`தம்பி இருக்குமிடம் தமிழீழம்!’ - ஈழத்தில் 25 நாள்; அனுபவம் பகிரும் நெடுமாறன்

0

ழத்தில் இருபத்தைந்து நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அந்த அனுபவங்களைக் கூறுகிறார்.
 
கொழும்பிலிருந்து யாழ்தேவி ரயில்மூலம் நான் புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் “இது வெங்கைகள் விளையும் நாடு” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் எனது பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உணவருந்திவிட்டு பிறகு பயணமானேன். மூன்று இடங்களில் கார்களும், காவலர்களும் மாற்றப்பட்டனர். அந்தி மயங்கும் வேளையில் ஒரு கானகத்தின் வெளிப்புறத்தை அடைந்தோம். அங்கிருந்து சில மைல்கள் நடந்து சென்று புலிகளின் முகாம் ஒன்றினை அடைந்தோம். அங்கு இரவு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு ‘தம்பி’ பிரபாகரன் இருக்கும் முகாமுக்குப் போகலாம் என அன்பு என்ற விடுதலைப் புலி கூறினார். இரவில் அந்த முகாமிலிருந்த புலிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

Velupillai Prabhakaran

பிரபாகரன், மாத்தையா - நெடுமாறன்

கானகத்தில் தங்கியிருந்த இரண்டாண்டு காலம் பிரபாகரனின் தலைமையில் இந்தியப் படையை எதிர்த்து விடுதலைப் புலிகள் போரிட்டது திகைப்பூட்டும் வீர வரலாறாகும். எவ்வித வசதியுமில்லாத காட்டில் உணவோ, தண்ணீரோகூடக் கிடைக்காமல் பல நாட்கள் பட்டினி கிடந்த நிலைமை புலிகளுக்கு உண்டு. ஆனாலும்கூட அவர்கள் கொஞ்சமும் மனம் தளரவில்லை. அச்சம் கொள்ளாமல் துணிந்து போராடினார்கள் என்றால் அதற்குப் பிரபாகரனின் தலைமையே காரணமாகும். இந்திய ராணுவத்தின் பெரும் பலத்தை எதிர்நோக்கும் போர்ப் பயிற்சியை மட்டுமல்ல, துயரங்களையும் துன்பங்களையும் தாங்கும் மனவலிமையையும் பிரபாகரன் தனது தோழர்களுக்கு ஊட்டினார்.
 
ஒரு முறை கிடைத்த மாவைக்கொண்டு தோழர்கள் கஞ்சி காய்ச்சினார்கள். மரக் குச்சியைக் கொண்டு மாவைக் கிண்டும் போது சட்டி உடைந்து அவ்வளவு கஞ்சியும் அடுப்பில் வழிந்து சாம்பலோடு கலந்து மண்ணில் பரவியது. பலநாட்கள் பட்டினியுடன் காத்துக்கிடந்த தோழர்களின் பசித்த விழிகள் இந்தக் காட்சியைக் கண்டதும் கலங்கின. ஆனால், பிரபாகரன் கொஞ்சமும் கலங்காமல் முன்வந்து அடுப்பின் முன்னால் மண்டியிட்டு மண்ணும் கலந்த கஞ்சியை கையால் வழித்து உண்டு காட்டினார். மற்றவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்!

காட்டில் மழைக்காலத்தில் பெரும் கஷ்டம். மழைக்கான ஆடைகள் இன்றி ஒதுங்குவதற்கு இடமின்றி ஈரமண்ணிலேயே படுத்து உறங்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு அவர்கள் ஆளானது உண்டு. காட்டுக்குள் இருக்கும் புலிகள் மீது விமானங்கள் மூலம் குண்டுமழையினை இந்தியப் படை பொழிந்தது. பீரங்கிகள் மூலமும் இடைவிடாமல் குண்டுகளை பீச்சியது. பிரபாகரன் இருந்த காட்டில் மட்டும் சுமார் ஐயாயிரம் குண்டுகள் விழுந்திருக்கும். 250 கிலோ கொண்ட இந்தக் குண்டுகள் பெரும் நாசத்தைக் காட்டில் ஏற்படுத்தி இருந்தன. மரங்கள் முறிந்து தரையில் பெரும் பள்ளங்களையும் இந்தக் குண்டுகள் ஏற்படுத்தியிருந்தன. அத்தகைய இடங்கள் சிலவற்றை நான் பார்த்தேன்.

