திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு துர்கா என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக துர்கா தன் ஒன்றரை வயது மகள் ரித்திகாவுடன் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டிக்கு வந்தார். அங்கு தன் உறவினர் வேலை பார்க்கும் தோட்ட வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று தோட்டத்து வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை எனத் தேடியதாகவும், அப்போது அருகே உள்ள கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையை மீட்ட நிலக்கோட்டை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸாரிடம் விசாரித்தோம். `` `தோட்டத்து வீட்டின் முன்புற மேற்கூரையில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன். அப்போது குழந்தை தொட்டிலிலிருந்து இறங்கி என்னை தேடி அருகே இருந்த கிணற்றில் விழுந்திருக்கலாம்' என துர்கா கூறுகிறார். ஆனால், அவர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.

குழந்தையை இழந்துள்ள தாயிடம் விசாரணையை உடனே தொடங்கக் கூடாது என பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். ராஜதுரை துர்கா இடையே எதனால் பிரச்னை, ஏன் இந்த தோட்டத்து வீட்டிற்கு வந்தார் என்பதற்கும் சரியான காரணம் தெரியவில்லை. குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளது, தொடர் விசாரணையில்தான் உண்மை தெரியவரும்" என்றனர்.
மேலும் படிக்க திண்டுக்கல்: தொட்டிலில் தூங்கிய குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு! - கொலையா என போலீஸார் விசாரணை