Doctor Vikatan: சில வருடங்களுக்கு முன்பு எனக்கொரு விபத்தில் கை, கால்களில் அடிபட்டது. அந்த இடங்களில் காயம் ஆறியதும் தழும்புகள் ஏற்பட்டன. அந்தத் தழும்புகள் வழக்கமானதாக இல்லாமல் தடித்து, வீங்கினாற்போல காட்சியளிக்கின்றன. மருத்துவரிடம் கேட்டபோது அவை கீலாய்டு தழும்புகள், அவற்றை அகற்ற பிரத்யேக சிகிச்சை தேவை என்றார். அதென்ன கீலாய்டு தழும்பு? இது புற்றுநோய் வளர்ச்சியின் அறிகுறியா? இதைப் போக்க சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

கீலாய்டு தழும்புகள் என்பவை, அடி அல்லது காயம்பட்ட இடத்தின் ஓரங்களை ஒட்டி உருவாகும் தழும்புகள். அதாவது கீலாய்டு தழும்புகள், சருமத்துக்கு மேல் சதைபோலப் பெருத்து வளரக்கூடியவை.
காயங்களை ஆற்றும் செயலின்போது உடல் அளவுக்கதிமான, கெட்ட கொலாஜெனை உற்பத்தி செய்யும். தழும்புகளில் இருவகை உண்டு. ஒன்று 'ஹைப்பர்ட்ரோபிக் ஸ்கார்' (Hypertrophic Scar). இது அளவில் பெரிதாக இருக்கும்.
இந்தத் தழும்பைப் போலவே சருமத்தின் மேல் பகுதியில் கீலாய்டு தழும்புகளும் வளரும். ஆனால் இது அடர் நிறத்திலும் தொடுவதற்கு அழுத்தமானதாகவும் இருக்கும்.
இது கேன்சர் ஆபத்துள்ள வளர்ச்சியல்ல என்பது ஆறுதலான விஷயம். காயம் ஆறும்போது இணைப்புத்திசுக்களை உருவாக்கும் செல்களான ஃபைப்ரோபிளாஸ்ட் என்பவை கொலாஜெனை டெபாசிட் செய்யத் தொடங்கும். ஆனால் அதை எப்போது நிறுத்துவது என்பதை மறந்துவிடும். அப்படித்தான் கீலாய்டு தழும்புகள் உருவாகின்றன.
கீலாய்டு தழும்புகளின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இந்த வகைத் தழும்புகள் மெதுவாகவே தெரிய ஆரம்பிக்கும். சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் மேலெழும்பிய தழும்புகளாகக் காட்சியளிக்கும். மெள்ள மெள்ள அளவில் பெரிதாகும். இந்தவகைத் தழும்புகள் மென்மையாகவும் இருக்கலாம் அல்லது கடினமாக, ரப்பர் போன்று அழுத்தமாகவும் இருக்கலாம். இவற்றில் சில நேரம் வலியோ, எரிச்சலோ, அரிப்போ இருக்கலாம்.
கீலாய்டு தழும்பானது ஒரே இடத்தில்தான் இருக்கும். நாள்கள் செல்லச் செல்ல அடர் நிறத்துக்கு மாறும். கீலாய்டு தழும்புகள் ஏற்படுவதற்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. குடும்பப் பின்னணியில் கீலாய்டு தழும்புகளால் பாதிக்கப்பட்டோருக்கு அது தொடரலாம். ஒருமுறை கீலாய்டு தழும்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அது மீண்டும் வரலாம். மங்கு பாதிப்புள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். 10 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.

பூப்பெய்தும் வயதிலும் கர்ப்ப காலத்திலும் இருக்கும் பெண்களுக்கு உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகவும் கீலாய்டு தழும்புகள் வரலாம்.
கட்டுப்பாடில்லாத இந்தத் தழும்பு வளர்ச்சியை கீமோதெரபி மருந்துகள் உள்ளிட்ட சில வகை ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்து குணமாக்கலாம். இவை தவிர அல்ட்ராபல்ஸ் கார்பன்டை ஆக்ஸைடு லேசர் சிகிச்சை, பிரஷர் தெரபி, ரேடியேஷன், சில வகை க்ரீம்கள் என இதற்கு வேறு சில தீர்வுகளும் இருக்கின்றன.
எனவே நீங்கள் சரும மருத்துவரை நேரில் அணுகி, உங்கள் தழும்பின் தீவிரம் தெரிந்து, அவர் பரிந்துரைக்கும் சிகிச்சையைப் பின்பற்றலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: கீலாய்டு தழும்பு என்பது என்ன? அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?