ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இராஜபாளையத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் இந்த பணியை செய்து வருகிறார். பணிகளுக்காக அவ்வப்போது அப்பகுதியில் கண்டெய்னர், டிராக்டர், டிரைலர்களில் கட்டுமான பொருள்கள் சேமிக்கப்பட்டு, பின் அதிலிருந்து பயன்பாட்டுக்காக எடுத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கட்டுமான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் ட்ரெய்லர் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக கட்டுமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வந்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரின் சகோதரர் கருப்பசாமி ஆகியோருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகர் காவல் நிலைய போலீஸார், கண்ணன் மற்றும் கருப்பசாமியை அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, 'திருப்பாற்கடல் குளம் சீரமைப்பு பணிக்காக நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிரைலரை நாங்கள் தான் திருடினோம்' என கண்ணன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுப்பணிக்காக நிறுத்திவைத்திருந்த டிராக்டரை திருடிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க ஸ்ரீவில்லிபுத்தூர்: டிராக்டர் மாயமான வழக்கு... பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது!