விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 21-ம் தேதி நடைபெற்றது. அதில், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம், ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், ஊராட்சிகளின் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர், அமைச்சர் பேசுவதையே கவனிக்காமல் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். மேலும், பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அவர்களுடைய ரத்த சொந்தங்களும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தி.மு.க-வை சேர்ந்த மேல்வயலாமூர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் எல்லம்மாள் என்பவருக்கு பதில், அவருடைய மகன் சதீஷ் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு... தலைவர்கள் கலந்து கொண்டதற்கான வருகை பதிவேட்டில் தாயின் கையெழுத்தை பச்சை நிற மையை கொண்டு போட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையெழுத்து சம்பவம் குறித்து விளக்கம் கேட்க மேல்வயலாமூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாளை தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்ற அவரது கணவர் சம்பத், "என் வீட்டம்மா தான் அவங்க. நான் வெளியில் வந்திருக்கிறேன். எதுவானாலும் என்கிட்டையே கேளுங்கள், பதில் சொல்கிறேன். அவர்களுக்கு ஒன்னுமே தெரியாது" என்றார். அவரிடம், கையெழுத்து சர்ச்சை குறித்து விவரித்தோம்.

"என்னோட வீட்டம்மா, அந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்தார்கள். கொஞ்சம் வேலை இருந்ததால் உடனே வந்துவிட்டார்கள். அவங்க தான் கையெழுத்து போட்டிருப்பாங்க. பையன் கையெழுத்து போட்டிருக்க மாட்டான். நான் வெளியில் இருக்கிறேன். வீட்டிற்கு போய்விட்டு, என் வீட்டம்மாவிடம் கூறி உங்களுக்கு போன் பண்ணுகிறேன்" என்றார். ஆனால், அதன் பின் அவர் நம்மை அழைக்கவில்லை.
இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப்பின்னர் பதிவிட தயாராக உள்ளோம்!
மேலும் படிக்க ஊராட்சித் தலைவர் கையெழுத்தை போட்டது மகனா? - `வீட்டம்மாவுக்கு ஒன்னுமே தெரியாது’ - கணவரின் பதில்