``பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?"
``பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு சாதகமாக வராது என்று அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் தீர்ப்பு வரும்வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இனி அவர்களுக்கு தொடர் தோல்விதான்."
``ஜூலை 11 பொதுக்குழு செல்லும் சென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீங்கள் செல்லுவதில் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?"
``பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி, அமர்வு என இருவேறு தீர்ப்பு வந்துள்ளது. அமர்வு நீதிபதி பொதுக்குழு செல்லும் என்று கூறினாரே தவிர, ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்று அறிவிக்கவில்லை. அதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்துக்கு செல்ல வழிகாட்டி இருக்கிறார்கள். அதேபோல, மேல்முறையிட்டு வழக்கில் கட்சியின் சட்டத்திட்டங்களைதான் உச்ச நீதிமன்றம் பகுப்பாயும் செய்யும். கட்சியின் விதிதான் முக்கியமே தவிர மெஜாரட்டி முக்கியமில்லை. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் வரும்."
``சாதகமான தீர்ப்பு வருமென்று அதீத நம்பிக்கையிருந்தால், ஏன் அவசர அவசரமாக நிர்வாகிகளை நியமிக்கிறீர்கள்?"
``எங்களை பொறுத்தவரையில் அ.தி.மு.க-வுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்தான். எடப்பாடி தரப்பால் நீக்கப்பட்டவர்களை நிர்வாகிகளாக நியமிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. "

"என்னதான் நிர்வாகிகளை நியமித்தாலும் உங்களால் தொண்டர்கள் மத்தியில் ஒரு 'மாஸை' உருவாக்க முடியவில்லையே?"
``நெற்கட்டும்சேவலில் செப் 1-ம் தேதி நடைபெற்ற பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில் ஓ.பி.எஸ்-ஸின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் கூடினார்களே... கட்சியும், சின்னமும் எடப்பாடி கையில் இருப்பதாக மாயை இருக்கிறது. அது இல்லை என்று தீர்ப்பு வந்ததும் தொண்டர்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் ஓ.பி.எஸ்."
"ஜெயலலிதா மரணத்தில் சசிகலா தினகரன் மீது சந்தேகத்தை எழுப்பிய ஓ.பி.எஸ், இப்போது அவர்களை ஆதரிப்பது முரணாக இல்லையா?"
"சின்னம்மாவை குற்றவாளி என்று யாரும் சொல்லவில்லை. அன்றைய தினத்தில், அம்மா மரணத்தில் தொண்டர்கள் மனநிலையை ஓ.பி.எஸ் பிரதிபலித்தார். தற்போது விசாரணை ஆணையம்தனது அறிக்கையை அரசுக்கு சமர்பித்து இருக்கிறது. அதில் ஒரு முடிவு வந்துவிடும். இதற்கிடையே, சின்னம்மாவால் முதல்வரான எடப்பாடி, கட்சியை சீரழித்துவிட்டார். தனது சர்வாதிகாரபோக்கால், தொடர் தோல்வியை சந்திக்க வைத்துவிட்டார். இதனால், கட்சியை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். இதில் முரண் இல்லை. கட்சியின் நலன்மட்டும்தான் உள்ளது."
``உங்கள் தரப்புக்கு சசிகலா பணம் கொடுப்பதாகவும், அதனால்தான் நீங்கள் அவரை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறதே?"
``எடப்பாடியைபோல எங்களால் பணம் செலவிக்கமுடியவில்லை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். சின்னம்மா பணம் கொடுப்பது உண்மையாக இருந்தால், இஷ்டத்துக்கு செலவுச் செய்திருப்போமே... ஆனால், நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லையே... அதேநேரத்தில், கட்சியின் வளர்ச்சிக்காக தேவையான பணத்தை செலவுச் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்."

