`கே.ஜி.எஃப் 2' என்ற மெகா பட்ஜெட் வெற்றிக்குப் பிறகு, மற்றுமொரு கன்னடப்படம் தேசியளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை பிரமாண்ட பட்ஜெட் இல்லை, காட்சிக்குக் காட்சி ஹீரோயிஸம் இல்லை. ஆனால், அந்த மிரட்டலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் `Kantara' (காந்தாரா - மாய வனம்) மூலம் மிரள வைத்திருக்கிறது கன்னட சினிமா. நிலத்திற்காக, அரசாங்கத்தாலும் ஆதிக்க சக்திகளாலும் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைதான் படத்தின் ஒன்லைன்.
அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கும் ராஜா அதைத்தேடி காடு, மலை என அலைகிறார். இறுதியாகப் பழங்குடியின மக்கள் வணங்கும் கடவுள் சிலையைக் கண்டவுடன் மன நிம்மதி அவருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிலைக்காக அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்குத் தனது பெரும்பகுதி நிலங்களை எழுதிக் கொடுத்துவிடுகிறார்.
ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் தங்களின் நிலத்தைத் திரும்பத் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார், ராஜாவின் வம்சாவளி வந்த ஒருவர். 'இத்தனை நாள் நான் கொடுத்த நிம்மதியை உன்னால் திரும்பத் தரமுடியுமா?' என 'பூத கோல' நடனமாடும் நாயகன் ரிஷப் ஷெட்டியின் அப்பா (அவரும் ரிஷப் ஷெட்டிதான்) மூலம் கேட்கிறது அந்தச் சிறுதெய்வம். பின்பு ராஜாவின் உறவினர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்துவிடுகிறது. வழக்குத் தொடுத்த ராஜாவின் வம்சாவளி வாரிசு சாபமிட்டதுபோலவே ரத்தம் கக்கி இறந்துவிடுகிறார். நிலம் மக்களுக்கே சொந்தமாகிறது.

அதற்குப்பிறகு, 20 ஆண்டுகள் கழித்து 1990-ல் நிலம் தொடர்பான பிரச்னை மீண்டும் தொடங்குகிறது. இப்போது அரசு மூலமாக! காடுகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அந்த இடத்தை கிராம மக்கள் பிடித்துக்கொண்டதாகக் கூறுகிறது வனத்துறை. இந்த முறை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறார் ராஜா வம்சாவளி வந்த ஜமீன்தார். வஞ்சகம், சூழ்ச்சி, திருப்பங்கள், அமானுஷ்யம் இதையெல்லாம் கடந்து எப்படி பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காக்கிறான் நாயகன் சிவா (ரிஷப் ஷெட்டி) என்பதுதான் கதை.
'காந்தாரா' படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இயக்கத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கலக்கியிருக்கிறார். கம்பளா ரேஸில் என்ட்ரி கொடுக்கும்போதே, பார்வையாளர்களின் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்துவிடுகிறார். கோபம் வந்துவிட்டால் கட்டுக்கடங்காத காளையாக அந்த முரட்டுத்தனம், அம்மா என்று வந்துவிட்டால் அடிவாங்கிக்கொண்டு ஓடி ஒளியும் சிறுபிள்ளைத்தனம், காதல் என்று வந்துவிட்டால் ஐஸ்கிரீமாய் உருகிவிடும் வாலிபம் என அனைத்தையும் திரையில் எந்தக் குறைவும் இல்லாமல் கடத்துகின்றன ரிஷப் ஷெட்டியின் உடல்மொழியும் முக பாவனைகளும். அதுவும், க்ளைமாக்ஸில் ஆக்ரோஷ நடிப்பால் அவர் ஆடியிருப்பது இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ருத்ரதாண்டவம்.
வன அதிகாரியாக கிஷோர், மிடுக்கான உடல்மொழியுடன் திரையை ஆக்கிரமிக்கிறார். அவர் நல்லவரா, கெட்டவரா என யூகிக்கமுடியாத அளவுக்குத் திரைக்கதையின் போக்கு இருப்பது பெரும்பலம்.

வன ஊழியராக பணிக்குச் சேரும் நாயகி சப்தமி கவுடா, அரசின் பக்கமும் நிற்கமுடியாமல் தன் மக்களின் பக்கமும் நிற்கமுடியாமல் தவிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் தேர்ந்த நடிகையாக மிளிர்கிறார். பழங்குடியின மக்களின் பழக்க வழக்கம், தொழில், ஆடல்-பாடல், கலாசாரம், சண்டை சச்சரவு என நகர்ந்துகொண்டிருக்கும் திரைக்கதையிலிருந்து விலகிச்சென்றாலும், ரசிக்கும்படி இருக்கின்றன நாயகன் - நாயகியின் காதல் காட்சிகள். இன்னொரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நில ஜமீன்தாராக அச்யுத் குமார் நடித்திருக்கிறார். அசட்டுச் சிரிப்புடன் மிக இயல்பாக அந்தக் கதாபாத்திரத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
ஆங்காங்கே வெடித்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள் படத்தின் இன்னொரு பலம். குறிப்பாக, நாயகன் அடிக்கடி கனவு காணும் செம சீரியஸ் காட்சிகளிலும் இறுதியில் சிரிப்புப் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். நாயகனின் நண்பர்கள் ஒவ்வொருவரையும் போலீஸ் சுற்றிவளைத்துக் கைது செய்யும் காட்சி, சிறையிலிருந்து தப்பிக்க ஸ்கெட்ச் போடும் காட்சி என 'பூத கோல' ஆட்டத்திற்கு நடுவே நகைச்சுவை ஆட்டமும் ஆடியிருக்கிறது திரைக்கதை. "என் வீட்டுக்கு நீங்க வந்தீங்க, உங்க வீட்டுக்கு நான் வரக்கூடாதா?" எனச் சாதிய வன்மத்தைக் கேள்வி கேட்கும் காட்சி தொடங்கிப் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன படத்தின் வசனங்கள்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று வழக்கமான தாத்தா, பாட்டி கதை போலப் படம் ஆரம்பித்தாலும் தீண்டாமை, ஆதிக்கம், குரோதம், வஞ்சகம், சுரண்டல் என வேகமெடுத்து தாண்டவம் ஆடி க்ளைமாக்ஸில் நடுநடுங்க வைத்துவிடுகிறது திரைக்கதை.

