சீனாவில் அதிபருக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராகவும் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. பீஜிங், ஷாங்காய், வூஹான் ஜின்ஜியாங் உள்ளிட்ட மாகாணங்களில் சாலையில் இறங்கிப் போராடிவருகிறார்கள் சீன மக்கள். போராட்டம் ஏன் வெடித்தது... பின்னணி என்ன?
தீ விபத்தால் போராட்டம்?
கடந்த சில வாரங்களாகவே சீனா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 27 அன்று, 38,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், சீனாவின் பல மாகாணங்களின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் மக்கள் வெளியே செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனாவே இல்லாத சூழலை உருவாக்குவதற்காக `ஜீரோ கோவிட்' கட்டுப்பாடுகள் சீனாவில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ. 24) அன்று, ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கி பகுதியிலுள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள் சிதறியடித்துக் கட்டடத்தைவிட்டு வெளியேறி வந்தனர். அந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி கொரோனா கட்டுப்பாடுகளுக்காகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால், மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டதோடு, 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். காவல்துறையினரோ, `இந்தச் சம்பவத்துக்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' என்று சொல்லிவருகின்றனர்.
முதல் போராட்டம்!
உரும்கி தீ விபத்து சம்பவம் குறித்த செய்திகள் சீனா முழுவதும் பரவ, அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள் சீன மக்கள். பீஜிங், நான்ஜிங் உள்ளிட்ட மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஷாங்காய், வூஹான், ஜின்ஜியாங் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.
`அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும்; முழுச் சுதந்திரம் வேண்டும்', `கம்யூனிஸ்ட் கட்சி பதவி விலக வேண்டும்' என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் சீனாவில் நடக்கும் போராட்டங்கள் ஒரு அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. போராட்டங்களை ஒடுக்க பல்வேறு இடங்களிலும் சீனக் காவல்துறையினர் மக்கள்மீது தடியடி நடத்திவருகின்றனர். இருந்தும், பின்வாங்காமல் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர் மக்கள். போராட்டம் நடைபெற்றுவரும் சில இடங்களில் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஜி ஜின்பிங் பதவியேற்ற பின்னர், அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடக்கும் முதல் போராட்டம் இதுதான். அரசுக்கு எதிராக மக்கள் போராடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், சீனாவில் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையே நீடித்துவந்தது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தனக்கேற்றவாறு விதிகளை மாற்றி, தன்னைத் தானே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக நியமித்துக்கொண்டார் ஜின்பிங். அதன் வழியாக, மூன்றாவது முறையாகத் தன்னை தானே அதிபராகவும் அறிவித்துக் கொள்ளவிருக்கிறார் அவர்.
அந்தச் சமயத்திலேயே ஜின்பிங்-க்கு எதிராகப் பேனர்கள் வைக்கப்பட்டு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. பீஜிங்-கின் முக்கியமான சில இடங்களில், `பெரும் தலைவருக்கு நோ சொல்லுங்கள்; வாக்குரிமைக்கு யெஸ் சொல்லுங்கள். அடிமையாக இருக்காதீர்கள்; குடிமகனாக இருங்கள்!', `வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள். சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜின்பிங்கை நீக்குங்கள்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் தொங்கிடவிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், மக்கள் ஒன்றுகூடிப் போராடிவருவது ஜின்பிங்-க்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

சீன அரசியலில் மா சே துங்-க்கு பிறகு, தன்னை அசைக்க முடியாத அரசியல் தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார் ஜின்பிங். ஜனநாயகத்தை மீறி, மக்கள்மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், அவரைச் சர்வாதிகாரியாகவே பார்க்கிறார்கள் சீன மக்கள்.
ஜி ஜின்பிங் சர்வாதிகாரத்தைக் கையிலெடுத்திருப்பதால், மீண்டுமொரு சீனப் புரட்சி வெடிப்பதற்கான சிறுபொறியாக இந்தப் போராட்டம் இருக்கலாம்!
மேலும் படிக்க சீனா: சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்... முதன்முறையாக பெரும் போராட்டம் - பின்னணி என்ன?!