பிரபாகரனின் மெய்க்காவலர்கள் சொர்ணம், குட்டியுடன்...!

'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பார்கள். அதைப் போல 'தம்பி இருக்கும் இடம் தமிழீழம்' என்பதை அந்தக் காட்டில் நான் கண்டேன். சூரிய ஒளி புகுவதற்குத் தயங்கும் அந்த அடர்ந்த காட்டில் மற்ற தோழர்களுடன் பிரபாகரனைச் சந்திக்க நான் நடந்து சென்றபோது வழிநெடுக விடுதலைப்புலிகள் ஆங்காங்கே பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தேன். மரம் வெட்டுதல், பொருட்களைச் சுமந்து செல்லுதல் போன்ற பணிகளையெல்லாம் ஆண்களைவிட பெண் புலிகள் மேற்கொண்டிருப்பதைப் பார்த்து திகைப்படைந்தேன். 

பல மைல் தூரம் நடந்து சென்று காலை சுமார் பதினோரு மணியளவில் தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். கூடாரத்துக்குள் இருந்த தம்பி வெளியில் வந்து என்னைக் கட்டித் தழுவியபோது உணர்ச்சிப்பெருக்கால் எனது கண்கள் பனித்தன. 

1987-ம் ஆண்டு திலீபனின் உண்ணாவிரதத்தின்போது தம்பியை யாழ்ப்பாணத்தில் சந்தித்த நான் அதற்குப் பின்னர் அவரைச் சந்திக்கவில்லை. இரண்டரை ஆண்டு காலத்துக்குப் பின்னர் அவரைச் சந்திக்கிறேன். இந்த இடைக்காலத்தில் தான் அவரைப் பற்றி எவ்வளவு அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன! அவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி எவ்வளவு வேகமாகப் பரப்பப்பட்டது! இன்னும் அதைப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்!

தம்பிக்காக நான் கொண்டு சென்றிருந்த விதையில்லாத திராட்சைப் பழங்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் கொடுத்தபோது மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டு ஒன்றிரண்டு பழங்களை எடுத்து வாயில் போட்டார். மறுகணம் பக்கத்திலிருந்த இளம்புலி ஒருவரை அழைத்து அவர் கையில் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கும் படி கூறிவிட்டார்.

போர்க்கால சூழலில் எப்போதும் இருந்துவரும் பிரபாகரனின் இதயம் கடினமாகிவிடவில்லை. மாறாக அந்த இதயத்தில் நகைச்சுவை உணர்வு ததும்புகிறது. தன்னுடைய சக தளபதிகளைக் கிண்டல் செய்கிறார். சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார். அவரும் சிரித்து மகிழ்கிறார். 

அவருடைய அலுவலகக் கூடாரத்தில் உட்கார்ந்து நான் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். அவர் வேறொரு வேலையாக வெளியில் சென்று திரும்பியவர் உரத்த குரலில் “மாதரசி மதிவதனி... சாப்பாடு தயாரா?” என்று கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அடுத்த கூடாரத்திலிருந்த அவரது துணைவியார் மதிவதனி அவரைப் பின்தொடர்ந்து நான் இருந்த கூடாரத்துக்கு வந்தார். 'எப்போதும் மாதரசி என்று சொல்லி என்னைக் கேலி செய்கிறார்” என்று என்னிடம் புகார் செய்தார். 

மட்டக்களப்பு கடற்கரையில்...!

