பிக் பாஸ் 6, நாள் 52: இரண்டாவது முறையாகக் கோபப்பட்ட கதிரவன்; புரொமோ கன்டென்ட் தரும் அசிமின் அழுகை!

0
இந்த சீசனில் இதுவரை நடந்த எந்தவொரு வார டாஸ்க்கிலும் சுவையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை. மாறாகச் சண்டையும் கத்தலும் மட்டுமே பார்க்கக் கிடைத்தது. அந்த வகையில் ‘செம போர்’ என்கிற பெயரை இந்த சீசன் பெறக்கூடும். கமலின் ஆருடம் பலிக்கக்கூடும்.

அசிமை மறந்து போய் கூட பாராட்ட முடியவில்லை. அடுத்த நிமிடமே தன் சுயரூபத்தைக் காட்டுகிறார். கடந்த வாரத்தில் வாலைச் சற்று சுருட்டி வைத்திருந்தவர், இந்த வாரத்தில் மீண்டும் மிருகத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அவரின் அநாகரிகமான பேச்சை விக்ரமனும் அமுதவாணனும் ஆட்சேபிக்கும் போது ‘அதையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன்’ என்று அசிம் எகத்தாளமாகச் சொல்வதிலிருந்து ஒன்று தெரிகிறது. அசிமும் தனலஷ்மியும் ஆதாரமாக ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தாம் கத்தி சண்டை போடுவதை விசாரணை நாளில் ‘லுலுவாய்க்கு’ கண்டிப்பார்களே ஒழிய, தாங்கள்தான் ‘இந்த சீசனின் கன்டென்ட் சப்ளையர்கள். எனவே வெளியில் அனுப்ப மாட்டார்கள்’ என்று திட்டமிட்டிருக்கிறார்கள் போல.

பிக் பாஸ் 6, நாள் 52

நாள் 52-ல் நடந்தது என்ன?

‘சுமார் ஆக்ஷன் ஆசாமி’ என்று நாம் நினைத்திருந்த ராம், எப்படியோ வெற்றி பெற்று பூவை எடுத்து வந்தார். அதை ‘போக பிஸ்ஸா’ என்னும் ஜேஜாவின் பசிக்கு விருந்தாகப் படைத்தவுடன் அவரும் கற்களை உருவாக்குவதற்கான ரத்தினங்களையும் மண்ணையும் அள்ளி வழங்கினார். (சாமி கூட ‘கவனிச்சாதான்’ ஆசி தரும் போல. பழங்குடி காலத்துல இருந்தே இப்படித்தான் இருந்திருக்கு!).

அடுத்ததாக வீட்டுக்குள் சென்ற விக்ரமன், பூவைப் பறிக்கிறேன் என்று இலையைப் பறித்து விட்டு ஜாலியாக டார்ச்சர் நாற்காலியை நோக்கி நகர்ந்தார். “க்வீன்சி இளவரசி தேர்வில் ஏன் நீங்கக் கையைத் தூக்கலை... ‘நீதான் இளவரசியா இருந்திருக்கணும்'ன்னு அவ கிட்ட சொல்லி ஏன் உசுப்பி விட்டீங்க..?” என்று பழைய கதையை உதறி விக்ரமனைக் கோபப்பட வைக்க முயன்றார் அமுதவாணன்.

தனலஷ்மியின் ‘ஓவர் ஆக்டிங்’ டார்ச்சர்

‘ஒரு ரூபா கொடுத்தா நூறு ரூபாய்க்கு நடிப்பார்’ என்று சில நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கைக் கிண்டல் செய்வார்கள். இந்தச் சமயத்தில் தனலஷ்மி செய்த முயற்சியும் அப்படித்தான் இருந்தது. “அப்படின்னா என் பின்னாடி புறணி பேசியிருக்கீங்களா... ஏன் க்வீன்சியை ஏத்தி விட்டீங்க. பூவை கூட நீங்க எடுத்துட்டு போங்க... இந்த கேமை நிறுத்துங்க” என்றெல்லாம் அவர் விக்ரமனிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது, நில நடுக்கம் வந்தது போல் தொலைக்காட்சிப் பெட்டியே ஆடி அடங்கியது. ஆனால் தனலஷ்மியின் ஓவர் ஆக்டிங் செல்லுபடியாகவில்லை. சிரித்து சமாளித்தே வெற்றி பெற்றார் விக்ரமன்.

