக்காது. அப்படிப் பறந்தால் சராசரி ரசிகன் அதை அந்நியமாக உணர்வான். இந்த ஃபார்முலாவை ஷங்கரின் அனைத்துத் திரைப்படங்களிலும் காணலாம். ஒருவகையில் அவரது வெற்றியின் ரகசியம் இதுவே.

பிரமாண்ட படைப்பு என்றால் ஷங்கர்

பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்த ஷங்கர், தில்லைராஜனின் மேடை நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தைக் காண வந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் உதவியாளராக இணைந்தார். எஸ்.ஏ.சி. இயக்கிய படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் வந்து போயிருக்கிறார். சந்திரசேகரிடம் பல திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு பவித்ரனிடம் உதவியாளராக இணைந்தார். அங்கு இரண்டு திரைப்படங்களில் பணியாற்றிய பிறகுதான் முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஷங்கருக்குக் கிடைத்தது. அது ‘ஜென்டில்மேன்’.

ஜென்டில்மேன்

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்ட திரைப்படங்களை உருவாக்குவதில் தமிழ் சினிமாத்துறை எவருக்கும் சளைத்ததல்ல. ஒருவகையில் முன்னோடி என்று கூடச் சொல்லலாம். அந்தக் காலத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மெகா பட்ஜெட் திரைப்படம் ‘சந்திரலேகா’. என்றாலும் பிரமாண்டம் என்றாலே ஷங்கர் என்னும் பிராண்ட் விழுந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது அனைத்துத் திரைப்படங்களிலும் உள்ள காட்சிகள் நமக்கு ஏற்படுத்தும் பிரமிப்பு. இத்தனைக்கும் ஷங்கர் முதன் முதலில் இயக்க விரும்பிய படம், ‘அழகிய குயில்’ என்கிற எளிமையான காதல் கதை. ஒருவேளை இது வெளியாகி வெற்றி பெற்று விருதுகள் வாங்கியிருந்தால் அவரின் பாதை வேறு வகையாக மாறியிருக்குமோ, என்னமோ!

ஜென்டில்மேன் – ராபின் ஹூட்டின் நவீன வடிவம்

ஜென்டில்மேன் திரைப்படத்தின் கதை என்பது ராபின்ஹூட் கேரக்ட்டரை அடிப்படையாகக் கொண்டது என்பது நமக்குத் தெரியும். கெட்ட பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு அளிப்பது. இந்த அரதப்பழசான விஷயத்தை ஷங்கர் எப்படி ஜனரஞ்சக அம்சங்களுடன் புதுமையுடன் சொல்லியிருக்கிறார் என்பதில்தான் ‘ஜென்டில்மேன்’ படம் கில்லியாக வெற்றி பெற்றிருக்கிறது.

படத்தின் ஆரம்பக்காட்சியே ‘வெஸ்டர்ன்’ திரைப்படங்களை நினைவுபடுத்துவது போல அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சூரிய உதயத்தின் பின்னணியில் கௌபாய் தொப்பி அணிந்து நடந்து செல்லும் ஒருவனின் உருவம் லாங்ஷாட்டில் தெரியும். காட்டு மரங்களை ஏலத்தில் விற்கும் காட்சியும் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூலாகப் போவதும் காட்டப்படும். அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கச் செல்வதுதான், அந்த தொப்பிக்காரனின் நோக்கம் என்பதும் உணர்த்தப்பட்டு விடும்.

ஜென்டில்மேன்

பிறகு நடக்கும் அந்த ஆக்ஷன் கலாட்டா இருக்கிறதே?! ரகளை... போலீஸ் பைக்குகள் அந்தரத்தில் பறக்கும். ஜீப் ரயிலின் மீது ஜம்ப் அடிக்கும். ஓடும் ரயிலின் மீது சேஸிங் நிகழும். நமக்கே வலிக்கும்படி ஸ்டண்ட் மேன்கள் சிக்கலான கோணத்தில் சறுக்கி விழுவார்கள். ஆக... ஒரு கிளைமாக்ஸிற்கு நிகராக ஆரம்பக் காட்சியே இருக்கும். எனில் இதர காட்சிகளின் மேக்கிங்கை கற்பனை செய்து பாருங்கள்.

