கடந்த 2011ம் ஆண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த பணியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இது தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்" என்றனர்.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் மேற்கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், எனவே தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம், "நாங்கள் 1990 காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்டோம். அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டோம். ஒரு ஆண்டு வேலை பார்த்தோம். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எங்களை பணியில் இருந்து நீக்கி விட்டார். பிறகு 96-ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு பணி வழங்கப்பட்டது.
முதல் முறை போடும்போது, தற்காலிக பணி என்று போடப்பட்டது. அடுத்த முறை ஒப்பந்த பணியாளர்கள் என்று போட்டு விட்டனர். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் எங்களை நீக்கி விட்டார். 3வது முறையாக 2006-ல் மீண்டும் கருணாநிதி வேலை வழங்கினார். அப்போது இரண்டு ஆண்டு ஒப்பந்த பணி என்று போட்டுவிட்டார். 2011-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நீக்கிவிட்டார். அதன் பிறகு ஒவ்வொரு நீதிமன்றமாகச் சென்று வழக்கு நடத்தி வருகிறோம்.
2011-ல் 'மக்கள் நல பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தவறு. இனியாவது நிரந்தரமாக பணி கொடுங்கள்' என்று நீதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. பிறகு தொடர்ந்து இதுநாள் வரை போராடி வருகிறோம். திமுக ஆட்சியில் எங்களுக்கு பணி வழங்கப்பட்டது என்பதற்காக அதிமுக அரசு எங்களை மூன்று முறை நீக்கி விட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், 'நான் ஆட்சிக்கு வைத்ததும் முதல் கையெழுத்து போடுகிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கை திரும்ப பெறுகிறேன். ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவர் கூட இறக்க மாட்டார்கள்' என்றார். இதனால் நிரந்தர பணி கிடைக்கும் என நினைத்தோம். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தோம். கடைசியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் செயல்படுவோம்என்று தற்போது முதல்வர் கூறுகிறார்.

ஒரு அரசு மூன்று முறை நீக்குகிறது. ஒரு அரசாங்கம் நான்காவது முறையும் ஒப்பந்த பணியாளர்களாக போடுகிறது. உலகில் எங்கையாவது இப்படி நடக்குமா?. யாராவது ஒருத்தர் அரவணைக்க வேண்டும். இரண்டு அரசும் சேர்த்து எங்களது வாழ்க்கையே அழித்து விட்டார்கள். பலி வாங்கி விட்டார்கள். அ.தி.மு.க., அரசு ஒரே நாளில் கொன்றார்கள். தி.மு.க., அரசு கொஞ்சம், கொஞ்சமாக 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து கொல்கிறது. விரைவில் அனைத்து சங்கங்களும் இணைத்து கூட்டம் கூட்டப்படும். அப்போது வழக்கை திரும்ப பெற்று, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
மேலும் படிக்க `திமுக அரசு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து கொல்கிறது' - மக்கள் நலப் பணியாளர்கள் சங்க தலைவர் வேதனை