பூ ஒன்றைக் கொடுத்து விக்ரமனை ஏலியன்ஸ் வெளியே அனுப்பும் போது ‘டபக்’கென்று யாருக்கும் தெரியாமல் இன்னொரு பூவையும் அவர் லவட்டி விட்டார். (ரொம்ப அப்பாவி ஏலியன்ஸா இருக்காங்க!). வெளியில் சென்ற விக்ரமன், இரண்டு பூக்களையும் உயரத் தூக்கி, ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மான் மாதிரி உற்சாகமாகக் கத்தினார். “இந்தத் திருட்டை போக பிஸ்ஸா ஏற்றுக் கொள்ளாது பாருங்க...” என்று ஏமாற்றத்தில் ஏலியன்ஸ் கத்த, பழங்குடிகளின் தெய்வத்திற்கு ரொம்பப் பசி போலிருக்கிறது. ‘திருட்டுப்பூவாக இருந்தாலும் பரவாயில்லை... கொடுங்கடா” என்று அதையும் வாங்கி ஏப்பம் விட்டது.

பிக் பாஸ் 6, நாள் 52

கலவரத்தில் இரண்டு பட்ட வீடு – பீதியடைந்த போக பிஸ்ஸா

அடுத்ததாகப் பழங்குடிகளின் தரப்பிலிருந்து மைனா திமிறிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். இந்தச் சமயத்தில் ரச்சிதா வெளியே இருந்ததால் கோபம் கொண்ட அசிம் தானும் உள்ளே புகுந்து பூக்களைத் திருடினார். இதனால் அமுதவாணனுக்கும் அசிமிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது இன்னமும் உக்கிரமாகப் பரவி இரண்டு அணிகளுக்குமான கலவரமாக மாறியது. ஆயிஷா ஒரு பக்கம் கத்த “என் கிட்டயும் சீப்பு இருக்கு... நாங்களும் தலை சீவுவோம்” என்று அதையும் விட ஹைடெஸிபலில் வெறித்தனமாக தனலஷ்மி கத்த... போக பிஸ்ஸாவிற்கே ஒரு கணம் பீதி வந்திருக்கும்.

“என்னை போடான்னு சொல்லுவியா... உன்னை விட வயசுல மூத்தவன்’ என்று தனலஷ்மியிடம் ஏடிகே எகிற ‘நான் போடான்னு சொன்னேனா. சரியா கேட்டீங்களா?” என்று வெறித்தனம் குறையாமல் பதில் சொன்னார் தனலஷ்மி. ஏடிகே விடாமல் மல்லுக்கட்ட, பிறகு தனலஷ்மி ‘ஏ... போ...’ என்று கோபம் குறையாமல் சொன்ன அந்தத் தொனி இருக்கிறதே... ‘போடா’வை விடவும் மரியாதைக் குறைவானதாக இருந்தது. பாவம் ஏடிகே. முதல் ‘போ’வோடு விட்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். வழக்கம்போல் இதற்கும் விக்ரமன் வந்து சமாதானம் செய்து வைத்தார். (இந்த வருடத்தின் அமைதிக்கான ‘நோபல் பரிசை’ இவருக்கு வழங்கி மகிழலாம்!).