ஏறத்தாழ ஷங்கரின் அனைத்துப் படங்களிலும் ஓரிடத்தில் கூட அசுவாரஸ்யம் தட்டாது. அந்த அளவிற்குக் கச்சிதமாகத் திரைக்கதையை அமைப்பார். தங்கத்தை உருக்கி ஆபரணம் செய்வது போல ஒவ்வொரு காட்சித் துளியும் பார்த்துப் பார்த்து சுவாரஸ்யமாகச் செதுக்கப்பட்டிருக்கும். ஆவலைக் கிளப்பும் ஓர் ஆரம்பம், சரியான இடங்களில் பாடல்கள், ஆழமான சென்டிமென்ட் காட்சி, இளைப்பாறுவதற்கு நகைச்சுவை, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் என்று ஒரு இடம் கூட சலிக்காத அளவிற்கான திரைக்கதை இருக்கும். இது ஏதோ முதன் முறையாகப் படம் பார்க்கும் போது மட்டும் ஏற்படும் அனுபவமல்ல. வெவ்வேறு இடைவேளைகளில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இதே சுவாரஸ்ய அனுபவத்தைத் தரக்கூடியது. உதாரணத்திற்கு, ‘முதல்வன்’ திரைப்படத்தில் அர்ஜுனுக்கும் ரகுவரனுக்கும் இடையில் நடக்கும் அந்த ‘இன்டர்வியூ’ காட்சியை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே இல்லை.

திறமைசாலிகளை ஒருங்கிணைக்கும் இயக்குநர்

இந்த சுவாரஸ்ய அனுபவத்திற்கு ஜென்டில்மேன் படமும் விதிவிலக்கல்ல. பொதுவாக தங்களின் முதல் திரைப்படத்தின் காட்சிகளைப் பல வருடங்கள் சிந்தித்து துளித்துளியாக இயக்குநர்கள் செதுக்கி வைத்திருப்பார்கள். ஷங்கருக்கு இது முதல் படம். தனது அனைத்து திரைப்படங்களையுமே செதுக்கி உருவாக்கும் ஷங்கர் முதல் படத்தை எப்படியெல்லாம் மெனக்கெட்டு யோசித்திருப்பார்?! ஜென்டில்மேன் திரைக்கதையில் இதன் நுட்பங்களைப் பார்க்க முடியும். அத்தனை கச்சிதமும் சுவாரஸ்யமும் கூடிய திரைக்கதையாக அது மலர்ந்திருக்கும்.

ஜென்டில்மேன்

ஒரு வலுவான திரைக்கதையைத் தாண்டி திறமையான டெக்னிஷியன்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது ஷங்கரின் பலம். ஏ.ஆர்.ரஹ்மான் உதயமாகியிருந்த நேரம் அது. அவரது திறமையையும் நவீன இசையின் புதுமையையும் அப்போதே சரியாகக் கணித்திருந்த ஷங்கர், தனது திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மான்தான் என்பதில் உறுதியாக இருந்தார். ரஹ்மானின் வெற்றி தற்செயலானது என்று வம்பு பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. என்றாலும் தனது சாய்ஸில் தெளிவாக இருந்தார் ஷங்கர். அவரது யூகம் சரியாகப் பலித்தது. ‘ஜென்டில்மேன்’ படத்தின் வெற்றிக்குப் பாடல்களும் இசையும் முக்கிய காரணமாக அமைந்தன. இதன் இசை கேசட்டுகள் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தன.

‘சத்ரியனா இருக்கறதை விட சாணக்கியனா இருக்கணும்!’

