நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள புத்தூர் வயல் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதான மோகன். இவரின் மனைவி உஷாவை காணவில்லை என தனது மைத்துனருடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மோகனின் மனைவியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். எனினும் மோகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் மோகன் வீட்டிற்கு திடீரென சென்றுள்ளனர். வீட்டுச் சுவற்றில் சில இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்ட காவல்துறையினர், மோகனிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி உஷாவை கொலை செய்த உண்மையை தெரிவித்திருக்கிறார் மோகன். உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர், "இந்த தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 19ம் தேதி கூடலூரில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில் மோகன், உஷா ஆகிய இருவரும் தனித்தனியாக பங்கேற்றுள்ளனர். மறுநாள் காலையில் தனது மனைவியை காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் மோகன் தெரிவித்ததோடு உஷாவின் தம்பி சத்யைனை அழைத்துக் கொண்டு வந்து புகார் அளித்தார். மோகனிடமே விசாரணை நடத்தினோம். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்து உஷாவை கீழே தள்ளிவிட்டதும், இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.
யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் உடலை காரில் கொண்டு சென்று பாடந்தொரை பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் வீசியிருக்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல மனைவியை காணவில்லையென நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மோகனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மேலும் படிக்க வீட்டு சுவற்றில் ரத்தக்கறை; பள்ளத்தில் மனைவியின் சடலம் - நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி?!