கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர்(49). கேரளா அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி பிரியா. தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த பிரியாவுக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுதீர் வீட்டில் சாப்பிடும்போதெல்லாம் அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கமாம். ஒருமுறை வீட்டில் மனைவி கொடுத்த ஹார்லிக்ஸை குடித்துவிட்டு வெளியே சென்ற சுதீருக்கு தலைவலியும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. உடனே பாறசாலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மூன்று நாள்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடல்நிலை சீராகியுள்ளது.

இதனிடையே, சுதீரின் மனைவி பிரியா சண்டைபோட்டுவிட்டு அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அந்த சமயத்தில் ஹோட்டலில் சாப்பிட்ட சுதீருக்கு உடல்நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை. மேலும் மனைவி பிரிந்து சென்ற மூன்று மாதத்தில் தனது வீட்டில் பீரோவில் இருந்த மனைவியின் உடைகளை வெளியே தூக்கி வீசி உள்ளார். அப்போது துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் பாஸ்பேட் விஷம் மற்றும் ஒரு சிரிஞ்ச் ஆகியவற்றை சுதீர் கண்டுபிடித்துள்ளார். தனது உடலிலும் அம்மோனியம் பாஸ்பேட் விஷம் சென்றதாக மருத்துவர்கள் கூறியதாக சுதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை கொலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கூரியர் மூலம் விஷம் அனுப்பப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சுதீர் கூறுகிறார். எனவே மனைவியின் ஆண் நண்பர் முருகன் அந்த கூரியரை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பாறசாலை போலீஸில் சுதீர் புகார் அளித்தார். புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகியும் போலீஸ் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளதாக தெரிகிறது. இது விவாதமானதைத் தொடர்ந்து சுதீரின் புகார் மீது பாறசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுதீரின் மனைவி பிரியா மீதும், அவரின் ஆண் நண்பரான திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் சுதீருக்கு அவரது மனைவி பலமுறை உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளதாகவும், கணவனை கொலை செய்துவிட்டு முருகனுடன் சேர்ந்து வாழ பிரியா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாறசாலை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க திருமணம் மீறிய உறவு... ஹார்லிக்ஸில் விஷம் கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவி? - ஆண் நண்பர் மீதும் வழக்கு