அடுத்ததாக ஏலியன்ஸ் தரப்பிலிருந்து ஆயிஷா வெளியே வந்தார். வெளியே வரவழைக்கப்பட்டார் என்றும் சொல்லலாம். ‘சிரிச்சா மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு’ ஆயிஷா நாற்காலியில் அமர ‘உன் டிரஸ்ஸை நான் கிழிச்சேனா..?’ என்று விதம் விதமாக அவரைக் கேள்வி கேட்டு சாஃப்ட்டாக டார்ச்சர் செய்தார் ஏடிகே. ஆயிஷாவின் முகம் மாறவில்லை. ஆனால் பழங்குடிகளோ ‘ஆயிஷா கோபப்பட்டாங்க’ என்று தீர்ப்பு சொல்ல அதை பிக் பாஸ் ஏற்றுக் கொண்டார். நாம் பார்த்தவரை ஆயிஷா ரியாக்ட் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

‘அசிமை லூஸூன்னு சொன்னியா’ – தனலஷ்மியின் விசாரணை

ஒருவழியாக டாஸ்க் தற்காலிக ஓய்விற்கு வந்தது. தனலஷ்மியின் அட்ராசிட்டியைப் பற்றி ராமிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “நீ எப்ப அசிமை லூஸூன்னு சொன்னே?” என்று இன்னொரு பக்கம் ஜனனியை விசாரித்துக் கொண்டிருந்தார் தனலஷ்மி. “அவர்தான் என்னை அண்ணா என்று கூப்பிட வேண்டாம், அசிம் என்று கூப்பிடலாம்ன்னு சொன்னவர்" என்பதை நூற்றுப் பதினாறாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. "அசிம் சார் என்றா கூப்பிட முடியும்?” என்பதும் அம்மணியின் கேள்வி. பதில் மொய் வைக்கும் விதமாக, தான் ஏடிகேவுடன் போட்ட சண்டையை விதம் விதமாக நியாயப்படுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. ‘கோபத்துல ஏய்...ன்னுதானே சொல்லுவாங்க?’ என்று அவர் சொல்ல, ஜனனி அமைதியாக இருந்து தப்பித்தார். இப்படியாகப் பரஸ்பரம் இருவரும் தங்களின் விழுப்புண்களைத் தடவி ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் 6, நாள் 52

இன்னொரு அமைதிப் புறாவான கதிரவன் ‘நான் வேணா ஏடிகே கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?’ என்று தனலஷ்மியிடம் கேட்க “ஒண்ணும் தேவையில்ல. கேமிற்காக டிரஸ்ஸைப் பிடிச்சு இழுக்கலாமா?” என்று வீம்பு காட்டினார் தனலஷ்மி. “காலை நாலரை மணிக்கு யாரா இருந்தாலும் மரண தூக்கம் வரும்... அப்ப தூக்கிடலாம்” என்று மணி போட்ட பிளானை, ஏலியன்ஸ் உற்சாகமாக ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மணியே அந்தச் சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என்பதுதான் காமெடி.

அசிமின் ஆக்ரோஷமான ஆட்டமுறை பற்றி கதிரவனுக்கு விமர்சனம் இருந்தது. அதைப் பற்றி அவர் அசிமிடம் வெளிப்படுத்த இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழுந்தது. கௌதம் மேனன் படம் மாதிரி திடீரென்று ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக் கோபப்பட்டார் கதிரவன். இந்த சீசனில் அவர் கோபப்படுவது இது இரண்டாவது முறை. “ஓகே... நீ தனியாவே ஆடு" என்று அசிமிடம் எரிச்சலாகச் சொல்லி விட்டு விலகினார் கதிர். கண்ணாடி கதவின் அருகே ஏலியன்ஸ் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதை ஆட்சேபித்த ஏடிகே, தானும் பதிலுக்குக் குடைகளைச் செருகி கதவுக்குத் தடை ஏற்படுத்தினார். (குடை - தடை... ரைமிங்கா இருக்குல்ல!).

