கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோ எடுத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல், பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காசி கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொருளாதாரத்தில் வசதியான இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும், ரகசிய கேமரா வைத்து பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோக்களை பதிவு செய்துவந்துள்ளார். சுமார் 900 ஜிபி அளவுக்கு காசியிடம் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பெண்களிடம் பணம் பறித்துள்ளார். சிறுமி மற்றும் திருமணம் ஆன பெண்களும் காசியின் வலையில் சிக்கியுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாது பெங்களூர் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் காசியால் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. காசி வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்டவைகளை உடைத்து ஆதாரத்தை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.
காசி ரகசியமாக எடுக்கும் வீடியோக்களை அவரின் நண்பர்களான டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் ஆகியோருக்கு அனுப்பிக்கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மூன்று நண்பர்களில் கெளதம் மட்டும் குவைத்தில் வேலை செய்துவந்தார்.

டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் காசியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்டவைகளை செய்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளக கெளதம் வெளிநாட்டிலேயே இருந்ததால் அவரை போலீஸாரால் கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
மேலும், காசியின் அறிவுறுத்தலின் படி பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுள்ளார் கெளதம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் தான், குவைத் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கெளதம் வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாகர்கோவில் காசி வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
மேலும் படிக்க பாலியல், மோசடி வழக்கு: வெளிநாட்டில் இருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்ட காசியின் நண்பர் சிக்கினார்!