Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு ஜூஸ், சூப் கொடுக்கலாமா? தினமும் பழங்களும் கீரையும் கொடுக்கலாமா? பழங்களில் எதையெல்லாம் கொடுக்கலாம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஒரு வயதுக் குழந்தைக்கும் சரிவிகித உணவு வழங்கப்பட வேண்டும். அதாவது வீட்டிலுள்ள மற்றவர்கள் சாப்பிடும் அதே உணவுகளை ஒரு வயதுக் குழந்தைக்கும் கொடுக்கலாம். காரம், மசாலா உள்ளிட்டவற்றை மட்டும் குழந்தையின் விருப்பத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தினமும் பழங்கள், காய்கறிகள் கொடுக்க வேண்டும். எல்லாவிதமான பழங்கள், காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தை சாப்பிட வசதியாக சின்னத்துண்டுகளாக நறுக்கி, விதைகள் நீக்கிக் கொடுத்துப் பழக்கலாம்.
குழந்தைகளுக்கு ஜூஸாக கொடுப்பதற்கு பதில் பழமாகக் கொடுப்பதே அதிக ஆரோக்கியமானது. கூடியவரையில் ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அப்படியே கொடுப்பதானாலும் அடிக்கடி கொடுத்துப் பழக்காமல் எப்போதாவது ஒன்றிரண்டு முறை கொடுக்கலாம். பழமாகச் சாப்பிடும்போது அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் சத்துகள், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது முழுமையாகக் கிடைப்பதில்லை.
ஜூஸ் தயாரிக்க பழங்களை தோல் நீக்கி, சதைப் பற்றை மட்டும் எடுப்பதால் தோல் பகுதியிலுள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகளை நாம் வீணாக்குகிறோம். தவிர ஜூஸாக தயாரிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்கிறோம். அது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல.

எனவே எல்லாப் பழங்களையும் குழந்தைக்குக் கொடுத்துப் பழக்குங்கள். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட பழம் பிடிக்காமல் இருந்தால் அதை வித்தியாசமான வடிவங்களில் வெட்டி, ஸ்மைலி போல அடுக்கிக் கொடுத்தால் குழந்தை விரும்பிச் சாப்பிடும்.
எல்லாவிதமான கீரைகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தினமும் கீரை கொடுக்கலாம். சைவ, அசைவ சூப்பும் கொடுக்கலாம். சூப்பில் காய்கறிக் கலவை, பருப்பு, முட்டை போன்றவற்றைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அதை அதிக ஊட்ச்சத்துள்ள உணவாக மாற்ற முடியும். க்ளியர் சூப் கொடுப்பதைவிட இப்படிக் கொடுப்பது ஆரோக்கியமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு ஜூஸ், சூப் கொடுக்கலாமா?