‘எக்ஸ்க்யூஸ்மி... நான் திருட உள்ளே வரலாமா?’ – அசிம் காமெடி

பெரும்பாலும் ரணகளமாகச் சென்று கொண்டிருந்த காட்சிகளின் இடையில் நடந்த இந்தக் காமெடிக் காட்சி பெரிய ஆறுதலை அளித்தது. கண்ணாடிக் கதவைச் சற்று திறந்த அசிம், “எக்ஸ்க்யூஸ்மி... நான் திருட வந்திருக்கேண்டா. மே ஐ கம் இன்?” என்பது போல் மணிகண்டனிடம் கேட்க, அவரோ “நான் தூங்கிட்டப்புறம் வா... இப்ப போ” என்று ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்தார். “எனக்கு பூ வேணும்டா...” என்று அசிம் அடம் பிடிக்க “எத்தனை முழம் வேணும்?” என்று மணிகண்டன் காமெடி செய்ய ரச்சிதாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை. அசிமின் இம்சை தாங்காமல் ‘சரி வா... கேம் ஆடலாம்’ என்று கொட்டாவி அலுப்புடன் சொன்னார் மணிகண்டன்.

பிக் பாஸ் 6, நாள் 52
காலை 06:50 மணி. சண்டை போட்ட களைப்பில் பழங்குடிகள் கார்டன் ஏரியாவில் ‘மரண தூக்கம்’ தூங்கிக் கொண்டிருக்க, அமுதவாணன் சுதாரித்துக் கொண்டார். அவர் மணியை எழுப்ப, அவர் தனலஷ்மியை எழுப்ப, கூட்டுக் கொள்ளைக்குக் கிளம்பினார்கள். வெளியே இருந்த கற்களை நைசாக எடுத்துக் கைமாற்றி வீட்டுக்குள் கொண்டு சென்றார்கள். தான் ஒளித்து வைத்திருந்த அதிசயப்பூக்களை அதற்குரிய ஏரியாவில் கொட்டினார் தனலஷ்மி.

அமுதவாணன் ஒவ்வொன்றாகத் திருட, தனலஷ்மியோ ஹோல்சேலில் கற்களைத் திருடி தடதடவென்று ஓடினார். பழங்குடியினர் எழுந்து கொள்வார்களோ என்று நமக்குத்தான் பதற்றமாக இருந்தது. எடுத்த கற்களை அமுதவாணன் அநாவசியமாக ஒளித்து வைத்து பிறகு மீண்டும் எடுக்கச் செல்ல, மைனா விழித்துக் கொண்டார். பிறகு கையும் களவுமாக அமுதவாணனை நோக்கி குரல் கொடுத்தார். ‘எல்லாமே கை விட்டுப் போயிடுச்சு’ என்பதை உணர்ந்த பழங்குடிகள் மறுபடியும் இழுத்துப் போர்த்தித் தூங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

ஆனால் ஏடிகேவால் அப்படி எளிதாக விட்டு விட முடியவில்லை. “மணிகண்டன்... நீங்க சொன்ன வாக்குறுதி காரணமாத்தானே தூங்கப் போனோம். இது தப்பு மணி... நம்பிக்கையை உடைச்சுட்டீங்க... காலைல சமைக்கணுமேன்னுதான் தூங்கப் போனேன். நான் சமைக்க மாட்டேன். சாப்பிடவும் மாட்டேன்...” என்று கோபம் அடைந்தார். ‘நாங்க சமைக்கணுமா, வேணாமா... எடுத்ததையெல்லாம் கொடுத்துடுங்க’ என்று விக்ரமனும் டீல் பேசினார்.

பிக் பாஸ் 6, நாள் 52
திடீரென்று பாத்ரூம் ஏரியாவில் பெரிய அழுகைக் குரல் கேட்டது. தோல்வி தாங்காமல் ஏடிகேதான் அழுகிறாரோ என்று பார்த்தால், நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை. ஆம், அசிம்தான் அழுது கொண்டிருந்தார். ஏடிகே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசில சிங்கத்தையும் இந்த பிக் பாஸ் வீடு அசிங்கப்படுத்திடுச்சே மக்கா!

