கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பாஜக, திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நடுவே, கோவை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை மறுநாள் (31ம்தேதி) பந்த்க்கு அழைப்பு விடுத்தனர். இதுதொடர்பான அறிவிப்பை அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த பந்த்தை தடை செய்யக் கோரி வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “கோவை முழு அடைப்புக்கு பாஜக மாநில தலைவர் அழைப்பு விடுக்கப்படவில்லை. தேசிய செயற்குழு உறுப்பினர் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை.” என்று அண்ணாமலை தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்,

பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். ஏற்கெனவே, ‘பந்த் என்ற பெயரில் வியாபாரிகள் மற்றும் மக்களை துன்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த வானதி சீனிவாசன், ‘செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். திட்டமிட்டபடி பந்த் நடைபெறும்.’ என்று கூறியிருந்தார். பந்த் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தனித்தனி டிராக்கில் பயணிப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜகவினர்,

“இத்தனை நாள்களாக பாஜக-வில் நிலவி வந்த உள்கட்சி பூசல் தற்போது பூதாகரமாகியுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கொடுத்த பேட்டி, ஆளும் திமுகவை கதிகலங்க வைத்தது. அந்த கடுப்பில்தான் செந்தில் பாலாஜியும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தாலும், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்களுக்கு கோவை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதன்படி கார் வெடிப்பு பிரச்னைக்காக பந்த் நடத்தலாம் என்பதை பாஜக கோவை மாவட்டம், வானதி, சி.பி.ஆர் இணைந்து முடிவு செய்துவிட்டனர்.

அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான், அண்ணாமலையிடம் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தகவலாக மட்டும் கூறியுள்ளனர். இதை அண்ணாமலை விரும்பவில்லை. திங்கள்கிழமை நாளில் பந்த் நடத்தினால் வெற்றி பெறுவது கடினம்.
மேலும் இதுபோன்ற பந்த் போராட்டத்துக்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவை பெறுவது அவசியம். அப்படி எதுவுமே செய்யாதது கட்சிக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும். அண்ணாமலை மாநிலத் தலைவராக பதவியேற்றதில் இருந்தே, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகளுக்கும் அவருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது அது உச்சக்கட்டத்தில் உள்ளது.

கோவை பந்த் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில நாள்களாகவே கடும் கோபத்தில் இருந்தார். அந்த கோபத்தில் தான் கடலூரில் பத்திரிகையாளர்களிடம் அப்படி பேசினார். அதன் தொடர்ச்சியாகத்தான் தன்னுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் கூறிவிட்டார். தலைவரே பின்வாங்கியிருப்பதால் பந்த் முடிவை திரும்பப் பெற ஆலோசித்து வருகின்றனர்.” என்றனர்.
மேலும் படிக்க அண்ணாமலை Vs சீனியர்கள் - கோவை பந்த் விவகாரம் பாஜக மோதல் பின்னணி