பிரபாகரன் சிரித்துக் கொண்டே, “அண்ணா, நான் கேலி செய்யவில்லை. நீங்கள் எழுதியிருப்பதைத்தான் நான் சொல்கிறேன்” என்றார். பிரபாகரன் பற்றி நான் எழுதிய நூலில் ‘மாதரசி மதிவதனி’ என்ற தலைப்பில் அவருடைய துணைவியார் பற்றி எழுதியிருந்தேன். அதையே அவர் தன்னுடைய மனைவியைக் கிண்டல் செய்யப்பயன்படுத்திய போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

ஒரு நாள் அவரைச் சந்திக்க மாத்தையா வந்தார். அப்போது பிரபாகரனுடன் நானும் இருந்தேன். திடீரென்று பிரபாகரன் எழுந்து நின்று “மக்கள் முன்னணி தலைவரே வருக வருக” என்று வரவேற்றார். மாத்தையாவும் இதற்குச்சளைத்தவரல்ல.

“நல்லவேளை மேளதாளங்கள் வைத்து வரவேற்கவில்லை” என்றார். அனைவரும் சிரித்தோம்.
 
அதுபோல கவிஞர் காசி ஆனந்தன் எனது அருகில் உட்கார்ந்திருந்தார். அவரின் வயதும் என் வயதும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். அவருக்குத் தலை முடியோ மீசையோ கொஞ்சமும் நரைக்காது இருப்பது கண்டு நான் வியந்தேன். அவரிடம், “குன்றாத இளமையின் மாறாத ரகசியம் என்ன?” என்று கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார். 

அருகிலிருந்த பிரபாகரன் “அண்ணா, நான் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு “காசி அண்ணாவின் குன்றாத இளமையின் மாறாத ரகசியம் 'டை' போடுதல்'” என்று சொன்னபோது சிரிப்பலைகளால் அந்தக் கூடாரமே அதிர்ந்தது. 

புலிகள் இயக்கத்திலுள்ள தோழர்களிடையே எத்தகைய சச்சரவுக்கும் இடமில்லை. ஆனாலும்கூட சில நேரங்களில் யாரேனும் இரண்டு பேருக்கு இடையே சச்சரவுகள் வந்துவிடுமேயானால் அவர்களுக்குப் பிரபாகரன் விதிக்கும் தண்டனை மிக வேடிக்கையானது. ஒருவரின் வலது கரத்தையும் இன்னொருவரின் இடது கரத்தையும் இணைத்து விலங்கு பூட்டி ஒரு வாரம் அப்படியே இருக்க வேண்டுமென்று அவர் உத்தரவு பிறப்பிக்கிறார். தண்டனைக்கு ஆளான அந்த இருவரும் உறங்குவதிலிருந்து உண்பதுவரை என்ன செய்தாலும் ஒன்றுசேர்ந்தே செய்ய வேண்டும். ஒருவர் உதவியில்லாமல் மற்றொருவர் எதுவும் செய்ய இயலாது.

பிரபாகரன் - மதிவதனி

அப்படி ‘தண்டனை’ விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் தற்செயலாக நாங்கள் அமர்ந்திருந்த மரத்தடி பக்கமாக வந்தனர். அவர்களைப் பிரபாகரன் அருகே அழைத்தார். “இந்த இணைபிரியாத நண்பர்களைப் பார்த்தீர்களா? எவ்வளவு ஒற்றுமை. சாப்பிட்டாலும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். குளித்தாலும் ஒன்றாகக் குளிப்பார்கள். எங்கு போனாலும் ஒன்றாகவே போவார்கள். இப்படி ஒற்றுமையானவர்கள் உங்கள் நாட்டில் உண்டா?” என்று கேட்டுக் கலகலவென்று சிரித்தபோது, அந்த இருவரும் அவருடன் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள். அவர்கள் சென்ற பிறகு பிரபாகரன் குறும்பாகக் குரலைத் தாழ்த்தி என்னிடம், “இனி ஒருகாலத்துக்கும் இவர்கள் யாருடனும் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள்” என்றார். 