‘ஜென்டில்மேன்’ படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை எழுத்தாளர் பாலகுமாரனிடம் ஒப்படைத்தது ஷங்கரின் புத்திசாலித்தனம். ஒரு சீனை மிக உணர்ச்சிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவதில் பாலகுமாரன் திறமைசாலி. இந்தப் படத்தில் பிராமணச் சமூகம் தொடர்பான வசனங்களும் வழக்கு மொழியும் கச்சிதமாக அமைந்ததற்குப் பாலகுமாரன் ஒரு முக்கியமான காரணம்.

கொள்ளைக்காரனைப் பிடிக்க முடியாமல் தோற்றுப் போகும் காவல் அதிகாரியிடம் “உன் யூனிபார்ம்ல வியர்வை வரும்படி என்னிக்காவது ஓடியிருக்கியா... த்தூ..ன்னு துப்பினாதான் அது ஈரமாகும்” என்று கோபத்தில் வெடிப்பார் அமைச்சர். இந்த வசனத்தின் பின்னுள்ள அவமானத்தை நினைத்துப் பாருங்கள். ‘சுள்’ளென்று இருக்கும். தன் உறவுகள் அழிவதற்குக் காரணமாக இருந்த அமைச்சரை வெட்டுவதற்கு அரிவாள் தூக்கும் அர்ஜுனிடம் “சத்ரியனா இருக்கறதை விட சாணக்கியனா இருக்கணும்” என்று நம்பியார் உபதேசம் செய்யும் இடம் முக்கியமானது. டாக்டர் ஆகும் பெருங்கனவுடன் மெடிக்கல் காலேஜ் போகத் துடிக்கும் மகனிடம் “பசிக்கும்டா... வயிறு கபகபன்னு பசிக்கும்” என்று நம்பியார் சொல்லும் போது அத்தனை உணர்ச்சிகரமாக இருக்கும். இப்படியாகப் பல இடங்களில் அற்புதமாக வசனம் எழுதியிருப்பார் பாலகுமாரன்.

ஜென்டில்மேன்

ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வரை ஒளிப்பதிவாளர் ஜீவாவின் அழகியல் உணர்வும் அசாதாரணமான உழைப்பும் தெரியும். குறிப்பாகப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அத்தனை அழகு. ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலை முதன் முதலில் பார்த்த போது நான் மிரண்டு விட்டேன். அத்தனை துள்ளலான படமாக்கலையும் நடனத்தையும் இசையையும் அதுவரை எம்டிவியில் மட்டுமே கண்டிருந்தேன்.

‘ஜென்டில்மேன்’ படத்தின் வெற்றிக்கு ஸ்டண்ட் மாஸ்டர் ‘விக்ரம் தர்மா’விற்கு ஸ்பெஷல் கிரெடிட் தர வேண்டும். ஆரம்பத்தில் வரும் வரும் ஆக்ஷன் காட்சி முதல் இறுதியில் வரும் சேஸிங் வரை அத்தனையும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஐ.ஜி. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளைக் கொள்ளையடிக்க வரும் அர்ஜுனிடம், இருமிக் கொண்டேயிருக்கும் ஒரு முதிய கான்ஸ்டபிள் திடீரென போடும் சோலோ ஃபைட் அசத்தலான ஆச்சரியம்.

ஜென்டில்மேன் – திரைக்கதையின் வசீகரம்

அப்பள கம்பெனி கிச்சாவும் கொள்ளைக்காரன் கிச்சாவும் ஒரே ஆள் என்பது பார்வையாளர்களுக்கு முதலிலேயே தெரிந்து விடும். ஆனால் படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாது. இதைப் போலவே அர்ஜுனுக்கும் காவல் அதிகாரி சரண்ராஜிற்கும் இடையில் நடக்கும் பூனை எலி வேட்டையின் நாடகம் படம் பூராவும் தொடர்கிற ஒரு சுவாரஸ்யமான அம்சமாக இருக்கும்.

