ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை மேம்பாட்டுத்தும் திட்டம் நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்து வருகிறது. தாராவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு, அடுக்கு மாடி குடியிருப்புக்களை கட்ட மாநில அரசுகள் இதற்கு முன்பு பல முறை டெண்டர் விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்திற்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிடும். இதற்கு முன்பு தாராவியை பல செக்டர்களாக பிரித்து மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தது. ஆனால் அத்திட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது பாஜக கூட்டணி அரசு மீண்டும் தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்திற்கு டெண்டர் வெளியிட்டு இருந்தது. இம்முறை செக்டர்களாக பிரிக்காமல் ஒரே கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து குடிசைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு டெண்டர் கொடுக்க அரசு விதித்திருந்த காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தாராவி குடிசைகளை மேம்படுத்த அதானி பிராபர்டீஸ், டி.எல்.எஃப், ஸ்ரீநாமன் டெவலப்பர்ஸ் உட்பட 8 நிறுவனங்கள் டெண்டர் கொடுத்திருக்கின்றன. இதில் அதானி, டி.எல்.எஃப், ஸ்ரீநாமன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு இல்லாமல் தனித்து விண்ணப்பித்திருக்கின்றன. இது குறித்து தாராவி மேம்பாட்டுத்திட்ட அதிகாரி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ``டெண்டர்கள் அடுத்த சில நாள்கள் பரிசீலிக்கப்படும்.

அவற்றில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்படும்” என்று தெரிவித்தார். ஆரம்பத்தில் டெண்டர் கொடுக்க காலக்கெடு முடிந்த நிலையில், டெண்டர் கொடுக்க கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. அதோடு திட்டத்தை முடிக்க அரசு நிர்ணயித்திருந்த 7 ஆண்டு கெடுவை 12 ஆண்டுகளாக நீட்டிக்கவேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டன. பில்டர்களின் கோரிக்கையை ஏற்று டெண்டர் கொடுக்க இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டது.
தாராவி மும்பையில் பிரதான பகுதியான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கிறது. மொத்தம் 240 ஹெக்டேர் பரப்பு கொண்ட தாராவி, மேம்படுத்தப்பட்ட பிறகு புதுப்பொழிவு பெறும். இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் அரசுடன் சேர்ந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் அரசுக்கு 20 சதவீத பங்குகள் இருக்கும். தாராவியில் மொத்தம் 60 ஆயிரம் குடிசைகளும், 13 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்களும் இருக்கிறது. 60 ஆயிரம் குடிசைவாசிகளில் 40 சதவீதம் குடிசைகள் அரசின் இலவச குடிசை மாற்றுத்திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லாதவர்கள் ஆவர். அவர்களிடம் கட்டுமானச்செலவு மற்றும் நிலத்திற்கான செலவு வாங்கிக்கொண்டு வீடு வழங்கப்படும். தகுதியான குடிசைவாசிகளுக்கு 405 சதுர அடியில் வீடுகள் இலவசமான கிடைக்கும். இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திற்கு மாநில அரசும் பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது.

ஆரம்பத்தில் 360 சதுர அடி வீடு கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதைவிட பெரிய வீடு வழங்கவேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. அது போன்ற இடையூறுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 405 சதுர அடி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே சமீபத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மும்பை வந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்துவிட்டு சென்றார். மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் இத்திட்டப்பணிக்கு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க மும்பை: தாராவி குடிசை பகுதிகளை மேம்படுத்தும் மெகா திட்டம்... போட்டியில் குதித்த அதானி நிறுவனம்!