புலிகளின் உணவு, உடை, குளிப்பு, பல்விளக்குதல், முடிவெட்டுதல், பொழுதுபோக்குதல் போன்ற சகல விஷயங்களையும் பிரபாகரனே மேற்பார்வையிடுகிறார். காட்டு வாழ்க்கையில் சுத்தமும், சுகாதாரமுமே முக்கியமானது என்று அவர் போதிக்கிறார். எந்த இடத்தையும் யாரும் அசுத்தம் செய்வதில்லை. குப்பைக் காகிதத்தைக் கூட வீசி எறிவதில்லை. எச்சில்கூடத் துப்புவதில்லை.

இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பொது மக்களும், இயக்கத்தில் உள்ளவர்களும் தங்களுக்குள்ள குறைகளையோ. நாட்டில் நிலவும் குறைகளையோ பிரபாகரனுக்குத் தெரிவிக்க விரும்பினால் அதற்கும் வழி செய்திருக்கிறார் பிரபாகரன். 'விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியின் கிளைகள்’ வடக்கு - கிழக்கு மாநிலத்தில் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த அலுவலகங்களில் ‘தலைவருக்கு...’ என்று எழுதப்பட்டுள்ள அஞ்சல்பெட்டிகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. தங்கள் குறைகளைப் பிரபாகரனுக்குத் தெரிவிக்க விரும்புபவர்கள் கடிதம் எழுதி இந்த அஞ்சல் பெட்டியில் போடலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தளபதிகளிடம் இந்த அஞ்சல்பெட்டிகளின் சாவிகள் இருக்கும். வாரத்துக்கு ஒரு முறை இப்பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலுள்ள கடிதங்கள் எடுக்கப்பட்டு பிரபாகரனுக்கு அனுப்பப்படுகின்றன. பிரபாகரனின் அலுவலகத்தில் இந்தக் கடிதங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு அவர் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கூடுமானவரை எல்லாக் கடிதங்களையும் அவரே பார்க்கிறார். சுட்டிக்காட்டப்படும் குறைகள் விடுதலைப்புலிகளைப் பற்றியதாக இருந்தாலும் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கிறார். 

போர்க்களத்திலும் சில நெறிமுறைகளைக் கையாளும்படி புலிகளுக்குப் பிரபாகரன் கண்டிப்பான கட்டளையிட்டிருக்கிறார். களத்தில் சுட்டு வீழ்த்தப்படும் எதிரிகளின் ஆயுதங்கள், பாட்ஜுகள் ஆகியவற்றை மட்டுமே கைப்பற்றப்பட வேண்டுமே தவிர அவர்களின் கைக்கடிகாரம், மணிபர்ஸ் மற்றும் சொந்த உடைமைகளை யாரும் தொடக்கூடாது. இதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. 

ஒரு நாள் ஏராளமான புலிகள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொழும்பிலிருந்து ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகள் காட்டப்பட்டன. நானும் அவர்களுடன் உட்கார்ந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத் திரைப்படம் ஒன்று காட்டப்படப்போவதாக டி.வி-யில் அறிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த புலிகள் அனைவரும் எழுந்து வெளியேறிச் செல்லத் தொடங்கினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் நீங்கள் படம் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன். புலிகளில் ஒருவர் “இதுபோன்ற படங்களை நாங்கள் பார்க்கக்கூடாது” என்று சொல்லி விட்டுச் சென்றார். அவர்கள் பார்க்கக் கூடாத படத்தை நான் பார்ப்பது சரியல்ல என்ற மனவுறுத்தல் எனக்கு எழுந்தது. தொலைக்காட்சியை உடனே அணைத்தேன்.
 