ஏறத்தாழ படம் முடியும் சமயத்தில் ஒரு பொருத்தமான இடத்தில் ‘உணர்ச்சிகரமான பிளாஷ்பேக்’கை வைத்திருப்பார் ஷங்கர். அதுவரை பூடகமாகத் தெரிந்து கொண்டிருந்த அர்ஜுனின் பாத்திரம் ஏன் அப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெளிவாகப் புரிந்துவிடும். இடைவேளைக்குப் பின்பு ‘பிளாஷ்பேக்’ காட்சியைப் பொருத்தும் இந்தப் பாணியைப் பின்னர் பல இயக்குநர்கள் பயன்படுத்தினார்கள். திரைக்கதை அமைப்பதில் ஷங்கர் ஒரு முன்னோடி என்பதை உணர்த்திய விஷயம் இது.

ஜென்டில்மேன்

இந்தப் படத்தின் ஹீரோ பாத்திரத்திற்காக கமல்ஹாசனையும் தெலுங்கு ஹீரோ ராஜசேகரையும் முதலில் கதை சொல்லி அணுகியிருக்கிறார் ஷங்கர். இதிலிருந்த தவறான அரசியல் காரணமாகக் கமல் நடிக்க மறுத்ததாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இதை அவருமே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அர்ஜுனின் படங்கள் வரிசையாகத் தோல்வியடைந்து கொண்டிருந்த நேரம் அது. இளம் இயக்குநர்தான் என்றாலும் ஷங்கரின் கதையை நம்பி நடிக்க ஒப்புக் கொண்டார் அர்ஜுன். அவருடைய கரியரில் ‘ஜென்டில்மேன்’ ஒரு முக்கியமான படமாக ஆனது பின்னர் நிகழ்ந்த வரலாறு. ‘கிச்சா’வாகவும் கிருஷ்ணமூர்த்தியாகவும் பல காட்சிகளில் அருமையாக நடித்திருப்பார் அர்ஜுன். ஆக்ஷன் காட்சி முதற்கொண்டு நீதிமன்றத்தில் உணர்ச்சிகரமாக வசனம் பேசி வாதாடுவது வரை அர்ஜுனின் கொடி படம் முழுவதும் பறக்கும். “தங்கம் வாங்கற மாதிரி கல்வியையும் ஆடம்பரப் பொருளா மாத்திட்டீங்களேடா” என்று கோர்ட் சீனில் வசனம் பேசி உணர்ச்சிகரமாக நடித்திருப்பார் அர்ஜுன்.

மொட்டை போட்ட அழகர் நம்பி

ஹீரோவிற்கு நிகரான வலிமையுடன் வில்லனைச் சித்திரித்தால்தான் கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்பது அடிப்படையான பாடம். இதில் சரண் ராஜின் பாத்திரம் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரும் சிறப்பாக நடித்திருப்பார். ‘புடிச்சிட்டேன்... புடிச்சிட்டேன்’ என்று நாற்பத்து நான்கு கோடி ரூபாய் கொள்ளையனைப் பிடிப்பதற்காகவே அல்லும் பகலும் கொலைவெறியுடன் சிந்திக்கும் கேரக்ட்டர். “எனக்கு கோபம்லாம் இல்ல” என்று சொல்லிக் கொண்டே கோபப்படும் ‘அழகர் நம்பி’ என்கிற கேரக்ட்டரை சரண் ராஜ் அற்புதமாகக் கையாண்டிருந்தார். இந்தப் படத்திற்காக நிஜமாகவே இவர் மொட்டை போட்டுக் கொண்ட காட்சி ரகளையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

ஒரு நகைச்சுவை நடிகையாகவே நெடுங்காலம் அறியப்பட்டவர் மனோரமா. ஆனால் அவரை குணச்சித்திர பாத்திரங்களில் திறமையாகப் பயன்படுத்தியவர்கள் ஒரு சில இயக்குநர்களே. இந்த வரிசையில் ஷங்கரையும் சொல்லலாம். பிளாஷ்பேக் வழியாக சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ‘தன் மகனுக்குக் கல்வி தேடித் தரக் கனவு காணும் ஒரு ஏழைத் தாயின் பாத்திரத்தை மிக உணர்ச்சிகரமாகக் கையாண்டிருந்தார் மனோரமா.