பூட்டு சாவி கலவரம் – போக பிஸ்ஸா 2.0

‘இரும்பிலே ஓர் இதயம் முளைக்குதோ’ என்கிற பாடலுடன் நாள் 52 விடிந்தது. கதிரவனிடம் அசிம் உருக்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க, “இப்ப கேம்ல ஃபோகஸ் பண்ணு... சண்டையை அப்புறம் போட்டுக்கலாம்” என்று ஸ்போர்டிவ்வாகச் சொன்னார் கதிரவன். ‘சமைக்க மாட்டோம்’ என்று வீர சபதம் எடுத்தாலும் விக்ரமனும் ஏடிகேவும் கிச்சன் ஏரியாவில் பிசியாக இருந்தார்கள். எதிர் அணியின் உற்சாகமான உரையாடல்களைக் கேட்டு மனம் நொந்தபடியே சமைத்தார்கள். பழங்குடிகளின் ‘டீம் டிஸ்கஷன்’ நடந்தது. ‘அசிமே உள்ளே போய் எப்படியோ தொலையட்டும். நமக்குக் கல்லு கிடைச்சா சரி’ என்று அசிம் மீதிருந்த காண்டு காரணமாக விட்டேற்றியாக ஜனனி பேசிய வசனம் காமெடியாக இருந்தது.

ஏலியன் x பழங்குடி களேபரம் போதாதென்று, ‘Lock & Key’ என்கிற பெயரில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கையும் இடையில் நுழைத்தார் பிக் பாஸ். 'ஒவ்வொருவருக்கும் பூட்டுகள் வழங்கப்படுமாம். அவர் இரண்டு நபர்களைப் பூட்ட வேண்டுமாம். பிறகு வருபவர் மூன்று நபர்களைப் பூட்டி விட்டு தன் விருப்பப்படி ஒருவரை விடுவிக்கலாம்’ என்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இந்த ஆட்டத்தின் விதிகள் இருந்தன.
பிக் பாஸ் 6, நாள் 52

முதலில் அழைக்கப்பட்ட மணிகண்டன், ஆயிஷாவையும் மைனாவும் துரத்திப் பிடித்துப் பூட்டினார். இதன் மூலம் மைனாவிடம் நட்பு பாராட்டாமல், உக்கிரமாக டாஸ்க் ஆடுகிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இருக்கலாம். ‘இருக்குடி உனக்கு மகனே’ என்று மணிகண்டனிடம் சபதம் செய்தார் மைனா. அடுத்தபடியாக வந்த தனலஷ்மி, அதே மைனாவையும் க்வீன்சியையும் துரத்திப் பிடித்துப் பூட்டி, ஆயிஷாவை ரிலீஸ் செய்தார்.

“தனலஷ்மி... மூணாவது பூட்டையும் பூட்டணுமே’ என்று பிக் பாஸ் உசுப்பேற்ற, தனலஷ்மியிடமிருந்து தப்பிப்பதற்காக வீடு சிதறி ஓடியது. இந்தக் களேபரத்தில் ஜனனி தடுக்கி விழுந்தார். (‘ஸ்கூல்ல நான்தான் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்... நான் நெனச்சா..!). பிறகு கையில் கிடைத்த விக்ரமனைப் பூட்டி மகிழ்ந்தார் தனலஷ்மி.

‘போக பிஸ்ஸா’ டாஸ்க்கில் 2.0 என்கிற பெயரில் சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தார் பிக் பாஸ். அதன்படி, ‘டார்ச்சர் நாற்காலியில்’ அமர்பவரை இருவர் மட்டுமே டார்ச்சர் செய்ய வேண்டுமாம். பேச்சு வார்த்தையைத் தவிர ‘வேறு முயற்சிகளிலும்’ ஈடுபடலாம் என்கிற திருத்தம் தனலஷ்மியை உற்சாகம் கொள்ள வைத்தது. ஆக்ரோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தார். (வெஷம்... வெஷம்..!). அசிமுக்குக் கத்தி கத்தி சண்டை போட்டு தொண்டை போய்விட்டது போல. கரகர குரலில் டாஸ்க் விதிகளை வாசித்து முடித்தார்.

