விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 44 மீனவ கிராமங்களும் உள்ளன. இந்த பகுதிகளில், மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை. இதனால், மீனவர்கள் கடலில் விசைப்படகுகளை நிறுத்தும் பொழுது காற்று, புயல், சூறாவளி ஏற்பட்டால் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிவிடும் நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதிகளில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும்; செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலம்பரா கோட்டை என்ற இடத்திலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, ரூ.236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 'இந்த மீன்பிடி துறைமுகங்கள் இப்பகுதிகளில் அமைந்தால், கடல் ஆமைகள் ஆண்டுதோறும் முட்டையிட வருவது பாதிக்கப்படும், சூழலுக்கும் பாதிப்பு உண்டாகும்' என கூறி சில தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, 'மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இரண்டு மாவட்டங்களிலும் துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' என்ற சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மீனவ சமூகத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்... இ.சி.ஆர் சாலையில், அனுமந்தை எனும் இடத்தில் அமர்ந்து நேற்று (28.11.2022) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை சுமார் 3.30 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற நிலையில், திண்டிவனம் சார் ஆட்சியரின் பதிலை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து, மீனவ சமூகத்தை சேர்ந்தவரும் அழகன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான பழனி என்பவரிடம் பேசினோம். "மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது 25 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் துறைமுகங்கள் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். அந்த துறைமுகத்தின் முகத்துவாரம் அமையும் இடத்திற்கு அருகாமையில் தனியார் ரிசார்ட் ஒன்று இருக்கிறது. கூடுதலாக, குழுவெளி - கடல் பகுதியின் அருகே சுமார் 7 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருக்கிறார்கள். துறைமுகம் அமைப்பதால் இதெல்லாம் பாதிக்கப்படும் என்றுதான், இந்தத் திட்டத்தினை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக, அந்த ரிசார்ட் விடுதிக்கு தங்குவதற்கு வரும் சுற்றுலா பயணிகளை, பக்கிங்காம் கால்வாய் பகுதிகளும், கடலின் முகத்துவார பகுதிகளிலும் அரசு அனுமதி பெறாமல் படகு சவாரி நடத்துகிறார்கள். துறைமுகத்தால் இதெல்லாம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்பதால்தான், தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலமாக இந்தத் திட்டத்தை தடுக்கிறார்கள். "இந்த பகுதிகளில் பறவைகள் இருக்கிறது, ஆமைகள் முட்டையிடுகிறது, மாசு ஏற்பட்டுவிடும்" என்று அந்த தொண்டு நிறுவனத்தினர் வதந்தியை கிளப்பிவிட்டு, பசுமை தீர்ப்பாயத்தில் கேஸ் போட்டார்கள். அதன் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயத்தின் மூவர் ஆய்வுக் குழு இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, 'துறைமுகத்தால் பாதிப்பு வராது' என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த அறிக்கை தவறு என கூறும் தனியார் தொண்டு நிறுவனத்தினரால், இந்த வழக்கு தடைபட்டு நிற்கிறது. அதனால் துறைமுகங்கள் அமைக்கும் பணியும் தடைப்பட்டு நிற்கிறது.
இன்று (29.11.2022) அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது. வழக்கை அவர்களுக்கு சாதகமாக வாதாடி எடுத்துச் சென்றுவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்பதால்தான், மீனவர்களின் நிலையை அரசுக்கு கவனம் சேர்க்க, நேற்று அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். பொதுமக்களின் வாழ்வாதாரம் முக்கியமா? இல்லை, ரிசார்ட் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் முக்கியமா? என்பதுதான் எங்களுடைய கேள்வி. எனவே, நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அரசும் இந்த வழக்கில் தலையிட வேண்டும். இந்த வழக்கு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் எனும் தனிநபரால் போடப்பட்டது. எங்களுடைய வாழ்வாதாரம் பற்றி அவர்களுக்கு தெரியாது. எப்போது மழை வரும், புயல் வரும், வெள்ளம் வரும் என்பதும்; ஆமை, டால்பின், திமிங்கலம் எப்போதெல்லாம் கரை ஒதுங்கும் என்பதும்; இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதும் மீனவர்களாகிய எங்களுக்கு தெரியும். ஆமையை கடவுளாக வழிபடுபவர்கள் நாங்கள்.

ஆமை, வலையில் சிக்கிக்கொண்டால், வலையே போனாலும் பரவாயில்லையென, வலையை வெட்டி எடுத்துவிட்டு ஆமையை மீட்டு கடலில் விட்டு விடுவோம். பின் வீட்டிற்கு வந்து, அதற்காக படையல் வைத்து வழிபட்டு, படையலை கடலில் விடுவோம். இப்படி ஆமைகளை பாதுகாக்கிறோம் நாங்கள். ஆனால், எங்களுக்காக அமைக்கப்படும் துறைமுகத்தினால் ஆமை பாதிக்கப்படும் என்பதில் என்ன நியாயம். அதேபோல், எங்களுக்கு துறைமுகம் இல்லாததால் புதுவை, கடலூர், சென்னை போன்ற வெகு தூரத்தில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.
அதனால், எங்கள் பகுதியில் கடலிலேயே படகுகளை நிறுத்தினால், சில நேரங்களில் மூழ்கிப்போய் விடுகின்றன. நேற்று உண்ணாவிரதத்தின் போது எங்களிடம் பேசிய திண்டிவனம் சார் ஆட்சியர், "உங்களின் கோரிக்கைகள் அரசின் கவனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசு, நீதியரசரின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வார்கள். அதற்கான பணிகளை பார்த்துக் கொண்டுள்ளோம். தற்காலிகமாக இந்த உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்" என்றார். அதனை நம்பி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம். ஆனால், இந்த துறைமுகம் அமைவது தடுக்கப்படும் என்று சொன்னால், மீனவர்கள் அனைவரும் எங்களுடைய அரசு அடையாள ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
மேலும் படிக்க `ஆமையை கடவுளாக வழிபடுவோம்; எங்கள் வாழ்வாதாரம் உங்களுக்கு தெரியாது’ - துறைமுகம் கோரும் மீனவர்கள்