ஜென்டில்மேன்

பொத்தி வைத்த அகல் விளக்காக நாயகி மதுபாலா ஒருபக்கம் ஜொலிப்பார் என்றால், அதன் எதிர்முனையில் கவர்ச்சி காட்டும் பாத்திரமாக வருவார் சுபஸ்ரீ. “ஏன் என்னைச் சுதந்திரமா இருக்க விடமாட்டேன்றீங்க?” என்று வெள்ளந்தியான சிரிப்புடன் வருவதும் பிறகு ஓர் இடத்தில் மனமாற்றம் கொள்வதும் சிறப்பான காட்சிகள்.

‘நீங்க பத்தாங் கிளாஸ் பெயில்ணே...’

நகைச்சுவை ஏரியாவை கவுண்டமணி – செந்தில் கூட்டணி சிறப்பாகக் கவனித்துக் கொண்டது. “நீங்க பத்தாங் கிளாஸ் பெயில்ணே... நான் எட்டாங்கிளாஸ் பாஸூண்ணே... பாஸூ பெரிசா, பெயிலு பெரிசா...” என்று கேட்டு கவுண்டமணியைக் காண்டாக்குவார் செந்தில். கப்ளிங், ஸ்பூனிங், ஜலபுலஜங், டிக்கிலோனா என்று புதுமையான ஆட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. நக்கலும் திமிரும் பிடித்த அமைச்சராக ராஜன் தேவ் அமர்க்களப்படுத்தியிருப்பார். சட்டசபையில் கத்திக் குமுறும் எதிர்க்கட்சியினரை நோக்கி ‘இருங்கய்யா... வரேன்’ என்று வேட்டியைத் தூக்கிக் கொண்டு இவர் நடப்பதே அத்தனை அழகு. டாக்டர் கனவு நிறைவேற முடியாத பரிதாப இளைஞனாக வினீத்தின் நடிப்பு உணர்ச்சிகரமாக இருக்கும்.

தமிழ் சினிமாவையே அதிர வைத்த ‘சிக்கு புக்கு ரயில்...’

“இவர் கிட்ட டியூன் தந்து ஓகே பண்ணி வாங்கறதுக்குள்ள எனக்கு உசுரு போயி உசுரு வருது” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் அம்மாவிடம் ஷங்கரைப் பற்றிச் சொல்லிப் புலம்பியதாக ஒரு தகவல் உண்டு. ஷங்கரைத் திருப்திப்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஏற்கெனவே சொன்னது போல் அது கிளாஸாகவும் மாஸாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். ஜென்டில்மேன் ஆல்பத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் இன்றைக்கும் கூட அணுஅணுவாக ரசிக்கக்கூடிய முத்துக்கள். சாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ், மாஸ்டர் பிரகாஷ் ஆகிய மூவரையும் இதில் பாடகர்களாக அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலின் ஆரம்பத்தில் சிறுவனின் குரலாக ஒலிப்பது ஜி.வி.பிரகாஷின் குரல். எஸ்.பி.பியும் சுஜாதாவும் பாடிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ இனிமையான மெலடி என்றால் ரகளையான இசையில் உருவான ‘சிக்கு புக்கு ரயிலே’ கேட்பதற்கே மிரட்டலாக இருக்கும்.

ஜென்டில்மேன்

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஹீரோயினை ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வைக்கும் டிரெண்ட் ஷங்கரின் படத்திற்குப் பிறகு அதிகரித்தது. இந்தப் பாடலில் மட்டும் கௌதமியும் பிரபுதேவாவும் ராஜு சுந்தரமும் தோன்றி ஆடியிருந்தார்கள். இதில் வெளிப்பட்டிருந்த பிரபுதேவாவின் நடனத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்தியச் சினிமாவின் நடன அசைவுகளைப் பெரிதும் பாதித்த நடனக்கலைஞர் என்று பிரபுதேவாவைச் சொல்லலாம். ‘ஜென்டில்மேன்’ படத்திற்குப் பிறகு இவர் அதிகம் கவனிக்கப்பட்டு ஹீரோவாக உயர்ந்தார்.

