25-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் அவள் விகடன். தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக வரித்துக்கொண்டு கால் நூற்றாண்டாக அர்த்தபூர்வமான வெற்றியை வழங்கிவரும் வாசக நெஞ்சங்களுக்கு வணக்கமும் நன்றியும்!
1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவள் விகடன், 2005-ம் ஆண்டு தமிழின் நம்பர் 1 பெண்கள் பத்திரிகையாக மகுடம் சூட்டியபோது, ஆசிரியர் குழுவின் உற்சாகத்துக்கு இணையான மகிழ்வுடன் வாசகிகள் வாழ்த்துகளை அனுப்பிக் குவித்தபோது, `என்ன தவம் செய்துவிட்டோம்...’ என்று நின்றிருந்த கணம் நெஞ்சிலாடுகிறது. இன்றுவரை அந்த வெற்றி தொடர காரணம், பெண்களுக்கு தற்சார்பு ஊட்டும் எங்கள் முதன்மை நோக்கம் ஒவ்வோர் இதழ் தயாரிப்பிலும் அதிர்ந்துகொண்டே இருப்பதுதான்.
பெண்கள் வேலை, சுயதொழில் வாய்ப்புகளை பற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டுரைகள் மூலம் மட்டுமா உந்துதல் கொடுத்தோம்? ‘நீங்களும் தொழிலதிபர்தான்’, ‘மகளிர் திருவிழா’ உள்ளிட்ட சுயதொழில்முனைவோர் பயிற்சி முகாம்களை நடத்தினோம். அதில் ஒரு மேடையிலேயே வங்கிக் கடனையும் பெற்றுத் தந்தபோது, ஒரு பெண்கள் பத்திரிகையால் பக்கங்களைத் தாண்டி களத்திலும் இந்த அளவுக்கு அசத்த முடியுமா என்று ஆச்சர்யமும் நன்றியுமாகப் பாராட்டிய தோழிகளின் கண்கள் ஒளிர்ந்ததில் கண்டுகொண்டோம், எங்களுக்கான திசையை. அவர்களில் பலரும் இன்று தொழிலில் கோலோச்சிக்கொண்டிருப்பதை, ஈன்ற பொழுதின் உவப்புடன் ரசிக்கிறோம்.
பொதுவில் பேசக்கூடாத விஷயமாகப் பார்க்கப்படும் தாம்பத்ய உறவு குறித்து, 20 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்த ‘ரொமான்ஸ் ரகசியங்கள்’ தொடர் செம ஹிட். ‘பெண்ணுடலை பேசுவோம்’ தொடர்வரை, பேசாப்பொருளை பேசும் எங்கள் துணிவு தொடர்கிறது, உங்கள் ஆதரவால்.
20 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில், பெண்களின் கொண்டாட்டத்துக்காக தமிழகமெங்கும் நடத்திய ‘ஜாலி டே’... மாபெரும் புரட்சிகரமான நிகழ்வு. இன்னொரு பக்கம், சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொரு முறையும் தேடியெடுத்து அங்கீகரிப்பது, எடிட்டோரியலுக்கான நிறைவான கொண்டாட்ட தருணமாகியது.
தொடர்ந்து, பயன்பாட்டு அடிப்படையிலான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இதழ் வடிவெடுத்தபோது, வரவேற்பும் இரு மடங்கானது. அந்த வகையில், அரசு சான்றிதழ்களுக்கான விண்ணப்பம் முதல் சேமிப்பு வரை அனைத்திற்கும் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன இணைப்பிதழ்கள்.
எவ்வளவு பெரிய கொண்டாட்டமானாலும் குலதெய்வத்துக்கு முதலில் முடிந்து வைத்துவிடும் காசுபோல நிரந்தரமானது, இதழில் வாசகிகளுக்காக நாங்கள் ஒதுக்கும் பக்கங்கள். அனுபவத் துணுக்குகள் முதல் கதை, கவிதை வரை ஒவ்வோர் இதழுக்கும் ஆயிரக்கணக்கில் வரும் கடிதங்கள், படைப்புகளே அதற்கு சாட்சி. மேலும், மருத்துவம் முதல் ஃபேஷன் வரை அவள் விகடன் நடத்தும் வெபினார்கள் மூலமும் இணைப்பில் இருக்கும் டெக்கி வாசகர்கள் ஆயிரமாயிரம் பேர்.
அவள் விருதுகள் - கிரீடத்தில் மற்றொரு மரகதக்கல். கல்வி, சேவை, கலை, சாகசம் எனப் பல துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்களைப் பெருமைப்படுத்தும் மகத்துவமான மேடை. உள்ளூர் டீச்சர் முதல் உலகறிந்த ஆளுமைகள் வரை என விருதாளர்களைத் தேடித் தேடி பெருமைப்படுத்தும் அவள் விகடனின் பெரும் பொறுப்பு இது. பொறுப்பு தொடர்கிறது. எல்லாம் வல்ல வாசகர்களின் ஆதரவுடன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கிறோம். அன்பு, அறிவு, அழகை உங்களுக்கு சேர்ப்பிக்க கிடந்துழைப்போம் எப்போதும்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
மேலும் படிக்க நமக்குள்ளே...