``தர்மயுத்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ் பக்கமிருந்த கே.பி.முனுசாமி எடப்பாடி தரப்புக்கும், அங்கிருந்த நீங்கள் இங்கு வந்ததற்கும் என்ன காரணம்?"
``எடப்பாடி முதல்வராக இருந்தபோது கல்குவாரி, கிரானைட் குவாரி உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை பெற்று நன்றாகவே சம்மாதித்துவிட்டார் கே.பி.முனுசாமி. தற்போது எடப்பாடியுடன் இருக்கும் பலரும் அப்படி பயனடைந்தவர்கள்தான். அவர் கட்சியை சீரழிக்கிறார் என்று புரிந்தவுடன் அவ்வளவு டிக்கெட்டும் சிதறிவிடும். என்னை பொறுத்தவரை கட்சியின் நலனுக்காக ஓ.பி.எஸ் சிந்திக்கிறார். அவருக்கு பக்க பலமாக துணை நிற்கிறேன்."
``ஆனால், உங்களுக்கு முதல்வர் கனவு இருப்பதால்தான் ஓ.பி.எஸ்-ஸை இயக்குவதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறாரே?"
``மூத்த அரசியல்வாதியான அண்ணன் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. என் உயரம் எனக்கு தெரியும். அப்படி ஒரு எண்ணம் எனக்கு சிரிதளவும் இல்லை."
``சமூகம் சார்ந்து லோக்கல் அரசியலுக்கு சசிகலா ஆதரவு உங்களுக்கு தேவைப்படுவதாக கூறுகிறார்களே?"
``அப்படியெல்லாம் இல்லை. டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க எனது தொகுதியில் 26 ஆயிரம் ஓட்டு வாங்கியது. அதையும் மீறிதான் 29 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றேன். அப்படி இருக்கும்போது எனக்கு என்ன சொந்த லாபமிருக்கிறது. 2021-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆளும்கட்சியாகாமல் போனதற்கு அ.ம.மு.க பிரிந்ததுதான் காரணம். அன்று அ.ம.மு.க-வுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்திருந்தால், 150 இடங்களுக்கும் மேல் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கலாம். ஆனால், எடப்பாடி தனது சுயலாபத்துக்காக கட்சியின் வெற்றியை தடுத்துவிட்டார். இதனால்தான் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். "
``அரசுக்கு எதிராக போராட்டம், கட்சியை வளர்க்க சுற்றுப்பயணம் என்று சுற்றும் எடப்பாடி கட்சியை சீரழிப்பதாக கூறுவது வேடிக்கையாக இல்லையா?"
``ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டத்தின் கூட்டமெல்லாம் தலைக்கு 200, 300 ரூபாய் என விலைபேசி அழைத்து வருகிறார்கள். அது அன்றைக்கு ஒருநாள் கூத்து. அது நிலைத்து நிற்காது. இதை பலமாக நினைப்பது அவர்களின் அறியாமை."
``தி.மு.க எதிர்ப்புதான் அ.தி.மு.க-வின் உயர்நாடி. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு ஓ.பி.எஸ் ஆதரவல்லவா அளிக்கிறார்?"
"ஆதரவெல்லாம் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியை ஆளும்கட்சி பழிவாங்கக்கூடாது. அப்படி நடக்கும்போது, அதை தைரியமாக எதிர்த்து நின்று சட்டரீதியாக அணுகவேண்டும் என்று கட்சியின் தலைவராக ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால், அதை அவர்கள் திருத்து பிரசாரம் செய்கிறார்கள்."
"ஜூலை 11-ல் ஓ.பி.எஸ் தலைமையில்தானே அலுவலகம் சூறையாடப்பட்டது. ஒரு தலைவர் செய்யும் காரியமா இது?"
"அலுவலகம் செல்லும்போது அங்கிருந்த குண்டர்கள் சோடா பாட்டில்கள், கற்களை கொண்டு எங்களை தாக்கினர். தற்காத்துக் கொண்டு உள்ளே செல்லும் முன்பாகவே அலுவலகம் முழுவதையும் அவர்கள் சூறையாடிவிட்டர். அங்கு சிதறிகிடந்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்து சென்றோம். ஆனால், பழி எங்கள்மீது விழுந்துவிட்டது."

"தொண்டர்கள்தான் தலைவரை முடிவு செய்வார் என்று சொல்லும் நீங்கள், கட்சிக்குள் பிரச்னை என்றால் டெல்லி பா.ஜ.க-விடம் ஓடுவதுஏன்?"
``தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுடன் நாங்கள் இருக்கிறோம். அந்த அடிப்படையில் எங்கள் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு, அனைவரையும் ஒன்றுப்படுத்த பாஜகவுக்கு எல்லா உரிமை உண்டு. அந்த அடிப்படையில், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் ஓ.பி.எஸ் விரைவில் சந்திப்பார்."
``பண்ரூட்டி ராமசந்திரனை நீங்கள் ஆலோசகராக நியமிக்க காரணமென்ன?"
"அவர் மிகதிறமையான அரசியல்வாதி. சிறந்த ஆலோசனைகளை வழங்கக்கூடியவர். அவரின் ஆலோசனைக்கு பின்னர், நாங்கள் வேகமெடுக்க உள்ளோம்."
"வைத்திலிங்கத்துக்கு வைத்திலிங்கமே கொடுக்கும் ஒரு அட்வைஸ் என்ன?"
"தொண்டர்களின் ஆதரவோடு கூட்டுத்தலைமையில் இந்த இயக்கம் வலுவோடு இருக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும்."
மேலும் படிக்க ``அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!” - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்