பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ‘ஆஞ்சியோ’ செய்ய பரிந்துரைத்தனர். ‘அதற்கு ஜெயலலிதாவும் ஒப்புக் கொண்டார்’ என்று குறிப்பிடும் ஆறுமுகசாமி ஆணையம், ‘இறுதிவரையில் ஆஞ்சியோ ஏன் செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் பற்றவைத்த நெருப்பு, இன்று வரை அணையவில்லை. அவர் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், அந்த நெருப்பில் கூடுதல் எண்ணெயைத்தான் ஊற்றியிருக்கிறது. அதேசமயம், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோதும், அவர் மரணித்தபோதும் எழுந்த பல புதிர்க் கேள்விகளுக்கு தன் அறிக்கையில் விடையளித்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.
கைரேகையும்... பின்னணியும்...
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான சீனிவேல் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு அதே ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தச் சமயத்தில், ஜெயலலிதா மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சியின் வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு இரட்டை இலைச் சின்னத்தை அவர் வழங்க வேண்டியதிருந்தது. இதற்காக, ‘ஃபார்ம் பி’-யில் ஜெயலலிதாவின் கட்டைவிரல் ரேகை வைக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இதையேற்று, வேட்பாளருக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான், புதிய சர்ச்சையைக் கிளப்பினார் தி.மு.க வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட டாக்டர் சரவணன். “ஜெயலலிதாவின் கைரேகை குறித்து நான் வல்லுநர்களிடம் ஆராய்ந்தபோது, ரத்த ஓட்டம் இல்லாத நேரத்தில் இந்த ரேகைப்பதிவு நடைபெற்றது” எனக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று வழக்கும் தொடுத்தார்.
அவரின் கருத்து, ‘ஜெயலலிதா ஏற்கனவே இறந்துவிட்டார்’ என்கிற வதந்தியாக தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. சரவணன் எழுப்பிய சர்ச்சை புயலுக்கு, தன் அறிக்கையில் பதிலளித்திருக்கிறது ஆணையம். ‘சின்னம் வழங்குவதற்காக கட்டை விரல் ரேகையைப் பதிவு செய்தபோது, ஜெயலலிதா உயிரோடு இருந்தார்’ எனத் தெளிவாக கூறியிருக்கிறது. அதாவது, ‘2016, நவம்பர் 25-ம் தேதி, மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது, ஆஞ்சியோ செய்வதைப் பற்றி அமெரிக்க மருத்துவர் சமின் ஷர்மா விளக்கினார்’ என்ற ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எப்போது மரணமடைந்தார் ஜெயலலிதா?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘டிசம்பர் 5, 2016 இரவு 11:30 மணிக்கு, சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலலிதா இறந்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவமனையின் இந்தக் கருத்தையே எய்ம்ஸ் மருத்துவ குழுவும் உறுதி செய்திருந்தது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவரும் முன்னரே, சில செய்தி சேனல்களின் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ‘ப்ரேக்கிங் நியூஸ்’ செய்திகள் ஒளிபரப்பாகின. இதனால், ‘ஜெயலலிதா எப்போது மரணமடைந்தார்’ என்கிற புதிர் எழாமல் இல்லை. இதற்கெல்லாம் பதிலளிப்பதுபோல, முக்கியமான ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.
தன் அறிக்கையில், “ஆணையத்தின் பார்வையில் டிசம்பர் 4, 2016 பிற்பகல் 3:50 மணிக்கு ஜெயலலிதா காலமானார்” எனக் குறிப்பிட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக, ‘பிற்பகல் 2 மணிக்கு சசிகலாவின் அலறல் சத்தம், ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொண்ட அறையிலிருந்து கேட்டுள்ளது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 4-ம் தேதிதான், அவரின் அண்ணன் மகன் தீபக் அனுசரித்தார்’ என்றிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.
ஸ்லோ பாய்சன்... தாக்கப்பட்டாரா ஜெயலலிதா...
அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு, சிகிச்சை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, சரியான மருத்துவ நடைமுறையின்படியே இருந்தது. அதில் எந்தப் பிழையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேஷன், பெர்ஃபொரேஷன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் பிரச்னைகளுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ‘ஆஞ்சியோ’ செய்ய பரிந்துரைத்தனர். ‘அதற்கு ஜெயலலிதாவும் ஒப்புக் கொண்டார்’ என்று குறிப்பிடும் ஆறுமுகசாமி ஆணையம், ‘இறுதிவரையில் ஆஞ்சியோ ஏன் செய்யவில்லை?’ என்று சிகிச்சை நடைமுறையையே கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா தலையில் எவரோ மரக்கட்டையால் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார் எனவும் வதந்திகள் பரவின. ஆனால், ‘அவற்றுக்கான சுவடுகள் இல்லை’ எனக் கூறியிருக்கிறது ஆணையம். அதேபோல, ‘எம்பாமிங் செய்யப்பட்டதால் அவர் முகத்தில் துளைகள் இருந்தன. கால்கள் துண்டிக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?’ என்கிற புதிர்க் கேள்விகளும் அவர் இறப்புக்குப் பிறகு எழுந்தது. அந்தப் புதிர்களுக்கும், “சம்பிரதாய முறைப்படி ஜெயலலிதாவின் இரு கால் கட்டைவிரல்களும் துணியால் கட்டப்பட்டன” என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் அளித்த பதிலை ஆவணப்படுத்தியிருக்கிறது ஆணையம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த பல புதிர்களுக்கு விடையளித்திருக்கிறது ஆணையம். அதேநேரத்தில், ‘ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என தெரிந்திருந்தும், அவருக்கு பாராசிட்டமால் மருந்து மட்டும் கொடுத்தது ஏன்?’ என்பன போன்ற பல புதிய புதிர்களையும் போட்டிருக்கிறது. அதற்கு விடை தெரியும் நாள் என்னாளோ?
மேலும் படிக்க ஆறுமுகசாமி ஆணையம்... புதிர்களும் விடைகளும்