Doctor Vikatan: பூண்டு மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் பயன்படுத்தினால் இதய பாதிப்பு குறையும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யுமா என்றால் செய்யும். கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால் இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது.
நம் மூதாதையர்கள் மிக அழகான ஒரு வாசகத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதாவது `விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு' என்பதே அது. மூன்று நாள்கள் என்பது பழமொழிக்காகச் சொல்லப்பட்டது என்றாலும் எந்த மருந்தையும் யாரும் அவசியமின்றி எடுக்கக்கூடாது.
மருந்துகளின் எதிர்வினை பற்றியும், அதிக அளவு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அதிகம் பேசுகிறோம். மீன் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்தும், பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் இருப்பது உண்மைதான். ஆனாலும் வைட்டமின் சத்தும்கூட அளவு தாண்டும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தேவையே இல்லாமல் வைட்டமின் சத்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதால், அவருக்குப் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தேவையே இல்லாமல் மருந்துகளையும் சத்து மாத்திரைகளையும் எடுக்கும் பழக்கம், ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல நம் சமுதாயத்தில் பரவி வருகிறது. `நான் ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுக்கிறேன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எடுக்கிறேன்...' என்றெல்லாம் சொல்லிக்கொள்வதை பெருமையாக நினைக்கிறார்கள்.
துரித உணவுகள் சாப்பிடப் பழகும்போது முதலில் சில நாள்களுக்கு அவற்றின் சுவை பிரமாதமாக இருப்பது போல தெரியும். போகப்போக அவற்றின் பக்க விளைவுகள் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும்போதுதான் அந்த உணவுகளின் ஆபத்து தெரிய வரும். அப்படித்தான் மருந்துகளும்.
தேவையில்லாமல் எடுக்கப்படும் எந்த மருந்தும் ஆபத்தானதே. அது கல்லீரலையோ, சிறுநீரகங்களையோ பாதிக்கக்கூடும். பூண்டு நல்லது என்பதற்காக அதை தேவையின்றி அதிகம் எடுக்கக்கூடாது. ரசத்திலோ, வேறு சமையலிலோ சேர்த்துச் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது தவிர்த்து பச்சையாகவோ, அளவுக்கதிகமாகவோ அதைச் சாப்பிடுவது அறிவுபூர்வமானதல்ல.
ஒருவருடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், கொழுப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் அவர் ஏன் தேவையின்றி பூண்டையும் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்? ஒருவேளை அந்த நபருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இவையெல்லாம் அதை மேலும் குறையச் செய்யுமல்லவா?

எனவே அவசியமிருந்தால் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சத்து மாத்திரைகளே என்றாலும் தேவையின்றி எடுப்பதும் அளவுக்கு அதிகமாக எடுப்பதும் அறிவுறுத்தத்தக்கதே அல்ல. அவை நன்மை செய்வதற்கு பதில் கெடுதலே செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?