காட்டில் புலிகள் குடிபுகுந்தபோது பல தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி நேர்ந்தது. அவற்றில் முக்கியமானது ஈக்களின் தொல்லை. பிரபாகரனுக்கு ஈ என்றாலே அருவருப்பு. ஆனால் காட்டில் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. ஒரு நாள் பிரபாகரன் தனது தோழர்களை அழைத்து ஈக்களையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்று கூறினார். அருகிலிருந்த ஒருவர் “அது எப்படி முடியும்?” என்று கேட்டார். “பத்தே நாட்களில் ஈக்களை ஒழித்துக் காட்டுகிறேன்” என்று பிரபாகரன் கூறிவிட்டு தன்னுடன் இருந்த விடுதலைப் புலிகளுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்: “ஒவ்வொரு விடுதலைப்புலியும் ஒருநாளைக்கு  இருநூறு ஈக்கள் பிடிக்கவேண்டும்.” 

பத்தே நாட்களில் ஈக்கள் ஒழிக்கப்பட்டன.

புலிகள் எவ்வளவோ விஷயங்களில் கட்டுப்பாடு நிறைந்தவர்கள். சிகரெட் புகைப்பதில்லை. பொடி போடுவதில்லை. வெற்றிலைப் பாக்கு கிடையாது. மது அருந்துவதில்லை. 

லண்டனிலிருந்து பிரபாகரனுக்கென்று மிக நவீனமான கைக்கடிகாரம் ஒன்றினையும், சிறிய வாக்மேன் (ஸ்டீரியோ) ஒன்றினையும் கிட்டு அனுப்பி வைத்திருந்தார். அவற்றை என்னிடம் பிரபாகரன் காட்டினார்.

 ''கிட்டு அன்போடு அனுப்பி வைத்ததை கையில் கட்டிக் கொள்ளாமல் வைத்திருக்கிறீர்களே?” என்று நான் கேட்டபோது, பிரபாகரன் சிரித்துக் கொண்டே கூறினார். “என்ன செய்வது? என் மனைவி எனக்கு ஏற்கெனவே ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசளித்திருக்கிறாள். ‘எந்த நேரமும் இது உங்கள் கையில் இருக்க வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறாள். அதை மீற என்னால் இயலாதே!” என்று சொல்லிவிட்டு சிரித்தார். அருகேயிருந்த வன்னிப்பகுதி தளபதி பால்ராஜை அழைத்து அவருக்கு அந்தக் கடிகாரத்தைப் பரிசளித்தார். திரிகோணமலைத் தளபதி பதுமனை அழைத்து அவருக்கு வாக்மேனைப் பரிசாகக் கொடுத்தார்.

பிரபாகரனின் துணைவி மதிவதனியை மட்டுமன்றி மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரைக் காட்டுக்குள் இருக்கும் முகாமுக்குள் சந்தித்தேன். குழந்தைகள் இருவரும் துடிதுடிப்புடன் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த அவர்கள் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கூடம் செல்லவோ, எல்லோருடனும் சேர்ந்து விளையாடவோ வாய்ப்பு இல்லை. விடுதலைப்புலிகள்தான் அவர்களின் விளையாட்டுத் தோழர்கள். பிரபாகரனைக் காண வரும் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் வேடிக்கையாகப் பொழுது போக்குகிறார்கள்.

ஒரு நாள் மரத்தடியில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் இரண்டும் புள்ளிமான்களாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது பிரபாகரன் பின்வருமாறு கூறினார்: “அண்ணா! சிரித்து விளையாடும் இந்தப் பிள்ளைகள் நாளை குண்டு வீச்சில் பிணமாக மாறலாம். கனவுபோல அவர்களைப் பற்றிய நினைவு கலையலாம். எனவேதான் அவர்கள்மீது அதிக பாசம் வைப்பதில்லை. என்ன நேர்ந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம்” என்று கூறியபோது என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

- நெடுமாறன்

(01.04.1990 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


மேலும் படிக்க `தம்பி இருக்குமிடம் தமிழீழம்!’ - ஈழத்தில் 25 நாள்; அனுபவம் பகிரும் நெடுமாறன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top