சாகுல் ஹமீதும் ஸ்வர்ணலதாவும் சேர்ந்து பாடிய ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ நாட்டுப்புற சாயலும் நவீனமும் இணைந்த அசத்தலான கலவையில் அமைந்த பாடல். ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வின் ரிதம் பேட்டர்ன் அட்டகாசமாக இருக்கும். ‘பார்க்காதே பார்க்காதே’வும் கேட்பதற்கு வித்தியாசமான டியூனில் ஒலிக்கும் பாடல். ரஹ்மான் இசையமைத்த ஆல்பம் என்றால் பாடல்களைக் கேட்காமலேயே கண்ணை மூடிக் கொண்டு ஆடியோ கேசட்டை வாங்கி விடலாம் என்றிருந்த காலகட்டம் அது. இந்த நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தினார் ரஹ்மான். ‘ஜென்டில்மேன்’ ஆல்பம் இந்த வரிசையில் ஒரு ஜெம் எனலாம்.

இடஒதுக்கீடும் லஞ்சமும்

‘ஜென்டில்மேன்’ திரைப்படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆபத்தான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது என்கிற காட்டமான விமர்சனங்கள் படம் வெளிவந்த காலகட்டத்தில் எழுந்தன. ஜனநாயக காலம் மலர்வதற்கு முன்னால் எத்தனையோ நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்ட சமூகங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு சலுகைகள் தரப்படுவது நிச்சயம் அவசியமானது. அது சலுகைகூட அல்ல, அவர்களின் உரிமை! இதுதான் சமூகநீதியின் அடையாளம். இதனால் முன்னேறிய சமூகத்தின் அடித்தட்டு மக்களில் ஒருசிலர் பாதிக்கப்பட நேரிடலாம். இதுவொரு தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டம். ஆனால் இதையே மிகைப்படுத்திக் காட்டக்கூடாது. அதற்கான தீர்வைத்தான் தேட வேண்டும். ஒரு குமாஸ்தாவின் மகன் டாக்டராவது அவசியம்தான். ஆனால் அதை விடவும் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியின் மகன் படித்து முன்னேறி முதல் தலைமுறை பட்டதாரியாவதுதான் சமநிலையான சமூக வளர்ச்சியின் அடிப்படை.

ஜென்டில்மேன்

இதைத் தாண்டி, ஜென்டில்மேன் திரைப்படத்தில் மினிஸ்டர் கேட்கும் லஞ்சம் மற்றும் தேர்வுப் பட்டியலில் நிகழ்ந்திருக்கும் ஊழல் ஆகியவை காரணமாகவே இளைஞர்களின் மருத்துவக் கனவு பாழாகிறது என்பது அழுத்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். லஞ்சம் என்பது தேசத்தையே அரிக்கும் கறையான் என்கிற கருத்தாக்கம் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

ஒரு மிகச்சிறந்த வெகுசன திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் கச்சிதமாகக் கைகூடிய கலவை என்று ‘ஜென்டில்மேன்’ படத்தைச் சொல்லலாம். வெறுமனே பொழுதுபோக்கு படமாக அல்லாமல் சமூகத்திற்கு அவசியமான செய்தியையும் சொன்ன படம். ஷங்கரின் பிற்கால பிரமாண்டமான முயற்சிகளின் ஆரம்பக் கால விதை ‘ஜென்டில்மேன்’.

மேலும் படிக்க ஜென்டில்மேன்: ஷங்கரின் பிரமாண்டங்களுக்கான விதை; மாஸும் கிளாஸும் கலந்த சினிமா - ஆனால் அந்த அரசியல்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top