ஆண்டாண்டுக் காலமாக இதே நிலத்தில் உழுது பயிரிட்டு, வேட்டையாடி வாழ்ந்து வந்த எங்களைத் திடீரென்று ஆக்கிரமிப்பு எனக் கூறி வேலி போட்டுத் தடுப்பது, வேட்டையாடத் தடை விதிப்பது, போன்றவற்றை எல்லாம் செய்ய நீங்கள் யார் என்பதுதான் ஆதிக்குடிகளின் கேள்வி. அந்தக் கேள்வியைத்தான் நாயகனும் அரசாங்கத்தைப் பார்த்து எழுப்புகிறான். இப்படிப்பட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்குப் பாராட்டுகள். குறிப்பாக, க்ளைமாக்ஸில் 'பூத கோலம்' ஆடிக்கொண்டே கைகளை இணைத்து அவர் சொல்லும் அந்தச் செய்தி இப்படியான சர்ச்சைகள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருத்தமான ஒன்று!
படம் முழுக்க உரிமைக்குரலை எழுப்பும் 'ஓவ்வ்வ்' என்ற உறுமல், நாயகனை மட்டுமல்ல நம்மையும் உசுப்பி மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது. தியேட்டரை விட்டுவந்தாலும், அந்தக் குரல் மனதிலிருந்து விலகாமல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
பிளிறிக்கொண்டுவரும் பின்னணி இசையை க்ளைமாக்ஸ் மட்டுமல்ல, படம் நெடுகவே கொடுத்து மிரள வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத். எந்த இடத்திலும் அந்நியப்படாமல் காட்சியோடு ஒன்றவைத்துவிடுகிறது இசை. பழங்குடி மக்களின் கலாசாரம், பண்பாடு எல்லாவற்றிலும் பின்னிப் பிணைந்து அவர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் உயிரோட்டமாக வெளிப்படுத்திவிடுகிறது அவரின் இசை கோர்ப்பு.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப் காட்டியிருக்கும் அந்த உலகம், எதார்த்தத்தைத் தாண்டாத ஒருவித அமானுஷ்யத்தை நமக்குக் கடத்துகிறது. சண்டைக் காட்சிகளிலும், ஆரம்ப கம்பளா ரேஸ் காட்சியிலும் சிறப்பானதொரு பணியைச் செய்திருக்கிறார். ஒரு இடத்தில்கூட செட் போல் தெரியாமல், பழங்குடியின வாழ்க்கையைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு.
அதே நேரத்தில், வன அதிகாரிகளிடம் நாயகன் மோதும் காட்சிகள் ஆரம்பத்தில் பில்டப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்படைய வைத்துவிடுகின்றன. யார் மனம் மாறப்போகிறார், யார் வில்லனாகப்போகிறார் என எளிதில் யூகித்துவிடவும் முடிவதால் அடுத்து என்ன என்கிற சுவாரஸ்யம் பெரிதாக இல்லை. காட்சிகள் திரையில் விரியும் விதம்தான் இந்தப் படத்தின் மையக்கதையை ஓரளவுக்கேனும் தனித்துவப்படுத்தி காட்டுகிறது. க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் அந்தப் பட்டறை சண்டைக்காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருந்தாலும், அது அநாவசிய ஹீரோ பில்டப்பே!
இப்படி, சில காட்சிகள் முரணாக நின்றாலும் படத்தின் நோக்கம், திரைக்கதையின் போக்கு, நாயகனின் வெறித்தனமான நடிப்பு, காட்டுக்குள் அமர்ந்து பார்ப்பதுபோன்ற ஒளிப்பதிவு, காட்சிகளை உயிர்ப்பிக்கும் பின்னணி இசை என அற்புதமானதொரு திரை அனுபவத்தைக் கொடுத்ததற்காக இந்த `காந்தாரா'வைக் கொண்டாடித் தீர்க்கலாம்.
மேலும் படிக்க Kantara: ஓங்கி ஒலிக்கும் உரிமைக்குரல் - சிலிர்ப்பூட்டும் திரை அனுபவமும் மிரளவைக்கும் க்ளைமாக்ஸும்!