கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் கார் ஒன்று வெடித்தது. அந்த காரை ஓட்டி வந்த ஐமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்துவந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் சிக்கின. அடுத்து, உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளைக் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளும் சிக்கின.

இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சென்னை என்.ஐ.ஏ வழக்கு பதிவுசெய்திருக்கிறது. என்.ஐ.ஏ பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 23.10.2022-ம் தேதி உக்கடம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் டிஎன் 01 எஃப் 6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி கார் அதிகாலை 4 மணியளவில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இந்தச் சம்பவத்தில் கோயில் பெயர் பலகை அந்தப் பகுதியிலிருந்த கடை ஆகியவை சேதமடைந்திருக்கின்றன.
விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஐமேஷா முபின் என்பது தெரியவந்தது. விசாரணையிலும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் பூசாரி சுந்தரேசன் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்றும், வெடிபொருள்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் உக்கடம் போலீஸார் பதிவு செய்திருந்தார்கள். அதையடுத்து மத்திய அரசின் உத்தரவின்படி சென்னை என்.ஐ.ஏ எஸ்.பி ஸ்ரீஜித் இந்த வழக்கைப் பதிவுசெய்திருப்பதாக குறிப்பிடப்பட்டது.

எஃப்.ஐ.ஆர் சென்னை பூந்தமல்லியிலுள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க கார் வெடிப்பு விவகாரம்: கோவை, சென்னை உட்பட 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!