தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, நயினார்புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என 3 மகள்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி, சண்முகத்தாய் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். கடந்த 5-ம் தேதி தேவராஜின் வீட்டில் சண்முகத்தாயின் நினைவு சடங்கு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்து கொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (6-ம்தேதி) மாலையில் தேவராஜின் மகள்கள் மற்றும் உறவினர்கள் சிவகளையில் உள்ள பெரியகுளத்தில் குளிக்கச் சென்றனர். இதில் எதிர்பாராத விதமாக கோகிலா என்ற 12 வயது சிறுமி நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினார். அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காக தேவராஜின் மூத்த மகளான சுடலைக்கனி தண்ணீருக்குள் இறங்கினார்.
அப்போது இருவருமே சகதியில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு குளத்தின் அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். மீட்கப்பட்ட சுடலைக்கனியை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறுமி கோகிலாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிட தேடலில், சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய சிறுமி கோகிலாவை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தாய் இறந்த 8வது நாளில் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, அத்தையின் துக்க நிகழ்வுக்காக வந்தன் சிறுமி கோகிலா, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க தூத்துக்குடி: நீச்சல் தெரியாமல் குளத்தில் குளியல் - சிறுமியை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பலியான சோகம்