சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி துப்பாக்கிகளுக்கு காவல்துறையினர் அதற்குரிய லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோடம்பாக்கத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்தது. அந்தப் படப்பிடிப்பில் ஏ.கே.47 டம்மி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அந்த வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி கோயம்பேடு போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். "இதுபோல் டம்மி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு டம்மி துப்பாக்கிகள் சப்ளை செய்தவர் செல்வராஜ். சினிமா வட்டாரத்தில் அவரை 'கன்' செல்வராஜ் என்றே அழைப்பார்கள். தனது டம்மி ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதும், உடனே அவரது சங்கத்தில் இது குறித்துத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 'தென்னிந்தியத் திரைப்பட டம்பி எஃபெக்ட்ஸ் சங்கம்' (South Indian Movies Dummy Effects Association (SIMDEA)) மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், "மகாராஷ்டிர மாநிலத்தில் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு எண் வழங்கப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. அந்த மாநில நீதிமன்றம் உத்தரவின்படி போலீஸார் அவ்வாறு செய்துள்ளனர். இதனால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு டம்மி துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது எளிதாகிறது. அதுபோல, தமிழ்நாட்டிலும் டம்மி துப்பாக்கிகளுக்கு எண் வழங்கி, உரிமம் வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, "மனுதாரர்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் மனுதாரர் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன்பிறகு ஆயுதங்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இது குறித்து 'கன்' செல்வராஜிடம் பேசினேன். இவர் தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' உட்படப் பல படங்களுக்கு டம்மி ஆயுதங்கள் தயார் செய்து கொடுத்திருக்கிறார்.

"ஆரம்பத்துல டம்மி துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும்னு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எங்க யூனியனும், தனிப்பட்ட முறையில் நானும் விண்ணப்பிச்சிருந்தோம். அப்படிக் கொடுக்க முடியாதுன்னு அவங்க தரப்பில் சொல்லிட்டாங்க. அப்புறம், 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பின்போது நடந்த அந்த விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். என்னோட 182 டம்மி துப்பாக்கிகளையும் போலீஸ் பறிமுதல் செய்ததோடு, அதைக் கொண்டு சென்றவரையும் போலீஸ் கைது பண்ணினாங்க. அப்புறம் எங்க யூனியன் சார்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தோம். அந்த வழக்கு விசாரணை வந்து, இப்ப தீர்ப்பும் வந்திடுச்சு.
கோர்ட்டுல 'இது ஆயுதம் கிடையாது. பொம்மை துப்பாக்கிகள் தானே... இதை ஒழுங்கு முறைப்படுத்தலாமே'ன்னு சொன்னதோடு எங்க இடத்துக்கு வந்து ஆய்வு செய்து லைசென்ஸ் வழங்கணும்ன்னு உத்தரவிட்டிருக்காங்க. டம்மி கன்களுக்கு லைசென்ஸ் வழங்கணும்னு மும்பைக்கு அடுத்து சென்னையில்தான் இப்படி உத்தரவிட்டிருக்காங்க. என்னுடைய 182 டம்மி துப்பாக்கிகளும் இன்னமும் நீதிமன்றத்துலதான் இருக்கு. அவற்றை எல்லாம் என்கிட்ட ஒப்படைக்க உத்தரவிட்டுட்டாங்க. சீக்கிரமே என் கைக்கு வந்துடும்." என்கிறார் 'கன்' செல்வராஜ்.
மேலும் படிக்க `பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் - சினிமா டம்மி துப்பாக்கிகளுக்கும் இனி லைசென்ஸ்!'- நீதிமன்றம் அதிரடி