‘அசிம் புரொமோ கன்டென்ட் தருகிறார்’ – கிண்டலடித்த வீடு

“ஏலியன்ஸ் பூவை எடுத்து ஒளிச்சு வெச்சது தப்பான விஷயம். ஃபவுல் கேம்” என்று அசிம் ஆரம்பிக்க, இது தொடர்பாக அமுதவாணனுக்கும் அசிமிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கேவலமா பேசாத...’ என்று அசிம் சொன்னது, அமுதவாணனை அதிகமாகக் கோபப்படுத்தியது. அசிமின் அநாகரிகமான பேச்சை இதர போட்டியாளர்களும் ஆட்சேபித்தார்கள். "புரொமோ கண்டென்ட் தராரு” என்று அசிமைப் பற்றி ஷிவினும் தனலஷ்மியும் கிண்டல் செய்தார்கள்.

“மற்றவங்களை அநாகரிகமா பேசினா நான் கேட்கத்தான் செய்வேன்” என்று விக்ரமன் சொல்ல, “நீங்க இதுல வராதீங்க. இதன் விளைவுகளை நான் பார்த்துப்பேன்...” என்று அசிம் எகத்தாளமாகச் சொல்ல “அந்தத் தைரியத்துலதான் ஆடறீங்க” என்று விடாமல் மல்லுக்கட்டினார் விக்ரமன். "கதவை உடைச்சுட்டு வருவேன்னு சொல்றே. நீ என்ன ரவுடியா?” என்று அசிமை நோக்கி அமுதவாணனும் உக்கிரமானார். ‘என்ன வேணுமின்னா பேசுங்கடா’ என்கிற மோடில் அசிம் கூலாக இருந்தார்.

பிக் பாஸ் 6, நாள் 52

‘போக பிஸ்ஸா’ 2.0 மீண்டும் ஆரம்பித்தது. பிடிட்ட அசிமின் முகத்தில் முட்டையை வைத்து உற்சாகமாக ஆம்லேட் போட முயன்றார் தனலஷ்மி. அது வழுக்கி கீழே விழவே ‘முட்டைக்கே உன் மூஞ்சி பிடிக்க மாட்டேங்குது’ என்று வெறுப்பேற்றினார். ‘மைக்கைக் கழற்றிட்டு ஊத்துங்க’ என்று சொன்ன அசிமின் முகத்தில் மெல்லிய கோபம் தெரிந்தது. ‘அவரு சிரிச்சிட்டாரு... ரியாக்ட் செஞ்சாரு... நாங்க ஜெயிச்சுட்டோம்” என்று தனலஷ்மி உற்சாகம் அடைய, அசிம் ஏலியனாக கன்வொ்ட் ஆனதை பிக் பாஸ் உறுதிப்படுத்தினார்.

‘இறைவன் மீது ஆணையாக நான் ரியாக்ட் செய்யவில்லை’ என்று அநாவசியமாக சாமியையெல்லாம் இழுத்து பிறகு சத்தியம் செய்தார் அசிம். கட்டப்பட்டிருந்த தன் கைகளை விடுவிக்க மறுத்த தனலஷ்மியிடம் “நீ வெளியே போ... ஊரே உன் மேல முட்டை அடிக்கும்" என்று அசிம் நக்கலடித்ததோடு இந்த எபிசோட் ஒருவழியாக நிறைந்து தொலைத்தது. சுபம்.

மேலும் படிக்க பிக் பாஸ் 6, நாள் 52: இரண்டாவது முறையாகக் கோபப்பட்ட கதிரவன்; புரொமோ கன்டென்ட் தரும் அசிமின் அழுகை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top