திருவாரூர் மாவட்டத்திலிருந்து அண்டை மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். திருவாரூர் விளமல் அருகே தியாகபெருமாநல்லூரில் கடந்த 2010-ம் ஆண்டு இந்த புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 2012-ம் ஆண்டு முதற்கட்டமாக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இடையில் நிதிப் பற்றாக்குறையால் பேருந்து நிலையத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக மேலும் ரூ.7.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மொத்தமாக ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் 8 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே அடிப்படை வசதிகளின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது முதல்வரின் சொந்த ஊர் புதிய பேருந்து நிலையம் என்கிறார்கள்.
குண்டு குழியுமான சாலைகள் :
`` `திராவிட மாடல் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், சாலை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும்' என்று சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பதில் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டதிலேயே புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயிலின் சாலையானது தொடர்ந்து சேதமடைவதும் பின் தற்காலிகமாக சரிசெய்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது" என முணுமுணுக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.





புதிய பேருந்து நிலையத்தின் முகப்பு நுழைவாயிலில் பேருந்து உள்ளே, வெளியே செல்லும் சாலையானது சென்ற 2020-ம் ஆண்டு கோடைகாலத்தில் பெய்த மழைக்கே குண்டு குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. பின் தற்காலிக நடவடிக்கையாக சேதமடைந்த சாலைகள் ஜல்லி சிமென்ட் கலவையைக் கொட்டி அப்போது சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழையின் காரணமாக மீண்டும் சாலைகளில் பல இடங்களில் தற்காலிகமாக அமைத்த ஜல்லி சிமென்ட் கலவை பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்தது. இதன் வழியாக பேருந்து நிலையம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே இடறி விழுவதும், பேருந்துகள் பள்ளத்தில் சிக்கிக்கொள்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
மழைக்காலங்களில் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் குண்டும் குழியுமான சாலையில் நீர் தேங்கி அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. "நுழைவாயில் சாலை குண்டும் குழியாக மாறுவதும் பிறகு இதனை அதிகாரிகள் சரிசெய்வதும், மீண்டும் சேதமடைவதும் வாடிக்கையானது" என்று இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இனிவரும் காலங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே நுழைவுவாயில் சாலையினை மீண்டும் தற்காலிகமாக இல்லாமால், நிரந்தரமாக சீரமைக்கவேண்டும் என்பதே ஓட்டுநனர்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
செயல்படாத புறக்காவல் நிலையம் :
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் புறக்காவல் நிலையமானது போலீஸாரின் வாகனங்கள் நிறுத்துமிடமாக மட்டும் உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையமானது இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மற்றும் போதை ஆசாமிகளின் கூடாரமாகவும்... பகல் நேரங்களில் காதல் ஜோடிகளின் மீட்டிங் பாயின்ட்டாகவும் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் பயணிகள்.



அதுமட்டுமல்லாமல் இங்கு இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்களுங்கும் அறங்கேறிவருகின்றன. இதனால் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கின்றனர்.
பூட்டப்பட்ட பாலூட்டும் அறை :
புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் மதுரை-சேலம்-பழனி பேருந்துகள் நிற்கக் கூடிய இடத்தின் அருகே தாய்மார்கள் பாலூட்டும் அறை இருக்கிறது. அறையின் வெளிப்பக்கச் சுவர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு, எச்சில் துப்பப்பட்டு மிகவும் அசுத்தமாகத் தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் காணப்படுகிறது. உள்ளே சுவரின் மின் பொத்தான் இணைப்புகள் உடைக்கப்பட்ட நிலையில், மின் இணைப்பு கம்பிகள் வெளிப்புறமாக நீட்டியவாறு ஆபத்தான நிலையில் இருக்கின்றன.





தாய்மார்கள் பாலூட்டும் அறையானது எந்நேரமும் பூட்டப்பட்டு இருக்கிறது. அறையின் இருபக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைபட்ட நிலையில், அறையின் உட்புறம் நாற்காலிகள் சுத்தம் செய்யப்படாமலும், மின்விளக்கு, மின்விசிறி இணைப்பு துண்டிக்கப்பட்டு அசுத்தமாக இருக்கிறது. இதனால் தாய்மார்கள் பயன்படுத்த முடியாத நிலையில், பாலூட்டும் அறை காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்கேற்ப அந்த பாலுட்டும் அறையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி :
திருவாருரிலிருந்து சுற்றுலாத்தலங்களான வேளாங்கண்ணி, கோடியக்கரை, நாகப்பட்டினம் மற்றும் நாகூர் செல்வதற்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



இங்கிருந்து பயணம் செய்யக்கூடிய பயணிகள் அமர்வதற்கு எவ்வித இருக்கைகளும் இல்லாத காரணத்தினால் பயணிகள் கால் கடுக்க காத்திருந்தே பயணம் மேற்கொள்கின்றனர்.
திறந்து கிடக்கும் கால்வாய் :
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய் சரியாக மூடாமல் திறந்தே கிடக்கிறது. கால்வாய் தூர்வாரத காரணத்தினால் நீர் தேங்கி சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் இதனை சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதுபோன்று சரியான குடிநீர் வசதி மற்றும் இலவச கழிப்பிடத்தை சரியாக பராமரிக்க வேண்டும என்றும் மக்கள் கூறுகின்றனர்.



சாலை வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறைகள், இருக்கைகள், குடிநீர் வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் (சரியில்லாமல்) முதல்வரின் சொந்த ஊரில் பெயரளவில் மட்டும் `புதிதாக' இருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் படிக்க பெயரளவில் மட்டுமே புதிய பேருந்து நிலையம்; அடிப்படை வசதிகளின்றி முதல்வரின் சொந்த ஊர் பேருந்து நிலையம்