Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டியதன் அவசியம் என்ன? அவசியம் தடவ வேண்டும் என்றால் எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது என்பது அவசியமானதுதான். அந்தக் காலத்தில் தலை முதல், பாதம் வரை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பார்கள். நல்லெண்ணெய் சன் ஸ்கிரீனாகவும் வேலை செய்யும். வாரம் முழுவதும் வெயிலில் அலைவதால் சூரியக் கதிர்கள் நம் சருமத்திலும் கூந்தலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடியது நல்லெண்ணெய்.
உங்களுடைய கூந்தல் வறண்டிருக்கிறது, பொடுகு பிரச்னை உள்ளது, அரிப்பு இருக்கிறது என்றால் அதற்கேற்ப எண்ணெய் வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகள் தீவிரமாகாமல் தடுக்கலாம். நல்லெண்ணெயோ, விளக்கெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ.... உங்களுக்கு எது விருப்பமோ அதைப் பயன்படுத்தலாம்.
தவிர ஐந்தெண்ணெய் காம்பினேஷனையும் முயற்சி செய்யலாம். அதாவது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகெண்ணெய் என ஐந்திலும் சம அளவு எடுத்துக் கலந்து பயன்படுத்தலாம். இவற்றில் ஒவ்வோர் எண்ணெய்க்கும் பிரத்யேக மருத்துவ குணங்கள் இருப்பதுதான் சிறப்பு.

எண்ணெய் வைத்துவிட்டுக் குளிக்க வேண்டுமா, தலைக்குக் குளித்த பிறகு எண்ணெய் வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்துடன் எண்ணெய் வைக்கும்போது செபேஷியஸ் சுரப்பியிலிருந்து சுரக்கும் எண்ணெய், கூந்தலில் உள்ள ஈரப்பதம் எல்லாம் சேர்ந்து ஒருவித தொற்றை ஏற்படுத்தும். இதன் அறிகுறி வெளியே தெரியாது. ஆனால் தலையைச் சொரியும்போது விரல்களில் அழுக்காக, பிசுபிசுப்பாக வருவதைப் பார்க்கலாம்.
எனவே கூடியவரையில் தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, பிறகு குளித்துவிடுவதுதான் சிறந்தது. எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காயோ, ஷாம்பூவோ உபயோகித்துக் குளிக்கலாம். இதனால் எண்ணெய் வைப்பதன் பலன்களும் கூந்தலுக்குக் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியமா?