கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டனில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். மூன்று ஆண்டுகாலம் ஆட்சியை வழிநடத்திய போரிஸ் ஜான்சன் ஊழல் மற்றும் பொருளாதாரத்தை சரியாக கையாளவில்லை என அவருக்கு எதிராக அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸும் அதே காரணத்துக்காக பதவி விலகியுள்ளார்.

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் இருந்து வந்தது. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கிய அந்த நாட்டால் தற்போது வரை மீண்டு வர முடியவில்லை. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து போரிஸ் ஜான்சன் தன பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடும் போட்டிக்கு பிறகு பொறுப்பேற்ற புதிய பிரதமரான லிஸ் ட்ரஸ், சில பொருளாதார மாற்றங்களை அறிமுகம் செய்தார். அது ஆண்டுதோறும் 2.5% பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்று கூறி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 45 பில்லியன் வரி குறைக்கப்பட்டிருந்தது. மேலும், வீடுகள் மற்றும் தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீது விலையைக் குறைக்க 60 பில்லியன் பவுண்டு கடன் வாங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் வருவாய் குறைந்து மீண்டும் நெருக்கடி நிலையே உருவானது. இதனால் இவர் மீது மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பிரிட்டனின் பிரதமர் லிஸ் ட்ரஸ், தவறான பொருளாதார நடவடிக்கை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார். நிதிநிலையை சீர் செய்ய எடுத்த நடவடிக்கையில் நிதியமைச்சர் க்வாசி க்வார்டெங்கையின் ஆலோசனை குறைவாக இருந்ததாகக் கூறி பதவியில் இருந்து நீக்கினார். இதன்பிறகு முன்னாள் வெளியுறவு துறை இணையச்சராக இருந்த ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக அறிவித்தார். அவர் புதிய பட்ஜெட்டை வரும் அக்டோபர் 30 -ம் நாள் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அதற்குள்ளாகவே எதிர்ப்புகள் அதிகரிக்க தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்த பிரதமருக்கான தேர்தல், வரும் அக்டோபர் 24-ம் தேதி மதியம் 2 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, மாலை 3.30-5.00 வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் முடிவுகள் 6 மணிக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதமர் வெற்றி வேட்பாளரின் பெயர் அக்டோபர் 28-ம் நாள் அறிவிக்கப்படும்.
ஒரு ஆண்டில் ஒரே குற்றச்சாட்டுக்காக இரு பிரதமர்கள் பதவி விலகி இருப்பது இதுவே முதல் முறை. தற்போது புது பிரதமராக தேர்ந்தெடுக்க அதிகம் வாய்ப்புள்ளவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், லிஸ் ட்ராஸுக்கு கடுமையான போட்டியாளராக விளங்கிய ரிஷி சுனக்தான்.
இதை சமீபத்தில் வெளிவந்த கருத்துக் கணிப்பும் உறுதி செய்தது. மேலும் ட்விட்டரில் #readyforrishi என்னும் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. அடுத்தடுத்த சரிவை சந்தித்திருக்கும் இங்கிலாந்தின் நிதிநிலையை சீர்செய்யும் பொருளாதாரத்தில் நிபுணுத்துவம் பெற்ற ஒருவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி ஆலோசித்து வருகிறது. அதற்கு மிக சரியான நபராக இருப்பவர் ரிஷி சுனக் என்கிறார்கள் அங்குள்ள அரசியல் வட்டாரங்கள்.
போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு, மேலும் புதிதாக லிஸ் ட்ரஸ் அறிவித்த பொருளாதார பட்ஜெட்டில் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்டியவரும் அவர்தான். அதனால் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக ரிஷி சுனக் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அதேவேளை இரண்டு பிரதமர்களை பதவியில் இருந்து இறக்கியிருக்கும் இந்த பொருளாதார நெருக்கடி நிலையை மையமாக வைத்து தான் தேர்தல் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதை சீர்செய்ய சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவருக்கான சவாலாக இருக்கும்.!
மேலும் படிக்க பிரிட்டன் பிரதமர் பதவி: தயாராகும் ரிஷி சுனக்... சவாலை சமாளிப்பாரா?!