Doctor Vikatan: பிபி மானிட்டர் வைத்து வீட்டிலேயே அடிக்கடி பிபி அளவை சரிபார்ப்பது சரியானதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்கும் பிபி மானிட்டர், சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் குளுக்கோமீட்டர் போன்ற கருவிகளை வைத்து வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்ப்பது என்பது ஒருவகையில் நல்லதுதான். ஆனால் அதை அதீதமாகச் செய்வது, அதாவது தினமும் காலையும் மாலையும் பார்ப்பது போன்ற செயல் ஒருகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்புவோர், இப்படி தினமும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியதில்லை. 15 நாள்களுக்கொரு முறையோ, மாதம் ஒருமுறையோ செக் செய்தால் போதுமானது. ரத்தச் சர்க்கரை அளவை டெஸ்ட் செய்வதற்கும் இது பொருந்தும்.
ரத்த அழுத்தம் என்பது பல விஷயங்களால் மாறக்கூடியது. உதாரணத்துக்கு சிரித்தால் அதிகமாகும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நார்மலாகும். கோபப்பட்டால் அதிகமாகும். எனவே இது புரியாமல் 120/80 இல்லையே என்று புலம்புவார்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி நம் உணர்வுகள், உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ரத்த அழுத்தத்துடன் தொடர்புண்டு. மாறாக ஒருவருக்கு தொடர்ந்து பிபி அளவு 140/90 என அதிகமாகவே இருந்தால் அதை அசாதாரணம் என்று அலர்ட் ஆகலாம்.
நீங்கள் பிபி அளவைப் பரிசோதிக்கும் நேரத்தை கவனியுங்கள். பரபரப்பான வேலைகள் செய்த உடனேயோ, ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போதோ பிபி அளவை டெஸ்ட் செய்யாமல், ரெஸ்ட் எடுத்துவிட்டுச் செய்து பாருங்கள். அப்போதும் பிபி அளவு அசாதாரணமாக, அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள்.

பொதுவாகவே ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது ஒருவருக்கு பக்கவாதம் பாதிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே உங்கள் பிபி அளவு 200-ஐத் தாண்டும்போது நீங்கள் அலர்ட் ஆக வேண்டும். அதன் பிறகும் வீட்டில் இருந்தபடியே அதை டெஸ்ட் செய்து பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வீட்டிலேயே பிபி அளவை டெஸ்ட் செய்வது சரியானதா?